- Home
- Sports
- Sports Cricket
- இங்கிலாந்து வீரர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது ஏன்? என்ன நடந்தது? ஓபனாக பேசிய சுப்மன் கில்!
இங்கிலாந்து வீரர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது ஏன்? என்ன நடந்தது? ஓபனாக பேசிய சுப்மன் கில்!
இங்கிலாந்து வீரர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது ஏன்? என்பது குறித்து இந்திய கேப்டன் சுப்மன் கில் மனம்திறந்து பேசியுள்ளார்.

Shubman Gill Explains His Argument With Zak Crowley
இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசி வரை பரபரப்பாக நடந்த இந்த போட்டியில் இந்திய அணி இறுதி வரை போராடி தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் இரு அணிகளும் முதல் இன்னிங்சில் 387 ரன்கள் எடுத்தன. பின்பு இங்கிலாந்து 2வது இன்னிங்சில் 192 ரன்களுக்கு ஆல் அவுட்டாக இலக்கை துரத்திய இந்திய அணி தோல்வியை சந்தித்தது.
தோல்வி குறித்து பேசிய சுப்மன் கில்
இந்த ஆட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சுப்மன் கில், ''டெஸ்ட் கிரிக்கெட் இந்த அளவு பரபரப்பாக இருந்தது பெருமையாக இருக்கிறது. டாப் ஆர்டரில் எங்களுக்கு இரண்டு பார்ட்னர்ஷிப்கள் தேவைப்பட்டன. ஆனால் எங்களால் அதைச் செய்ய முடியவில்லை. இங்கிலாந்து எங்களை விட சிறப்பாக விளையாடினார்கள்.
இலக்கு பெரிதாக இல்லாதபோது ஒரிரு பார்ட்னர்ஷிப் அமைந்திருந்தால் முடிவு மாறியிருக்கும். ஜடேஜா மிகவும் சிறப்பாக தனது அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ரிஷப் பண்ட்டின் ரன் அவுட் முதல் இன்னிங்சில் முன்னிலை பெறுவதற்கு தடையாக அமைந்து விட்டது'' என்றார்.
சாக் க்ரொலியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது ஏன்?
இந்த டெஸ்ட்டில் இங்கிலாந்து வீரர் சாக் க்ரொலியுடன் சுப்மன் கில் மற்றும் பிற இந்திய வீரர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டது குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்த சுப்மன் கில், ''நாங்கள் களத்தில் எங்கள் முழு திறமையையும் வெளிப்படுத்துகிறோம். மனதளவிலும், உடல் அளவிலும் இரு அணிகளும் போட்டியை வெல்ல முயற்சி செய்கிறோம்.
இதுபோன்ற சமயங்களில் இரு தரப்பிலும் ஒரு சிறிய மோதல் ஏற்படுவது பெரிய விஷயமல்ல. இதுதான் விளையாட்டை மேலும் சுவாரஸ்யமாக்குகிறது சவாலானதாக்குகிறது. அடுத்த முறை நாங்கள் மோதும்போது, எதுவும் எளிதாக இருக்காது என்று எங்களுக்குத் தெரியும்'' என்று தெரிவித்தார்.
மரியாதை இருக்கிறது
''போட்டியை வென்று சிறப்பாகச் செயல்பட இரு அணிகளும் தங்களால் இயன்றதைச் செய்கின்றன. சில நேரங்களில் கொஞ்சம் உற்சாகம் இருக்கக்கூடிய தருணங்கள் இருக்க வேண்டும், நீங்கள் உங்களால் முடிந்ததைச் செய்ய முயற்சிக்கிறீர்கள். அது கிரிக்கெட் விளையாட்டில் நடக்கலாம். ஆனால் இதுதான் அதை மிகவும் உற்சாகப்படுத்துகிறது. நாள் முடிவில் இரு அணிகளுக்கும் இடையே நிறைய மரியாதை இருக்கிறது'' என்று சுப்மன் கில் மேலும் கூறினார்.
3ம் நாள் ஆட்டத்தில் என்ன நடந்தது?
இந்த டெஸ்ட் போட்டியின் 3ம் நாளில் சுப்மன் கில்லுக்கும், இங்கிலாந்து பேட்ஸ்மேன் சாக் க்ரொலிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த நாளில் இங்கிலாந்து பேட்டிங் செய்ய வரும்போது ஆட்டம் முடிய 6 நிமிடங்கள் இருந்தது. இதில் 2 ஓவர்கள் வீசி விட முடியும். முதல் ஓவரை ஜஸ்பிரித் பும்ரா வீசினார். இதில் முதல் இரண்டு பந்துகளை எதிர்கொண்ட சாக் க்ரொலி 3வது பந்தை எதிர்கொள்ளாமல் நேரம் கடத்துவதில் ஈடுபட்டார். அதாவது தனக்கு எதிரே பவுலரின் பின்னால் ஏதோ அசைவு இருப்பதாக கூறி பந்தை எதிர்கொள்ள தவிர்த்தார்.
நேரம் கடத்திய சாக் க்ரொலி
ஆனால் அவர் கூறியது போல் எந்த அசைவும் இல்லாததால் ஆத்திரமடைந்த சுப்மன் கில், ''யாரும் இல்லை! தைரியம் இருந்தால் ப்ந்துகளை எதிர்கொள்'' என்று சாக் க்ரொலியிடம் கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த பிரச்சனை முடிந்து அடுத்த பந்தை பந்தை சாக் க்ரொலி சந்தித்தபோது பந்து அவரது க்ளவுசை தாக்கியது.
இதனால் அவர் விரல் வலிப்பதாக கூறி அணியின் பிசியோவை உடனே வரவழைத்தார். பிசியோவும் உடனே வந்து அவரது கைக்கு ஸ்பிரோ ஏதும் அடிக்காமல் சென்றார். இந்திய அணி 2வது ஓவர் வீசி விடக்கூடாது என்பதற்காக சாக் க்ரொலி வேண்டுமென்றே நேரம் கடத்தியது தெரியவந்தது.
இந்திய அணி வீரர்கள் கிண்டல்
இதனால் கோபம் அடைந்த சுப்மன் கில் மீண்டும் அவருடனும், பென் டக்கெட்டிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்பு சாக் க்ரொலி பெவிலியனுக்கு திரும்பியபோது, இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் உள்ளிட்ட வீரர்கள், ''ப்ந்துகளை எதிர்கொள்ள பயந்து விட்டீர்களா?'' என்பதுபோல் அவரை கிண்டல் செய்தனர். இந்த விவகாரத்தில் சுப்மன் கில்லுக்கு ஆதரவாக ஒரு சிலரும், எதிராக ஒரு சிலரும் கருத்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.