AUS vs SA: இரட்டை சதத்தை நெருங்கிய உஸ்மான் கவாஜா.. ஸ்மித் சதம்..! ஆஸ்திரேலியா மெகா ஸ்கோர்
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட்டில் முதலில் பேட்டிங் ஆடிவரும் ஆஸ்திரேலிய அணி, 2ம் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 475 ரன்களை குவித்துள்ளது. உஸ்மான் கவாஜா 195 ரன்களுடன் களத்தில் உள்ளார்.
தென்னாப்பிரிக்க அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் ஆடிவருகிறது. முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய அணி 2-0 என டெஸ்ட் தொடரை வென்றுவிட்ட நிலையில், 3வது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
ஆஸ்திரேலிய அணி:
டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், மேட் ரென்ஷா, அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), அஷ்டான் அகர், பாட் கம்மின்ஸ் (கேப்டன்), நேதன் லயன், ஜோஷ் ஹேசில்வுட்.
தென்னாப்பிரிக்க அணி:
டீன் எல்கர் (கேப்டன்), சாரெல் எர்வீ, ஹென்ரிச் கிளாசன், டெம்பா பவுமா, காயா ஜோண்டோ, கைல் வெரெய்ன் (விக்கெட் கீப்பர்), மார்கோ யான்சென், கேஷவ் மஹராஜ், ககிசோ ரபாடா, அன்ரிக் நோர்க்யா, சைமன் ஹார்மர்.
முதலில் பேட்டிங் ஆடிவரும் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் வெறும் 10 ரன்னுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். மற்றொரு தொடக்க வீரரான உஸ்மான் கவாஜா அபாரமாக பேட்டிங் ஆடி சதமடித்தார். அவருடன் 2வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மார்னஸ் லபுஷேன் சிறப்பாக பேட்டிங் ஆடி 79 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.
அதன்பின்னர் கவாஜாவுடன் ஜோடி சேர்ந்த ஸ்டீவ் ஸ்மித் சதமடித்தார். 104 ரன்களுக்கு ஸ்மித் ஆட்டமிழக்க, அதன்பின்னர் டிராவிஸ் ஹெட்டும் சிறப்பாக பேட்டிங் ஆடி அரைசதமடித்து 70 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
உலக கோப்பையை ரோஹித், கோலியால் மட்டும் ஜெயித்து கொடுக்க முடியாது..! இளம் வீரர்களுக்கு கபில் தேவ் அட்வைஸ்
ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து நின்று பேட்டிங் ஆடிவரும் உஸ்மான் கவாஜா இரட்டை சதத்தை நெருங்கிய நிலையில், 2ம் நாள் ஆட்டம் முடிந்தது. 2ம் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 475 ரன்களை குவித்துள்ளது. உஸ்மான் கவாஜா 195 ரன்களுடன் களத்தில் உள்ளார். 2022ம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் இருக்கும் கவாஜா, 3ம் நாளான நாளைய ஆட்டத்தில் இரட்டை சதத்தை எட்டிவிடுவார்.