IPL 2023: கடைசி ஓவரில் 4 சிக்ஸர்கள்; விஜய் சங்கர் சாதனை அரைசதம் அடித்து காட்டடி ஃபினிஷிங்! KKRக்கு கடின இலக்கு
ஐபிஎல் 16வது சீசனில் கேகேஆருக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி, விஜய் சங்கரின் அதிரடி அரைசதத்தால் 20 ஓவரில் 204 ரன்களை குவித்து, 205 ரன்கள் என்ற கடின இலக்கை கேகேஆருக்கு நிர்ணயித்துள்ளது.
ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இன்றைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் - கேகேஆர் அணிகள் ஆடிவருகின்றன. அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
குஜராத் டைட்டன்ஸ் அணி:
ரிதிமான் சஹா (விக்கெட் கீப்பர்), ஷுப்மன் கில், சாய் சுதர்சன், விஜய் சங்கர், டேவிட் மில்லர், ராகுல் டெவாட்டியா, அபினவ் மனோகர், ரஷீத் கான்(கேப்டன்), முகமது ஷமி, அல்ஸாரி ஜோசஃப், யஷ் தயால்.
கேகேஆர் அணி:
ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), நாராயண் ஜெகதீசன், நிதிஷ் ராணா (கேப்டன்), ரிங்கு சிங், ஆண்ட்ரே ரசல், சுனில் நரைன், ஷர்துல் தாகூர், சுயாஷ் ஷர்மா, லாக்கி ஃபெர்குசன், உமேஷ் யாதவ், வருண் சக்கரவர்த்தி.
முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க வீரர் ரிதிமான் சஹா 17 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதன்பின்னர் சாய் சுதர்சனும் ஷுப்மன் கில்லும் இணைந்து பொறுப்புடன் ஆடி 2வது விக்கெட்டுக்கு 67 ரன்கள் சேர்த்தனர். கில் 39 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அரைசதம் அடித்த சாய் சுதர்சன் 53 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 8 பந்தில் 16 ரன்கள் அடித்து அபினவ் மனோகர் ஆட்டமிழந்தார்.
டெத் ஓவர்களில் விஜய் சங்கர் அடித்து ஆடி அரைசதம் அடித்தார். லாக்கி ஃபெர்குசன் வீசிய 19வது ஒவரில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் விளாசிய விஜய் சங்கர், ஷர்துல் தாகூர் வீசிய கடைசி ஓவரில் 3 சிக்ஸர்களை விளாசினார். 21 பந்தில் அரைசதம் அடித்து, ஐபிஎல்லில் அதிவேக அரைசதம் அடித்த குஜராத் டைட்டன்ஸ் வீரர் என்ற சாதனையையும் படைத்தார். 24 பந்தில் விஜய் சங்கர் 63 ரன்களை குவிக்க, 20 ஓவரில் 204 ரன்களை குவித்த குஜராத் டைட்டன்ஸ் அணி, 205 ரன்கள் என்ற கடின இலக்கை கேகேஆருக்கு நிர்ணயித்துள்ளது.