- Home
- Sports
- Sports Cricket
- பிசிசிஐ ஒப்பந்தத்தை மீறிய சுப்மன் கில்! வெற்றி கேப்டனுக்கு எழுந்த சிக்கல்! என்ன நடந்தது?
பிசிசிஐ ஒப்பந்தத்தை மீறிய சுப்மன் கில்! வெற்றி கேப்டனுக்கு எழுந்த சிக்கல்! என்ன நடந்தது?
இந்திய அணியின் கிட் ஸ்பான்சராக அடீடாஸ் இருக்கும் நிலையில், சுப்மன் கில் நைக் பிராண்ட் வெஸ்ட்டை அணிந்து சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

Shubman Gill Gets Controversy For Wearing Nike Brand Vest
பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 337 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் 608 என்ற இமாலய இலக்குடன் ஆடிய இங்கிலாந்து அணி 68 ஓவரில் 271 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் இந்திய அணி இமாலய வெற்றியை ருசித்ததுடன் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் முதன் முறையாக வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.
சுப்மன் கில் ஆட்டநாயகன்
மற்ற வீரர்களுக்கு முன்மாதிரியாக விளங்கிய இந்திய கேப்டன் சுப்மன் கில் முதல் இன்னிங்சில் இரட்டை சதம் (269 ரன்கள்), 2வது இன்னிங்சில் சதம் (161 ரன்) விளாசி ஆட்டநாயகன் விருது வென்றார். முதன்முறையாக எட்ஜ்பாஸ்டனில் இந்திய அணியை வெற்றி பெற வைத்து முன்னாள் கேப்டன்கள் கங்குலி, தோனி, விராட் கோலி செய்யாத சாதனையை சுப்மன் கில் செய்துள்ளார். இதனால் சுப்மன் கில்லை பலரும் பாராட்டி வரும் நிலையில், அவர் திடீரென ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
சர்ச்சையில் சிக்கிய சுப்மன் கில்
அதாவது 2வது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாளில் இந்திய அணியின் இரண்டாவது இன்னிங்ஸை டிக்ளேர் செய்வது குறித்து சுப்மன் கில் அறிவித்தார். களத்துக்கு உள்ளே இருந்த வீரர்களை பெவிலியன் திரும்பும்படி கூறினார். அப்போது சுப்மன் கில் ஒரு நைக் (Nike) பிராண்ட் வெஸ்ட்டை அணிந்திருந்தார். இதுதான் இப்போது பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.
இந்திய அணியின் கிட் ஸ்பான்சர் அடீடாஸ்
2023 முதல் 2028 வரை பிசிசிஐ (BCCI) உடன் 5 வருட ஒப்பந்தத்தில் அதிகாரப்பூர்வ கிட் ஸ்பான்சராக அடீடாஸ் (Adidas) உள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, இந்திய அணியின் அனைத்து வகையான உடைகளிலும் அடீடாஸின் லோகோ இருக்க வேண்டும். ஆனால் சுப்மன் கில் ஒரு நைக் (Nike) பிராண்ட் வெஸ்ட்டை அணிந்திருந்ததன் மூலம் பிசிசிஐ ஒப்பந்தத்தை மீறியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நைக் பிராண்ட்டை பொறுத்தவரை அது அடீடாஸின் நேரடி போட்டி நிறுவனமாக உள்ளது.
சுப்மன் கில் ஒப்பந்த விதிமீறல்
இதனால் தான் சுப்மன் கில் நைக் வெஸ்ட்டை அணிந்தது ஒப்பந்த விதிமீறல் என்று சமூக வலைத்தளங்களில் பல ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அடீடாஸ் நிறுவனம் இந்த விவகாரம் குறித்து பிசிசிஐக்கு எச்சரிக்கை கடிதம் அனுப்பியதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. சுப்மன் கில்லின் செயல் தனிப்பட்ட ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தங்கள் காரணமாக ஏற்பட்டதா அல்லது பிசிசிஐயின் ஸ்பான்சர் ஒப்பந்தத்தில் உள்ள தெளிவின்மையா என்பது குறித்த கேள்விகளும் எழுந்துள்ளன.
கங்குலியும் இதே சர்ச்சையில் சிக்கினார்
கடந்த 2006-07 இல் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி இதேபோன்ற ஒரு சர்ச்சையில் சிக்கியதால் அபராதம் விதிக்கப்பட்டது. அதாவது நைக் இந்திய அணியின் கிட் ஸ்பான்சராக இருந்தபோது பூமா தலைக்கவசத்தை அணிந்ததற்காக கங்குலிக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
இதேபோல் சுப்மன் கில்லுக்கும் அபராதம் விதிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. 2வது டெஸ்ட்டில் சுப்மன் கில் பேட்டிங்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பல சாதனைகளை படைத்திருந்தாலும், இந்த சர்ச்சையும் அவர் வசம் சேர்ந்துள்ளது.