புஜாராவை அவுட்டாக்கியது நேதன் லயன் இல்ல; ரோஹித் சர்மா தான்..! இந்தியா தோற்றால் நீங்கதான் காரணம் ரோஹித்
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3வது டெஸ்ட்டின் 2வது இன்னிங்ஸில் அனைத்து வீரர்களும் மளமளவென ஆட்டமிழந்த நிலையில், நிலைத்து நின்று தனி நபராக போராடி அரைசதம் அடித்து அணியின் மானத்தை ஓரளவிற்கு காப்பாற்றிய புஜாரா 59 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவர் இன்னும் கூடுதலாக ரன் அடித்திருக்கக்கூடும். ஆனால் கேப்டன் ரோஹித் சர்மா அவர் மீது போட்ட அழுத்தம் தான் புஜாரா அவுட்டாக காரணம் என்று ரோஹித் விமர்சிக்கப்படுகிறார்.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையே இந்தூரில் நடந்துவரும் 3வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி வெறும் 109 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அறிமுக ஸ்பின்னர் குன்னெமனின் (5 விக்கெட்) சுழலில் சுருண்ட இந்திய அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 109 ரன்கள் மட்டுமே அடித்தது.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி 197 ரன்கள் அடித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக உஸ்மான் கவாஜா 60 ரன்கள் அடித்தார். இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக ஜடேஜா 4 விக்கெட்டுகளும், அஷ்வின் மற்றும் உமேஷ் யாதவ் ஆகிய இருவரும் தலா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
88 ரன்கள் பின் தங்கிய நிலையில், 2வது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி வீரர்கள் நேதன் லயன் சுழலில் மண்டியிட்டு சரணடைந்தனர். ரோஹித் சர்மா(12), கில்(5), கோலி(13), ஜடேஜா(7) ஆகியோர் சொற்ப ரன்களுக்கு மளமளவென ஆட்டமிழந்தனர். 5வது விக்கெட்டுக்கு புஜாராவுடன் ஜோடி சேர்ந்த ஷ்ரேயாஸ் ஐயர் அடித்து ஆடி 27 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் விளாசி நம்பிக்கையளித்த நிலையில் அவரும் 26 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கேஎஸ் பரத்(3), அஷ்வின்(16) ஆகியோரும் சோபிக்கவில்லை. நேதன் லயனின் சுழலில் இந்திய வீரர்கள் மளமளவென ஆட்டமிழந்தனர்.
ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து நின்று தனி நபராக போராடி அரைசதம் அடித்த புஜாரா 59 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அக்ஸர் படேல் 15 ரன்கள் அடிக்க, 2வது இன்னிங்ஸில் 163 ரன்களுக்கு ஆல் அவுட்டானது இந்திய அணி.
புஜாரா ஒருமுனையில் நிலைத்து நின்று பொறுப்புடன் ஆடிவந்த நிலையில், அவரை அடித்து ஆட சொல்லி கேப்டன் ரோஹித் சர்மா அழுத்தம் போட, அதன்படி ஒரு சிக்ஸரும் அடித்த புஜாரா, அதிலிருந்து அமைதியை இழந்த புஜாரா 59 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். புஜாரா பொதுவாகவே நிதானமாக ஆடி அணியை இக்கட்டான சூழலிலிருந்து காப்பாற்றும் வீரர். அவரது இயல்பான ஆட்டமே தடுப்பாட்டம் தான். அவர் சிக்ஸர் அடித்து ஆடும் வீரரும் அல்ல. இந்திய அணியும் அப்படியான வசதியான நிலையில் இல்லை. அப்படி இருக்கும்போது, அடித்து ஆடுமாறு இஷான் கிஷனிடம் செய்தி சொல்லி அனுப்பினார் கேப்டன் ரோஹித் சர்மா. அதை ஏற்று புஜாராவும் ஒரு சிக்ஸர் விளாசினார். ஆனால் ரோஹித் அனுப்பிய மெசேஜுக்கு பிறகு அவரது ஆட்டத்தில் ஒரு அவசரம் தெரிந்தது. அதன்விளைவாக அவர் நிதானமான மனநிலையில் அவரது இயல்பான ஆட்டத்தை ஆடமுடியாமல் அவசரகதியில் ஆடமுயன்று ஆட்டமிழந்தார்.
அதன்விளைவாக இந்திய அணி 163 ரன்களுக்கு 2வது இன்னிங்ஸில் ஆல் அவுட்டானது. வெறும் 75 ரன்கள் மட்டுமே இந்திய அணி முன்னிலை பெற்று, 76 ரன்கள் என்ற மிக எளிய இலக்கை ஆஸ்திரேலியாவிற்கு நிர்ணயித்துள்ளது. புஜாரா மீது அழுத்தம் போடாமல் இருந்திருந்தால் அவர் இன்னும் கொஞ்சம் ஸ்கோர் செய்திருந்தால் ஆஸ்திரேலிய அணிக்கு சவாலான இலக்கை நிர்ணயித்திருக்கலாம் என்பதால் ரோஹித் சர்மா கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளார்.