முடிவுக்கு வரும் ஆர்சியின் கேஜிஎஃப் (Kohli, Glenn, Faf) சகாப்தம் – மேக்ஸ்வேல், டூப்ளெசிஸ் விடுவிக்க வாய்ப்பு!
RCB Released Players List, IPL 2025: ஐபிஎல் தொடரில் பல ஜாம்பவான் வீரர்களைக் கொண்டிருந்தும் ஆர்சிபி அணி இதுவரை கோப்பையை வெல்ல முடியாமல் தவிக்கிறது. 2009, 2011 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் இறுதிப் போட்டி வரை வந்தும் வெற்றி பெறமுடியவில்லை. கேப்டன்கள் மாறினார்களே தவிர, கோலி போன்ற வீரர்கள் சாதனைகள் படைத்தார்களே தவிர, டிராபி மட்டும் இன்னும் எட்டாக் கனியாகவே உள்ளது.
ஐபிஎல் தொடரில் ஆர்சிபி மட்டுமே இக்கட்டான சூழலில் இருந்து வருகிறது. ஜாம்பவான் வீரர்கள் கொண்ட ஆர்சிபி அணியால் ஒரு முறை கூட ஐபிஎல் டிராபியை தட்டி தூக்க முடியவில்லை. ஆர்சிபியில் மட்டும் ராகுல் டிராவிட், கெவின் பீட்டர்சன், அனில் கும்ப்ளே, டேனியல் வெட்டோரி, விராட் கோலி, ஷேன் வாட்சன் மற்றும் ஃபாப் டூப்ளெசி என்று கேப்டன்கள் வந்தாலும் ஒரு முறை கூட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு டிராபி கைப்பற்றவில்லை.
ஐபிஎல் 2024 தொடரில் ஆர்சிபி டிராபி கைப்பற்றுவதற்கான வாய்ப்புகள் இருந்தும் எலிமினேட்டர் சுற்று போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் தோல்வி அடைந்து வெளியேறியது. 2009, 2011 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் ஆர்சிபி ஐபிஎல் தொடரில் இறுதிப் போட்டி வரை வந்தது. ஆனால், ஒரு முறை கூட டிராபி அடிக்கவில்லை.
ஆர்சிபியில் கேப்டன்கள் மாறினார்களே தவிர அணிக்கு டிராபி வென்று கொடுக்கவில்லை. இந்திய அணியின் நம்பிக்கை நாயகன் என்று அழைக்கப்படும் விராட் கோலி கூட டிராபி வென்று கொடுக்கவில்லை. ஆனால், தனி வீரராக ஐபிஎல் தொடரில் பல சாதனைகள் படைத்திருக்கிறார்.
இதுவரையில் அர்சிபி கோட்டைவிட்டிருந்தாலும் வரக் கூடிய 2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் கண்டிப்பாக டிராபி ஜெயிக்க வேண்டும் என்ற உறுதியோடு ஆர்சிபி களமிறங்கும். அதற்கான வேலைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
ஐபிஎல் 2025 தொடரின் மெகா ஏலத்திற்கு முன்னதாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி உரிமையானது ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. ஏலத்திற்கு முன்னதாக ஆர்சிபியின் கீ பிளேர்ஸ்களான கேப்டன் ஃபாப் டூப்ளெசிஸ் மற்றும் கிளென் மேக்ஸ்வெல் இருவரும் விடுவிக்கப்படுவார்கள் என்று ஐபிஎல் வட்டாரத்தில் வெளியான தகவல்.
ஆர்சிபியில் கே.ஜி.எஃப் (கோலி, கிளென், ஃபாப்) சகாப்தம் முடிந்துவிட்டதாக ரசிகர்கள் கூறுகிறார்கள். ஐபிஎல் 2023ல், இந்த KGF ஜோடி அணியின் வெற்றிக்கு வித்திட்டிருக்கிறது. ஆனால், வரும் தொடர்களில் ஆர்சிபி புதிய கேப்டன் உடன் களமிறங்கும் என்று சொல்லப்படுகிறது. அது யார் என்பது குறித்து அணி நிர்வாகம் சஸ்பென்ஸாக வைத்திருக்கிறது. மும்பை இந்தியன்ஸ் அணியின் ரோகித் சர்மா விடுவிக்கப்பட்டால், அவர் தான் ஆர்சிபியின் புதிய கேப்டனாக இருப்பார் என்றும் சொல்லப்படுகிறது.
மேலும், அப்படி ரோகித் ஆர்சிபிக்கு வந்தால் இந்திய அணியைப் போன்று ரோகித் மற்றும் விராட் கோலியின் அதிரடி ஆட்டங்கள் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
RCB, Royal Challengers Bangalore, IPL 2025, Faf du Plessis
ஃபாப் டூப்ளெசிஸ்:
கடந்த 2022 ஆம் ஆண்டு ஆர்சிபி அணியில் ஃபாப் டூப்ளெசிஸ் ஏலம் எடுக்கப்பட்டார். அதன் பிறகு அவர் தான் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். சிஎஸ்கேயில் அவர் விளையாடியதைக் கண்டு மெர்சலான ஆர்சிபி அவரை தட்டி தூக்கியது. ஆனால், கேப்டன் பொறுப்பை அவரது ஆட்டத்திற்கு தடையானது. RCBக்காக 45 போட்டிகளில் விளையாடி 15 அரைசதங்களுடன் 1636 ரன்கள் எடுத்தார்.
அவரது வயது காரணமாக அவர் ஆர்சிபியிலிருந்து விடுவிக்கப்பட இருப்பதாக சொல்லப்படுகிறது. அவர் தற்போது 40 வயதை எட்டிய நிலையிலும் கூட முழு உடல் தகுதியுடன் தான் இருக்கிறார். எனினும் ஆர்சிபியின் எதிர்காலம் கருதி இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதால் அவர் விடுவிக்கப்படலாம். அதோடு, அவரது ஃபார்ம் மற்றும் காயம் ஏற்படும் அபாயம் ஆகியவற்றை கருத்திக் கொண்டு அவர் நீக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
Glenn Maxwell
கிளென் மேக்ஸ்வெல்:
கிளென் மேக்ஸ்வெல் நீக்கப்பட முக்கிய காரணம், கடந்த சீசனில் அவரது மோசமான ஃபார்ம் தான். இது அறிந்து தானாக ஓய்வு கேட்டு ஒரு சில போட்டிகள் விளையாடாமல் கூட இருந்தார். ஐபிஎல் 2024 தொடரில் 10 போட்டிகளில் பேட்டிங் செய்த மேக்ஸ்வெல் 5.78 சராசரியில் 52 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
இதில் ஒரே சீசனில் 5 முறை டக் ஆனது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக ஆர்சிபியிலிருந்து மேக்ஸ்வெல் விடுவிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதன் மூலம், G (Glenn Maxwell) மற்றும் F (Faf Duplessis) ஆகியோர் KGFல் இனிமேல் காணப்பட மாட்டார்கள். ஆனால், விராட் கோலி மட்டும் ஆர்சிபியில் இடம் பெற்று விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.