- Home
- Sports
- Sports Cricket
- மனசுல கோலின்னு நினைப்பு! சுப்மன் கில்லை விமர்சித்த முன்னாள் வீரர்! அனில் கும்பிளே பதிலடி!
மனசுல கோலின்னு நினைப்பு! சுப்மன் கில்லை விமர்சித்த முன்னாள் வீரர்! அனில் கும்பிளே பதிலடி!
இந்திய கேப்டன் சுப்மன் கில்லை விமர்சித்த ஜோனாதன் ட்ராட்க்கு அனில் கும்பிளே பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

Jonathan Trott criticizes Shubman Gill
இந்தியா-இங்கிலாந்து இடையிலான 3வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 387 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியும் தனது முதல் இன்னிங்சில் 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
பின்னர் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி நேற்றைய 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் 2/0 என்ற நிலையில் இருந்தது. நேற்று ஆட்டம் முடியும் நேரத்தில் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில்லுக்கும், இங்கிலாந்து பேட்ஸ்மேன் சாக் க்ரொலிக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் பேசுபொருளாகியுள்ளது.
சாக் க்ரொலி செய்த செயல்
அதாவது இங்கிலாந்து பேட்டிங் செய்ய வரும்போது ஆட்டம் முடிய 6 நிமிடங்கள் இருந்தது. இதில் 2 ஓவர்கள் வீசி விட முடியும். முதல் ஓவரை ஜஸ்பிரித் பும்ரா வீசினார். இதில் முதல் இரண்டு பந்துகளை எதிர்கொண்ட சாக் க்ரொலி 3வது பந்தை எதிர்கொள்ளாமல் நேரம் கடத்துவதில் ஈடுபட்டார். அதாவது தனக்கு எதிரே பவுலரின் பின்னால் ஏதோ அசைவு இருப்பதாகவும், இதனால் கவனச்சிதறல் ஏற்படுவதாகவும் கூறி பந்தை எதிர்கொள்ளாமல் ஸ்டெம்பில் இருந்து விலகிச் சென்றார்.
சுப்மன் கில் வாக்குவாதம்
ஆனால் அவர் கூறியது போல் எந்த அசைவும் இல்லாததால் ஆத்திரமடைந்த சுப்மன் கில், ''யாரும் இல்லை! தைரியம் இருந்தால் ப்ந்துகளை எதிர்கொள்'' என்று சாக் க்ரொலியிடம் கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த பிரச்சனை முடிந்து அடுத்த பந்தை பந்தை சாக் க்ரொலி சந்தித்தபோது பந்து அவரது க்ளவுசை தாக்கியது.
இதனால் அவர் விரல் வலிப்பதாக கூறி அணியின் பிசியோவை உடனே வரவழைத்தார். பிசியோவும் உடனே வந்து அவரது கைக்கு ஸ்பிரோ ஏதும் அடிக்காமல் சென்றார். இந்திய அணி 2வது ஓவர் வீசி விடக்கூடாது என்பதற்காக சாக் க்ரொலி வேண்டுமென்றே நேரம் கடத்தியது அப்பட்டமாக தெரிந்தது.
நாடகம் என கூறிய கே.எல்.ராகுல்
இதனால் கோபம் அடைந்த சுப்மன் கில் மீண்டும் அவருடனும், பென் டக்கெட்டிடமும் வாகுவாதத்தில் ஈடுபட்டார். கே.எல். ராகுல் பென் டக்கெட்டிடம், ''6 நிமிடங்களில் இரண்டு ஓவர்கள் என்பது சாதாரண விஷயம். ஆனால் என்ன நடந்தது என்பது எனக்கும் தெரியும். அனைவருக்கும் தெரியும். இது நாடகம்'' என்று தெரிவித்தார். க்ரொலியின் தாமதத்தால் ஒரு ஓவருடன் நேற்றைய நாள் முடித்துக் கொள்ளப்பட்டது.
கிண்டல் செய்த இந்திய வீரர்கள்
பின்பு சாக் க்ரொலி பெவிலியனுக்கு திரும்பியபோது, இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் உள்ளிட்ட வீரர்கள், ''ப்ந்துகளை எதிர்கொள்ள பயந்து விட்டீர்களா?'' என்பதுபோல் சாக் க்ரொலியை கிண்டல் செய்தனர். சாக் க்ரொலி வேண்டுமென்றே நேரம் கடத்தியதாக இந்திய முன்னாள் வீரர்கள் மட்டுமின்றி, இங்கிலாந்து முன்னாள் வீரர்கள் பலரும் தெரிவித்தனர். அதே வேளையில் சுப்மன்கில் சாக் க்ரொலியிடம் கைநீட்டி பேசியது சரியல்ல என்றும் பலரும் தெரிவித்தனர்.
கில்லுக்கு ட்ராட் கண்டனம்
இந்நிலையில், இங்கிலாந்து முன்னாள் வீரர் ஜோனாதன் ட்ராட், ''களத்தில் என்ன நடந்தது? என்பது நமக்கு தெரியாது. கிரிக்கெட்டில் இதுபோன்று நடக்கும். ஆனால் சுப்மன் கில் எதிரணி வீரர்களிடம் விரல்களை நீட்டுவதும், நேருக்கு நேர் சண்டையிடுவதும், ஒரு முந்தைய கேப்டனைப் போலவே (விராட் கோலி) எதிரணி வீரரின் முகத்திற்கு அருகில் சென்று பேசுவது சரியாக இருக்காது. ஒரு கேப்டனாக, நீங்கள் சரியான அணுகுமுறையை அமைத்துக் கொடுக்க வேண்டியது அவசியம்'' என்று தெரிவித்தார்.
அனில் கும்பிளே பதிலடி
சுப்மன் கில்லை விமர்சித்த டிராட்டுக்கு இந்திய முன்னாள் வீரர் அனில் கும்பிளே பதிலடி கொடுத்துள்ளார். ''இங்கிலாந்து அணி ஒரு ஓவரை கூட எதிர்கொள்ள விரும்பாதது ஏன்? எதிரணி வீரர்கள் வார்த்தை மோதலில் ஈடுபடுவது போன்று விளையாட்டில் இதுபோல் நடப்பது சகஜம்'' என்று கூறியுள்ளார்.

