IPL 2023:ஷர்துல் தாகூர் சாதனை அரைசதம்; ரிங்கு சிங் அதிரடி பேட்டிங்! ஆர்சிபிக்கு கடின இலக்கை நிர்ணயித்த கேகேஆர்
ஐபிஎல் 16வது சீசனில் ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய கேகேஆர் அணி, ஷர்துல் தாகூரின் சாதனை அரைசதத்தால் 20 ஓவரில் 204 ரன்களை குவித்து, 205 ரன்கள் என்ற கடின இலக்கை ஆர்சிபிக்கு நிர்ணயித்துள்ளது.
ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. முதல் போட்டியில் தோற்ற கேகேஆரும், முதல் போட்டியில் வெற்றி பெற்ற ஆர்சிபி அணியும் இன்றைய போட்டியில் ஆடிவருகின்றன. கொல்கத்தா ஈடன் கார்டனில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் டுப்ளெசிஸ் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
ஆர்சிபி அணி:
விராட் கோலி, ஃபாஃப் டுப்ளெசிஸ் (கேப்டன்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), க்ளென் மேக்ஸ்வெல், மைக்கேல் பிரேஸ்வெல், ஷபாஸ் அகமது, டேவிட் வில்லி, கரன் ஷர்மா, ஆகாஷ் தீப், முகமது சிராஜ்.
கேகேஆர் அணி:
மந்தீப் சிங், ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), நிதிஷ் ராணா (கேப்டன்), ரிங்கு சிங், ஆண்ட்ரே ரசல், ஷர்துல் தாகூர், சுனில் நரைன், சுயாஷ் ஷர்மா, டிம் சௌதி, உமேஷ் யாதவ், வருண் சக்கரவர்த்தி.
முதலில் பேட்டிங் ஆடிய கேகேஆர் அணியின் தொடக்க வீரர்களாக ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஆகிய இருவரும் களமிறங்கினர். வெங்கடேஷ் ஐயரை 3 ரன்களுக்கு வீழ்த்திய டேவிட் வில்லி, அடுத்த பந்திலேயே மந்தீப் சிங்கை வீழ்த்தினார். கேப்டன் நிதிஷ் ராணா ஒரு ரன்னுக்கு நடையை கட்ட, ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தலும், மறுமுனையில் நிலைத்து ஆடி அரைசதம் அடித்த தொடக்க வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் 57 ரன்களுக்கு வெளியேறினார்.
அதன்பின்னர் ஆண்ட்ரே ரசல் முதல் பந்திலேயே டக் அவுட்டாக, அதன்பின்னர் களமிறங்கிய ஷர்துல் தாகூர் பவுண்டரியும் சிக்ஸருமாக ஆர்சிபி பவுலிங்கை அடித்து ஆடி 20 பந்தில் அரைசதம் அடித்தார். அதிரடியாக ஆடி 29 பந்தில் 9 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 68 ரன்களை குவிக்க, அவருடன் இணைந்து அபாரமாக ஆடிய ரிங்கு சிங் 33 பந்தில் 46 ரன்கள் அடித்தார். ஐபிஎல்லில் 7ம் வரிசையில் இறங்கி அதிக ரன்களை குவித்த வீரர்கள் பட்டியலில் 2ம் இடத்தை ட்வைன் பிராவோவுடன் பகிர்ந்த ஷர்துல் தாகூரின் சாதனை அரைசதத்தால் 20 ஓவரில் 204 ரன்களை குவித்த கேகேஆர் அணி, 205 ரன்கள் என்ற கடின இலக்கை ஆர்சிபிக்கு நிர்ணயித்துள்ளது.