- Home
- Sports
- Sports Cricket
- Smriti Mandhana: 28 ஆண்டு கால சாதனையை முறியடித்த ஸ்மிருதி மந்தனா! மாஸ் காட்டிய சிங்க பெண்!
Smriti Mandhana: 28 ஆண்டு கால சாதனையை முறியடித்த ஸ்மிருதி மந்தனா! மாஸ் காட்டிய சிங்க பெண்!
இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, ஓடிஐ கிரிக்கெட்டில் 28 ஆண்டு கால சாதனையை முறியடித்து புதிய வரலாறு படைத்துள்ளார். ஆனால் நடப்பு உலகக்கோப்பையில் மந்தனாவின் பார்ம் மோசமாக உள்ளது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

மகளிர் உலகக் கோப்பை 2025
இந்திய மகளிர் அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா, ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் பெலிண்டா கிளார்க்கின் 28 ஆண்டு கால சாதனையை முறியடித்து, மகளிர் ஒருநாள் போட்டிகளில் ஒரு வருடத்தில் அதிக ரன்கள் எடுத்தவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இன்று விசாகப்பட்டினத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த மகளிர் உலகக் கோப்பையின் மூன்றாவது போட்டியில் ஸ்மிருதி மந்தனா 23 ரன்கள் எடுத்து கிளார்க்கின் சாதனையைத் தாண்டினார்.
வரலாற்று சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனா
எட்டாவது ஓவரின் முதல் பந்தில், அயாபோங்கா காகாவின் பந்தை கிரீஸை விட்டு வெளியே வந்து சிக்ஸருக்கு விரட்டி, வரலாற்றில் தன் பெயரைப் பொறித்தார். மந்தனா இப்போது 17 போட்டிகளில் 57.76 சராசரியுடன் 982 ரன்கள் எடுத்து முதலிடத்தில் உள்ளார். இதில் நான்கு சதங்களும் மூன்று அரைசதங்களும் அடங்கும். கிளார்க் 1997-ல் 16 போட்டிகளில் 80.83 சராசரியுடன் 970 ரன்கள் எடுத்து 28 ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்தார்.
உலகக் கோப்பையில் மோசமான பார்ம்
இன்றைய போட்டியில் பவர்பிளே முடிந்த சில நிமிடங்களில் மந்தனாவின் ஆட்டம் முடிவுக்கு வந்தது. 11-வது ஓவரில் நோன்குலுலேகோ மிலாபாவின் இரண்டாவது பந்தில் அவர் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
வரலாறு படைத்த போதிலும், சொந்த மண்ணில் நடக்கும் நடப்பு உலகக் கோப்பையில் 29 வயதான மந்தனாவின் ஃபார்ம் இந்தியாவுக்கு கவலையளிப்பதாக உள்ளது. மூன்று போட்டிகளில், அவர் 18.00 என்ற சராசரியுடன் வெறும் 54 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
ஆஸி.க்கு எதிராக அதிவேக சதம்
உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக ஸ்மிருதி மந்தனா அசுரத்தனமான பார்மில் இருந்தார். அருண் ஜேட்லி மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், மந்தனா 50 பந்துகளில் சதம் அடித்து, 50 ஓவர் வடிவத்தில் ஒரு இந்தியர் அடித்த அதிவேக சதம் என்ற புதிய சாதனையை படைத்தார்.
13 சதங்கள் அடித்த மந்தனா
413 ரன்கள் இலக்கை துரத்தியபோது, மந்தனா ஒரு பேட்டிங் மாஸ்டர்கிளாஸை வெளிப்படுத்தி, 50 பந்துகளில் இந்த மைல்கல்லை எட்டி மூனியின் சாதனையை முறியடித்தார். இது ஒரு இந்தியரின் அதிவேக சதமாகும், மேலும் ஒட்டுமொத்தமாக, 2012-ல் நியூசிலாந்துக்கு எதிராக 45 பந்துகளில் சதம் அடித்த ஆஸ்திரேலியாவின் மெக் லானிங்கிற்குப் பிறகு இரண்டாவது அதிவேக சதமாகும். மேலும் இந்த ஆண்டில் மந்தனாவின் நான்காவது சதம் இதுவாகும். மந்தனா 13 ஒருநாள் சதங்களை அடித்துள்ளார்.