- Home
- Sports
- Sports Cricket
- மகளிர் உலகக்கோப்பை: பாகிஸ்தானை சுருட்டி வீசி இந்தியா அபார வெற்றி! கிராந்தி கவுட் மேஜிக் பவுலிங்!
மகளிர் உலகக்கோப்பை: பாகிஸ்தானை சுருட்டி வீசி இந்தியா அபார வெற்றி! கிராந்தி கவுட் மேஜிக் பவுலிங்!
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இந்திய மகளிர் அணி பாகிஸ்தானை பந்தாடி 88 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கிராந்தி கவுட் 3 விக்கெட் வீழ்த்தி வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்கினார்.
மகளிர் உலகக்கோப்பை: இந்தியா-பாகிஸ்தான் போட்டி
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்றது. இலங்கை தலைநகர் கொழும்புவில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 50 ஓவர்களில் 247 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
ஹர்லீன் தியோல் சிறப்பாக விளையாடி 46 ரன்கள் எடுத்து அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தார். ரிச்சா கோஷ் (35 ரன் நாட் அவுட்), ஜெமிமா ரோட்ரிக்ஸ் (32) ஆகியோரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இந்தியா அபார பவுலிங்
பாகிஸ்தான் தரப்பில் தியானா பெய்க் நான்கு விக்கெட்டுகளையும், சாதியா இக்பால் மற்றும் பாத்திமா சனா தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். பின்பு பெரிய இலக்கை துரத்திய பாகிஸ்தானுக்கு மெதுவான தொடக்கமே கிடைத்தது.
நான்காவது ஓவரிலேயே தொடக்க வீராங்கனை முனீபா அலியின் (2) விக்கெட்டை பாகிஸ்தான் இழந்தது. முனீபா ரன் அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து சக தொடக்க வீராங்கனை சதாஃப் ஷமாஸும் (6) ஆட்டமிழந்தார். அவர் கிராந்தியின் பந்தில் ரிட்டர்ன் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
அணியை மீட்ட நதாலியா பர்வைஸ் சித்ரா
அடுத்ததாக ஆலியா ரியாஸின் (2) முறை வந்தது. இந்த முறையும் கிராந்தியின் பந்தில் செகண்ட் ஸ்லிப்பில் தீப்தியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதனால் பாகிஸ்தான் 26 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. பின்பு அணியை மீட்ட நதாலியா பர்வைஸ் (33) - சித்ரா ஜோடி 69 ரன்கள் சேர்த்தது. ஆனால் பர்வைஸ் ஆட்டமிழந்ததும் பாகிஸ்தான் மீண்டும் சரிந்தது. அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்ந்தன.
இந்தியா அபார வெற்றி
பாத்திமா சனா (2), ரமீன் ஷமீம் (0), தியானா பெய்க் (9), சாதியா இக்பால் (0) ஆகியோர் இரட்டை இலக்க ரன்களை எட்ட முடியாமல் வெளியேறினார்கள். பாகிஸ்தான் அணியில் தனி ஆளாக போராடிய சித்ரா அமீன், 106 பந்துகளில் 81 ரன்கள் எடுத்தார். வெறும் 43 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த பாகிஸ்தான் அணி 159 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றியை ருசித்தது.
கிராந்தி கவுட் மேஜிக் பவுலிங்
இந்தியா தரப்பில் கிராந்தி கவுட் 10 ஓவர்களில் 20 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்தார். தீப்தி சர்மா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கிராந்தி கவுட் ஆட்டநாயகியாக தேர்வு செய்யபட்டார். இந்திய அணி விளையாடிய 2 போட்டியிலும் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.