- Home
- Sports
- Sports Cricket
- Women's T20 World Cup: பாகிஸ்தானை அசால்ட்டாக போட்டுத் தள்ளிய இந்தியா! தீப்தி சர்மா, ஸ்மிருதி மந்தனா கலக்கல்!
Women's T20 World Cup: பாகிஸ்தானை அசால்ட்டாக போட்டுத் தள்ளிய இந்தியா! தீப்தி சர்மா, ஸ்மிருதி மந்தனா கலக்கல்!
Women's T20 World Cup 2026: மகளிர் டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் மாஸ் வெற்றி பெற்றது. ஸ்மிருதி மந்தனா பேட்டிங்கிலும், தீப்தி சர்மா பவுலிங்கிலும் கலக்கினார்கள்.

மகளிர் டி20 உலகக்கோப்பை; பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்தியா
மகளிர் டி20 உலகக்கோப்பை 2026 தொடர் கோலாகலமாக நடந்து வரும் நிலையில், இங்கிலாந்தின் பர்மிங்காமில் இன்று (ஜூன் 14) நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானை 64 ரன்கள் வித்தியாசத்தில் துவம்சம் செய்து மெகா வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் குவித்தது.
ஸ்மிருதி மந்தனா அதிரடி பேட்டிங்
தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா வெறும் 44 பந்துகளில் 9 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 68 ரன்கள் விளாசினார். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 36 ரன்கள் எடுத்தார். கடைசி கட்டத்தில் அதிரடியில் வெளுத்துக் கட்டிய ரிச்சா கோஷ் 17 பந்துகளில் 5 பவுண்டரி, 1 சிக்சருடன் 34 ரன்கள் நொறுக்கினார். பாகிஸ்தான் தரப்பில் சாடியா இக்பால், பாத்திமா சனா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.
தீப்தி சர்மா மேஜிக் பவுலிங்
பின்பு 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பாகிஸ்தான் அணி நமது வீராங்கனைகளின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 17 ஓவர்களில் 106 ரன்களுக்கு சுருண்டு படுதோல்வி அடைந்தது. இந்திய அணி தரப்பில் அட்டகாசமாக பந்துவீசிய மூத்த வீராங்கனை தீப்தி சர்மா தனது மேஜிக் ஸ்பின் பவுலிங்கால் 4 ஓவர்களில் 10 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்களை சாய்த்து சாதனை படைத்தார். ஸ்ரீ சரணி 4 ஓவரில் 21 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார். ஷெபாலி வர்மா 1 விக்கெட் சாய்த்தார். நமது வீராங்கனைகளில் பீல்டிங் அட்டகாசமாக இருந்தது. சூப்பர் கேட்ச்களை பிடித்து, டைரக்ட் ரன் அவுட் செய்து அசத்தினார்கள்.
ஆண்களை போல் வீராங்கனைகளும் அசத்தல்
பொதுவாக ஆண்கள் கிரிக்கெட் ஓடிஐ, டி20 உலகக்கோப்பைகளில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியே ஆதிக்கம் செலுத்தி தொடர் வெற்றிகளை பெற்று வருகிறது. இதேபோல் நமது வீராங்கனைகளும் உலகக்கோப்பை போட்டிகளில் பாகிஸ்தானை துவம்சம் செய்து அசத்தி வருகின்றனர். நடப்பு உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியிலேயே மாபெரும் வெற்றி பெற்று 2 புள்ளிகளுடன் 3.200 என்ற வலிமையான ரன் ரேட்டும் பெற்றுள்ளது. இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் ஜூன் 17ஆம் தேதி நெதர்லாந்தை எதிர்கொள்ள உள்ளது.

