உலக கோப்பையை ரோஹித், கோலியால் மட்டும் ஜெயித்து கொடுக்க முடியாது..! இளம் வீரர்களுக்கு கபில் தேவ் அட்வைஸ்
உலக கோப்பையை ரோஹித் சர்மா, விராட் கோலியால் மட்டுமே ஜெயித்து கொடுக்க முடியாது. இளம் வீரர்களும் முன்வந்து பொறுப்பை உணர்ந்து சிறப்பாக ஆட வேண்டும் என்று கபில் தேவ் அறிவுறுத்தியுள்ளார்.
கடந்த ஆண்டு ஆசிய கோப்பை, டி20 உலக கோப்பை ஆகிய 2 பெரிய ஐசிசி தொடர்களிலும் தோற்று இந்திய அணி ஏமாற்றமளித்தது. 2013ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை வென்றதற்கு பிறகு, இந்த 10 ஆண்டில் இந்திய அணி ஒரு ஐசிசி டிராபியை கூட ஜெயிக்கவில்லை.
2021ல் நடந்த டி20 உலக கோப்பையில் இந்திய அணி மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அந்த தொடரில் தோற்றது இந்திய அணி. அதன்பின்னர் ரோஹித் சர்மாவின் கேப்டன்சியில் 2022ல் ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 உலக கோப்பையை ஜெயிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிலும் அரையிறுதியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்து தொடரை விட்டு வெளியேறியது.
இந்த ஆண்டு இந்தியாவில் நடக்கவுள்ள ஒருநாள் உலக கோப்பையையும், அடுத்த ஆண்டு நடக்கவுள்ள டி20 உலக கோப்பையையும் வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் இந்திய அணி தீவிரமாக தயாராகிவருகிறது. டி20 கிரிக்கெட்டை பொறுத்தமட்டில் சீனியர் வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் பெரிதாக ஆடுவதில்லை. ஹர்திக் பாண்டியா தலைமையில் இளம் வீரர்கள் கொண்ட அணி கட்டமைக்கப்பட்டுவருகிறது. இந்திய அணி ரோஹித் சர்மா - விராட் கோலி காலக்கட்டத்தை கடந்து, எதிர்காலத்திற்கான அணியை கட்டமைக்க வேண்டிய இடத்தில் உள்ளது.
இந்நிலையில், உலக கோப்பையை இந்தியா வெல்ல வேண்டுமென்றால் ரோஹித் மற்றும் கோலியை சார்ந்திருக்கக்கூடாது. இளம் வீரர்கள் சிறப்பாக ஆட வேண்டும் என்று கபில் தேவ் கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய கபில் தேவ், உலக கோப்பையை ஜெயிக்க வேண்டுமென்றால் பயிற்சியாளர்கள், தேர்வாளர்கள் மற்றும் அணி நிர்வாகம் கடினமான முடிவுகளை எடுக்கவேண்டும். தனிப்பட்ட வீரர்களின் நலன்கள் மீது அக்கறை செலுத்தாமல் அணியின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். விராட் கோலி, ரோஹித் சர்மா உள்ளிட்ட 2-3 வீரர்கள் மட்டுமே உலக கோப்பையை வென்றுகொடுக்க வேண்டும் என்று நினைத்தால் அது நடக்காது. அணியின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். அந்த மாதிரியான அணியை நாம் பெற்றிருக்கிறோம் என்றால் கண்டிப்பாக பெற்றிருக்கிறோம். நம் அணியில் மேட்ச் வின்னர்கள் இருக்கிறார்கள். உலக கோப்பையை வென்று கொடுக்க வல்ல வீரர்கள் இந்திய அணியில் இருக்கிறார்கள்.
ஒவ்வொரு காலக்கட்டத்திலும் இந்திய அணியின் தூண்களாக 2-3 வீரர்கள் இருப்பது வழக்கம். அந்த வீரர்களை சுற்றியே அணி செயல்படும். ஆனால் அந்த 2-3 என்ற எண்ணிக்கையை 5-6 ஆக உயர்த்தவேண்டும். அணியில் 5-6 வீரர்கள் முக்கியமான வீரர்களாகவும், அணியின் தூண்களாகவும் இருக்கவேண்டும். எனவே விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவரை அதிகம் சார்ந்திருக்கக்கூடாது. ஒவ்வொரு வீரரும் அவர்களது பொறுப்பை சரியாக செய்யவேண்டும். இளம் வீரர்கள் முன்வந்து பொறுப்பை கையில் எடுத்து சிறப்பாக ஆட வேண்டும். இது நம்ம காலம் என்று உணர்ந்து சிறப்பாக ஆட வேண்டும் என்று கபில் தேவ் தெரிவித்துள்ளார்.