- Home
- Sports
- Sports Cricket
- India vs England 3rd Test: ஒன்றல்ல, இரண்டல்ல 8 சாதனைகளை முறியடிக்கப் போகும் சுப்மன் கில்!
India vs England 3rd Test: ஒன்றல்ல, இரண்டல்ல 8 சாதனைகளை முறியடிக்கப் போகும் சுப்மன் கில்!
இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட்டில் சுப்மன் கில் டான் பிராட்மேன் சாதனை உள்பட 8 சாதனைகளை முறியடிக்க வாய்ப்புள்ளது.

Shubman Gill Has Chance To Break Don Bradman's Record
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. இதில் லீட்ஸில் நடந்த முதல் போட்டியில் இங்கிலாந்து அணியும், பர்மிங்காமில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்றன. இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியுள்ளது.
சுப்மன் கில் 8 சாதனைகளை முறியடிக்க வாய்ப்பு
இந்த டெஸ்ட்டில் இந்திய அணி வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. லீட்ஸீல் நடந்த முதல் டெஸ்ட்டில் சதம் விளாசிய அவர், 2வது டெஸ்ட்டில் முதல் இன்னிங்சில் இரட்டை சதம், 2வது இன்னிங்சில் சதம் அடித்து அனைவரையும் பிரம்மிக்க வைத்தார். இந்நிலையில், கில் 3வது டெஸ்ட்டில் 8 சாதனைகளை முறியடிக்க வாய்ப்புள்ளது.
டான் பிராட்மேன் சாதனையை தகர்க்க வாய்ப்பு
கிரிக்கெட் ஜாம்பவான் டான் பிராட்மேன் 1936-37 ஆஷஸ் தொடரில் கேப்டனாக 810 ரன்கள் குவித்தார். சுப்மன் கில் இப்போது வரை இரண்டு டெஸ்டில் 585 ரன்கள் எடுத்துள்ளார். இன்னும் அவர் மீதமுள்ள மூன்று டெஸ்டுகளில் 225 ரன்கள் எடுத்தால், பிராட்மேனின் சாதனையை எளிதில் முறியடிப்பார்.
மேலும் பிராட்மேன் ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் (974 ரன்கள்) குவித்த சாதனையை தன்வசம் வைத்துள்ளார். 1930 ஆஷஸ் தொடரில் இந்த ரன்களை குவித்தார். சுப்மன் கில் இந்தத் தொடரில் இன்னும் 390 ரன்கள் சேர்த்தால் இந்த மிகப்பெரிய சாதனையை உடைத்து எறியலாம்.
இன்னும் ஒரு சதம் அடித்தால் பெரும் சாதனை
டான் பிராட்மேன் கேப்டனாக 11 இன்னிங்ஸ்களில் 1,000 டெஸ்ட் ரன்களை எட்டினார். சுப்மன் கில் தற்போது வரை 4 இன்னிங்ஸ்களில் 585 ரன்கள் எடுத்துள்ளார். மீதமுள்ள 6 இன்னிங்ஸ்களில் 415 ரன்கள் எடுத்தால் இந்த சாதனையையும் கில் முறியடிக்க அதிக வாய்ப்புள்ளது.
ஒரு டெஸ்ட் தொடரில் அதிக சதங்கள் அடித்தவராக மேற்கிந்தியத் தீவுகள் வீரர் கிளைட் வால்காட் 1955 இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு தொடரில் 5 சதங்கள் அடித்தார்.
டான் பிராட்மேன் கேப்டனாக 1947 இல் இந்தியாவுக்கு எதிராக ஒரு தொடரில் 4 சதங்கள் அடித்தார். இங்கிலாந்து தொடரில் தற்போது வரை 3 சதங்கள் அடித்துள்ள கில், இன்னும் ஒரு சதம் அடித்தால் பிராட்மேன் சாதனையையும், கிளைட் வால்காட் சாதனையையும் முறியடிப்பார்.
சுனில் கவாஸ்கரின் சாதனையும் பக்கம் தான்
இந்திய கேப்டனாக ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் குவித்தவராக சுனில் கவாஸ்கர் உள்ளார். அவர் 1978-79 தொடரில் 732 ரன்கள் எடுத்திருந்தார். சுப்மன் கில் இன்னும் 148 ரன்கள் எடுத்தால் இந்த சாதனையை உடைக்கலாம். இது தவிர இங்கிலாந்து மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் அதிகபட்ச ரன்கள் (2002 இல் 602 ரன்கள்) எடுத்த இந்திய வீரராக ராகுல் டிராவிட் இருக்கிறார். தற்போது 585 ரன்கள் எடுத்துள்ல சுப்மன் கில்இன்னும் 18 ரன்கள் எடுத்தால் டிராவிட் சாதனையை முறியடிப்பார்.
விராட் கோலியையும் தாண்ட வாய்ப்பு
இங்கிலாந்துக்கு எதிராக ஒரு தொடரில் இந்திய வீரர் எடுத்த அதிகபட்ச ரன்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால் வசமுள்ளது (712 ரன்கள்). சுப்மன் கில் தற்போது 585 ரன்கள் எடுத்துள்ளதால், இன்னும் 127 ரன்கள் எடுத்தால் ஜெய்ஸ்வால் சாதனையை முறியடிப்பார். இதேபோல் இந்திய கேப்டனாக இங்கிலாந்துக்கு எதிராக அதிக ரன்கள் (655 ரன்கள்) எடுத்த விராட் கோலியின் சாதனையையும் சுப்மன் கில்லால் முறியடிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.