- Home
- Sports
- Sports Cricket
- Women's T20 World Cup: மகளிர் டி20 உலகக்கோப்பையில் பரிசு மழை.. அட! தோற்றாலும் இத்தனை கோடிகள் கிடைக்குமா?
Women's T20 World Cup: மகளிர் டி20 உலகக்கோப்பையில் பரிசு மழை.. அட! தோற்றாலும் இத்தனை கோடிகள் கிடைக்குமா?
Women's T20 World Cup: ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை 2026 இன்று முதல் தொடங்க உள்ள நிலையில், இந்த தொடரின் பரிசுத்தொகை எவ்வளவு? சாம்பியன் அணிக்கு எவ்வளவு கிடைக்கும்? என்பது குறித்து பார்க்கலாம்.

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை 2026
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை 2026 (ICC Women's T20 World Cup) இன்று (ஜூன் 12) முதல் ஜூலை 5 வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் மைதானங்களில் கோலாகலமாக நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி இன்று இரவு 11 மணிக்கு தொடங்கும் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து, இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. கடந்த ஆண்டு சொந்த மண்ணில் 50 ஓவர் ஒருநாள் உலகக் கோப்பையை கைப்பற்றிய இந்திய மகளிர் அணி, தற்போது ஹர்மன்பிரீத் கவுர் தலைமையில் தங்களின் முதல் டி20 உலகக் கோப்பையை வெல்ல ரெடியாக உள்ளது.
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை 2026 பரிசுத்தொகை
இந்த ஆண்டு வரலாற்றிலேயே முதல் முறையாக 12 அணிகள் பங்கேற்கும் வகையில் தொடர் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பு 10 அணிகள் மட்டுமே விளையாடி வந்தன. மொத்தம் 24 நாட்கள் நடைபெறும் இத்தொடரில், 7 வெவ்வேறு மைதானங்களில் 33 விறுவிறுப்பான போட்டிகள் நடத்தப்படவுள்ளன. மகளிர் உலகக்கோப்பையில் இந்த ஆண்டுக்கான பரிசுத்தொகையை ஐசிசி வரலாறு காணாத அளவிற்கு உயர்த்தியுள்ளது.
ஐசிசியின் பரிசு மழை
அதாவது 2026 மகளிர் டி20 உலகக்கோப்பை தொடருக்காக ஐசிசி 8.76 மில்லியன் அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பில் சுமார் ரூ.73.18 கோடி) மொத்த பரிசுத்தொகையாக ஒதுக்கியுள்ளது. இது கடந்த 2024-ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) நடந்த உலகக்கோப்பையின் பரிசுத்தொகையை விட 10% அதிகமாகும். இத்தொடரில் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றும் அணிக்கு, வரலாற்றிலேயே மிக அதிகபட்சமாக 2,340,000 அமெரிக்க டாலர்கள் பரிசுத்தொகையாக வழங்கப்படவுள்ளது. இது இந்திய மதிப்பில் சுமார் ரூ.19.55 கோடி ஆகும்.
தோற்றாலும் கூட இவ்வளவு தொகை கிடைக்கும்
இறுதிப்போட்டி வரை முன்னேறி, ரன்னர்-அப் பட்டத்தைப் பெறும் அணிக்கு 1,170,000 அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.9.77 கோடி) பரிசாகக் கிடைக்கும். அரைஇறுதிப் போட்டிகளில் தோற்று வெளியேறும் இரண்டு அணிகளுக்கும் தலா 675,000 அமெரிக்க டாலர்கள் வழங்கப்படும். இதன் இந்திய மதிப்பு ஒவ்வொன்றுக்கும் சுமார் ரூ.5.64 கோடி ஆகும்.
டி20 உலகக்கோப்பை தொடரின் லீக் சுற்றுகளில் அணிகள் பெறும் ஒவ்வொரு வெற்றிக்கும் தனியாக 31,154 அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.26 லட்சம்) போனஸ் தொகையாக ஐசிசி வழங்குகிறது. இத்தொடரில் பங்கேற்கும் 12 அணிகளுக்கும், அவை லீக் சுற்றோடு வெளியேறினாலும் கூட, குறைந்தபட்ச ஊக்கத்தொகையாக தலா 247,500 அமெரிக்க டாலர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் சுமார் ரூ.2.06 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

