- Home
- Sports
- Sports Cricket
- டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மைல்கல்..! கபில் தேவ், இம்ரான் கான் ஆகிய லெஜண்ட்ஸ் சாதனையை முறியடித்தார் ஜடேஜா
டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மைல்கல்..! கபில் தேவ், இம்ரான் கான் ஆகிய லெஜண்ட்ஸ் சாதனையை முறியடித்தார் ஜடேஜா
டெஸ்ட் கிரிக்கெட்டில் 250 விக்கெட்டுகள், 2500 ரன்கள் என்ற மைல்கல்லை விரைவாக எட்டிய 2வது வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார் ரவீந்திர ஜடேஜா.

சமகாலத்தின் சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவர் ரவீந்திர ஜடேஜா. இந்திய அணிக்காக 62 டெஸ்ட், 171 ஒருநாள் மற்றும் 64 டி20 போட்டிகளில் ஆடி பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்து வகையிலும் தனது சிறப்பான பங்களிப்பை அணிக்கு வழங்கியவர் ஜடேஜா.
ஆஸ்திரேலியாவிற்கு எதிராக டெல்லியில் நடந்துவரும் 2வது டெஸ்ட் போட்டியில் 3 விக்கெட் வீழ்த்திய ரவீந்திர ஜடேஜா அபாரமான சாதனையை படைத்துள்ளார். 2வது டெஸ்ட்டில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி 263 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணியில் அபாரமாக பந்துவீசிய ஷமி அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளையும், அஷ்வின் மற்றும் ஜடேஜா ஆகிய இருவரும் தலா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இந்த போட்டியில் கவாஜா, கம்மின்ஸ், டாட் மர்ஃபி ஆகிய மூவரையும் ஜடேஜா வீழ்த்தினார். இதில் கவாஜாவின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் 250 விக்கெட் என்ற மைல்கல்லை ஜடேஜா எட்டினார். அதன்பின்னர் தான் கம்மின்ஸ் மற்றும் மர்ஃபியின் விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 250 விக்கெட் மற்றும் 2500 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டிய லெஜண்ட் ஆல்ரவுண்டர்களின் பட்டியலில் இணைந்தார் ஜடேஜா. மேலும் இந்த மைல்கல்லை 62 டெஸ்ட் போட்டிகளில் எட்டியுள்ள ஜடேஜா, இந்த மைல்கல்லை விரைவாக எட்டிய 2வது வீரர் என்ற சாதனையையும் படைத்தார். 55 போட்டிகளில் இந்த மைல்கல்லை எட்டிய இங்கிலாந்து முன்னாள் ஆல்ரவுண்டர் இயன் போத்தம் முதலிடத்தில் உள்ளார்.
டெஸ்ட்டில் 250 விக்கெட் மற்றும் 2500 ரன்கள் என்ற மைல்கல்லை இம்ரான் கான்(64 போட்டிகள்), கபில் தேவ்(65 போட்டிகள்), ரிச்சர்ட் ஹாட்லி (70 போட்டிகள்), ஷான் போலாக் (71 போட்டிகள்), ரவிச்சந்திரன் அஷ்வின் (75 போட்டிகள்) ஆகியோரும் எட்டியுள்ளனர்.