தோனியின் கண்ணை கூட பார்க்க பயந்தோம்: கேப்டன் கூல்ன் மறு பக்கத்தை விவரித்த பத்ரிநாத்
கிரிக்கெட் உலகில் கூல் கேப்டன் என அழைக்கப்படும் மகேந்திர சிங் தோனி ஐபிஎல் தொடரின் போது தனது நிதானத்தை இழந்து வீரர்களிடம் கோபப்பட்ட கதையை சக வீரர் சுப்ரமணியம் பத்ரினாத் வெளிப்படுத்தி உள்ளார்.
பல தோல்விகளை சந்தித்து துவண்டு கிடந்த இந்திய அணிக்கு அடுத்தடுத்து டி20, ஒருநாள் உலகக்கோப்பை, சேம்பியன்ஸ் டிராபி என ஐசிசியின் 3 கோப்பைகளையும் பெற்று கொடுத்து இந்திய அணிக்கு புத்துயிர் அளித்தவர் தான் மகேந்திர சிங் தோனி. மேலும் இந்திய அணி பல இக்கட்டான சூழல்களை சந்திக்கும்போதெல்லாம் தனி ஆளாக நின்று அணியை பெற்றி பெறச் செய்துள்ளார்.
தோனி என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது அவரது பொறுமை தான். போட்டியில் எப்படிப்பட்ட இக்கட்டான சுழலிலும் தன்னுடைய நிதானத்தை இழக்காமல் அணியின் வெற்றிக்காக பாடுபடுவார். எதிரணியின் 0.01 சதவீதம் தவறு செய்தாலும் அதனை 100 சதவீதம் தனக்கு சாதகமாக பயன்படுத்தும் திறன் கொண்டவர்.
ஆனால் அப்படிப்பட்ட கூல் கேப்டனையும் கோபப்படுத்தி பார்க்கும் அதீத திறன் கொண்டவர்கள் தான் நம் அணி வீரர்கள். அந்த வகையில் சென்னை அணி சேப்பாக்கம் மைதானத்தில் பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாததால் தோனி தனது அணி வீரர்கள் மீது கடும் கோபமடைந்ததாக தமிழக வீரர் பத்ரிநாத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னை அணியின் முன்னாள் வீரர் பத்ரிநாத் கூறுகையில், தோனியும் மனிதர் தான். அவரும் சில சமயங்களில் பொறுமை இழப்பார். ஆனால் அது ஒருபோதும் ஆடுகளத்தில் நடந்தது கிடையாது. அவர் எப்போதுமே அமைதி இன்றி இருப்பதை எதிரணிக்கு வெளிப்படுத்திக் கொள்ள மாட்டார். பெங்களூரு அணிக்கு எதிரான போட்டி சென்னையில் நடைபெற்றது.
நாங்கள் அந்த போட்டியில் 110 ரன்களை ஒட்டிய இலக்கை நோக்கி ஆடிக் கொண்டு இருந்தோம். மறுபுறம் வி்கெட்டுகள் வரிசையாக வீழ்ந்து கொண்டே இருந்தன. இதனால் அந்த போட்டியில் நாங்கள் தோல்வி அடைந்தோம். நான் அனில் கும்ப்ளேவின் பந்தில் பந்தை வேகமாக அடிக்க முற்பட்டு எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினேன்.
நான் ஓய்வு அறையில் நின்று கொண்டிருந்த நிலையில், அங்கு இருந்த தண்ணீர் பாட்டிலை தோனி வேகமாக எட்டி உதைத்தார். அது உயர பறந்து கீழே விழுந்தது. அப்போது அவரது கண்களை பார்க்கக் கூட நாங்கள் பயந்தோம். ஆனால் தோனி அந்த செயலைத் தவிற ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை. அவரின் கோபத்தை நாங்கள் உணர முடிந்தது. இது தான் அவரது பாணி என்றார்.