ஒரு ஃபிட்னெஸ் டெஸ்ட்டிலும் தேறல.. இந்திய அணியில் ஆடும் வாய்ப்பை 2வது முறையாக தவறவிட்ட தமிழக வீரர்
இந்திய அணியில் ஆடும் வாய்ப்பை 2வது முறையாக தவறவிட்டுள்ளார் தமிழக வீரரான வருண் சக்கரவர்த்தி.
ஐபிஎல் 12வது சீசனுக்கான ஏலத்தில் பஞ்சாப் அணியால் ரூ.8.5 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட தமிழகத்தை சேர்ந்த ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி ஒரேயொரு போட்டியில் மட்டுமே ஆடினார். அதன்பின்னர் பஞ்சாப் அணியால் கழட்டிவிடப்பட்ட வருண் சக்கரவர்த்தியை கேகேஆர் அணி ஏலத்தில் எடுத்து முதன்மை ஸ்பின்னராக ஆடவைத்தது. அவரும் அபாரமாக வீசி விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், கேகேஆர் அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார்.
ஐபிஎல்லில் சிறப்பாக ஆடியதன் விளைவாக ஆஸி., சுற்றுப்பயணத்துக்கான இந்திய டி20 அணியில் முதல் முறையாக இடம்பெற்ற வருண் சக்கரவர்த்தி, காயம் காரணமாக அந்த வாய்ப்பை தவறவிட்டார். இதையடுத்து, இந்தியாவில் இங்கிலாந்துக்கு எதிராக நடக்கவிருக்கும் டி20 தொடருக்கான இந்திய அணியில் எடுக்கப்பட்ட வருண் சக்கரவர்த்தி, ஃபிட்னெஸ் டெஸ்ட்டில் தேறாததால், இந்த தொடரில் ஆடுவதும் சந்தேகமாகியுள்ளது.
இந்திய அணி தற்போது ஃபிட்னெஸுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. அந்தவகையில், 2 கிமீ தொலைவை 8.5 நிமிடத்தில் ஓடி முடிக்க வேண்டும் அல்லது யோ யோ டெஸ்ட்டில் 17.1 புள்ளிகளை பெற வேண்டும். ஆனால் வருண் சக்கரவர்த்தி இரண்டிலுமே தேறவில்லை. ஃபிட்னெஸ் டெஸ்ட்டில் தேறாததால், இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் வருண் சக்கரவர்த்தி இடம்பெறூவது சந்தேகமாகியுள்ளது. இந்திய அணியில் ஆடும் வாய்ப்பை 2வது முறையாக தவறவிடுகிறார் வருண் சக்கரவர்த்தி.