இந்தியா vs பாகிஸ்தான் உலகக்கோப்பை போட்டியில் கிரிக்கெட் வர்ணனையாளராக களமிறங்கிய சிவகார்த்திகேயன்
இந்தியா - பாகிஸ்தான் போட்டியின் மூலம் நடிகர் சிவகார்த்திகேயன் கிரிக்கெட் வர்ணனையாளராகவும் அவதாரம் எடுத்துள்ளார்.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் கடந்த ஒரு வாரமாக நடந்த தகுதிச்சுற்று போட்டிகளின் முடிவில் இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து, ஜிம்பாப்வே ஆகிய அணிகள் தேர்வாகி இருந்தன. இதில் அதிர்ச்சிகரமான விஷயம் என்னவென்றால் இருமுறை உலகக்கோப்பை வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி அடுத்த சுற்றுக்கு தேர்வாகாமல் வெளியேறியது.
உலகக்கோப்பை தொடரின் அடுத்த கட்டமான சூப்பர் 12 போட்டிகள் நேற்று முதல் தொடங்கியது. முதலில் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் ஆஸ்திரேலியா அணியை 89 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. அதேபோல் இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து - ஆப்கானிஸ்தான் மோதின. அதில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இதையும் படியுங்கள்... டி20 உலக கோப்பை: பாகிஸ்தானுக்கு எதிராக டாஸ் வென்ற இந்தியா கேப்டன் ரோஹித்.! நட்சத்திர வீரருக்கு இடம் இல்லை
இந்நிலையில், இன்றைய சூப்பர் 12 போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்து சிறப்பாக பவுலிங் செய்தது. பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாமை டக் அவுட் செய்து அசத்தினார் அர்ஷ்தீப் சிங். அதேபோல் முகமது ரிஸ்வானும் அர்ஷ்தீப் பந்தில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து நடையைகட்டினார்.
இந்த போட்டியின் மூலம் நடிகர் சிவகார்த்திகேயன் கிரிக்கெட் வர்ணனையாளராகவும் அவதாரம் எடுத்துள்ளார். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழில் இந்தியா - பாகிஸ்தான் போட்டியை ஆர்.ஜே.பாலாஜி உடன் இணைந்து வர்ணனை செய்து அசத்தினார். இதில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் என்னவென்றால், சிவகார்த்திகேயன் தனக்கு பாபர் அசாம் மற்றும் ரிஸ்வான் ஆகியோர் தனக்கு மிகவும் பிடிக்கும் என சொன்னதும் இருவருமே ஆட்டமிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... 2023 ஆசிய கோப்பையில் ஆட பாகிஸ்தானுக்கு இந்திய அணி செல்லாது - ஜெய் ஷா..! மௌனம் கலைத்த கேப்டன் ரோஹித் சர்மா