- Home
- Sports
- Sports Cricket
- ரியாக்ஷன் குயீன் காவ்யா மாறன் ஏமாற்றம் – பரிதாபமாக ஐபிஎல் 2025லிருந்து நடையை கட்டிய SRH!
ரியாக்ஷன் குயீன் காவ்யா மாறன் ஏமாற்றம் – பரிதாபமாக ஐபிஎல் 2025லிருந்து நடையை கட்டிய SRH!
Sunrisers Hyderabad Eliminated From IPL 2025 : மழையின் காரணமாக டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டி ரத்து செய்யப்பட்ட நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது 7 புள்ளிகள் பெற்று ஐபிஎல் 2025 தொடரிலிருந்து பரிதாபமாக வெளியேறியது.

ஐபிஎல் 2025 தொடரிலிருந்து வெளியேறிய 3ஆவது அணி
Sunrisers Hyderabad Eliminated From IPL 2025 : ஐபிஎல் 2025 சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs டெல்லி கேபிடல்ஸ்: நடப்பு ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்த மூன்றாவது அணியாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வெளியேறியுள்ளது. நேற்று நடைபெற்ற டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஹைதராபாத் அணி வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மழையின் காரணமாக டெல்லி அணியின் இன்னிங்ஸ் முடிந்த பிறகு போட்டியை மீண்டும் தொடங்க முடியவில்லை.
மழையால் ரத்து செய்யப்பட்ட போட்டி; பரிதாப நிலையில் சன்ரைசர்ஸ்
டாஸ் தோல்வியடைந்த டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்து 7 விக்கெட்டுகளுக்கு 133 ரன்கள் எடுத்தது. இந்த இலக்கை எளிதில் அடைந்து ஹைதராபாத் அணி வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் டெல்லி கேபிடல்ஸ் முதலில் பேட்டிங் செய்த பிறகு மழை பெய்யத் தொடங்கியது. கடைசி வரை மழை விடாத நிலையில் போட்டி ரத்து செயய்ப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வெற்றி பெற்றிருந்தால் பிளே ஆஃப் வாய்ப்பு
இந்த போட்டியில் வெற்றி பெற்றிருந்தால் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பு ஹைதராபாத் அணிக்கு இருந்தது. ஆனால் பேட்ஸ்மேன்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த போட்டிக்கு பிறகு 11 போட்டிகளில் 7 புள்ளிகளுடன் ஹைதராபாத் அணி லீக் பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது. மறுபுறம், 11 போட்டிகளில் 13 புள்ளிகளுடன் டெல்லி அணி 5வது இடத்தில் உள்ளது. இதனால் அக்சர் படேல் தலைமையிலான டெல்லி அணிக்கு பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பு உள்ளது.
ஹைதராபாத் அணியின் சிறப்பான பந்துவீச்சு
டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் கம்மின்ஸ் முதலில் பீல்டிங் செய்ய முடிவு செய்தார். அவர் அற்புதமாக பந்து வீசினார். 4 ஓவர்களில் 19 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜெய்தேவ் உனத்கட் 4 ஓவர்களில் 13 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டையும், ஹர்ஷல் படேல் 4 ஓவர்களில் 36 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இஷான் மலிங்கா 4 ஓவர்களில் 28 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டையும், ஜீஷான் அன்சாரி 3 ஓவர்களில் 30 ரன்களையும், அபிஷேக் சர்மா 1 ஓவரில் 5 ரன்களையும் கொடுத்தனர்.
டெல்லி அணியின் பேட்டிங் சரிவு
முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 29 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது. அப்போது 100 ரன்கள் கூட எடுக்க முடியாதோ என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் இறுதியில் 7 விக்கெட்டுகளுக்கு 133 ரன்கள் எடுத்தது. டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் அஷுதோஷ் சர்மாவின் போராட்டத்தால் டெல்லி அணியின் ஸ்கோர் 100ஐ தாண்டியது. ஸ்டப்ஸ் 36 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
அஷுதோஷ் 26 பந்துகளில் 41 ரன்கள் எடுத்தார். தொடக்க ஆட்டக்காரர் கருண் நாயர் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் பாஃப் டு பிளெசிஸ் 8 பந்துகளில் 3 ரன்கள் எடுத்தார். அபிஷேக் போரல் 10 பந்துகளில் 8 ரன்களும், கே.எல். ராகுல் 14 பந்துகளில் 10 ரன்களும், அக்சர் 7 பந்துகளில் 6 ரன்களும் எடுத்தனர். விப்ராஜ் நிகம் 17 பந்துகளில் 18 ரன்களும், மிட்செல் ஸ்டார்க் 1 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
ஐபிஎல் 2025 தொடரிலிருந்து வெளியேறிய 3ஆவது அணி:
மழையின் காரணமாக இந்த போட்டி ரத்து செய்யப்பட்ட நிலையில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டது. இதன் மூலமாக மொத்தமாக 7 புள்ளிகள் பெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து ஐபிஎல் 2025 தொடரிலிருந்து 3ஆவது அணியாக பரிதாபமாக வெளியேறியுள்ளது.
ஐபிஎல் 2024 இறுதிப் போட்டி
கடந்த சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் விளையாடிய 14 போட்டிகளில் 8 வெற்றி 4 தோல்வி மற்றும் ஒரு போட்டிக்கு முடிவு இல்லாத நிலையில் மொத்தமாக 17 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடம் பிடித்தது. மேலும், 2ஆவது தகுதி சுற்று போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. ஆனால், இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் தோல்வி அடைந்து 2ஆவது இடம் பிடித்தது.
காவ்யா மாறன் ஏமாற்றம்
நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் 2025 தொடரில் பலம் வாய்ந்த அணியாக திகழ்ந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் தனது முதல் போட்டியிலேயே 286/6 ரன்கள் குவித்தது. கடந்த சீசனில் 287/3 ரன்கள் குவித்து புதிய சாதனை படைத்தது. ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்த அணிகளின் பட்டியலில் முதல் 3 இடங்களை ஹைதராபாத் அணி பிடித்துள்ளது. முதல் போட்டியில் அணி அதிரடியாக விளையாடியதைக் கண்ட காவ்யா மாறன் இந்த தொடரில் ஏமாற்றம் அடைந்துள்ளார். முதல் போட்டியில் சதம் விளாசிய இஷான் கிஷான் அதன் பிறகு விளையாடிய எல்லா போட்டிகளில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்.