- Home
- Sports
- Sports Cricket
- IPL 2022: ஐபிஎல் 15வது சீசனில் அனைவரையும் அசரவைத்த 5 அறிமுக வீரர்கள்..! பார்த்திவ் படேல் அதிரடி
IPL 2022: ஐபிஎல் 15வது சீசனில் அனைவரையும் அசரவைத்த 5 அறிமுக வீரர்கள்..! பார்த்திவ் படேல் அதிரடி
ஐபிஎல் 15வது சீசனில் அபாரமாக விளையாடி அனைவரையும் கவர்ந்த 5 அறிமுக வீரர்களை தேர்வு செய்துள்ளார் பார்த்திவ் படேல்.

ஐபிஎல் 15வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. நாளை(மே 29) இறுதிப்போட்டி நடக்கவுள்ளது. இந்த சீசன் முழுக்க முழுக்க இளம் வீரர்களுக்கான சீசனாக அமைந்தது. உம்ரான் மாலிக், மோசின் கான், திலக் வர்மா, ஜித்தேஷ் ஷர்மா, குல்தீப் சென், யஷ் தயால், முகேஷ் சௌத்ரி, சிமர்ஜீத் சிங், அபிஷேக் ஷர்மா ஆகிய இளம் வீரர்கள் அபாரமாக விளையாடினர்.
இவர்களில் சில இளம் வீரர்கள் ஏற்கனவே ஐபிஎல்லில் ஆடியுள்ள நிலையில், இந்த சீசனில் அபாரமாக விளையாடி அனைவரையும் கவர்ந்த 5 அறிமுக வீரர்களை பார்த்திவ் படேல் தேர்வு செய்துள்ளார். அந்த வீரர்களை பார்ப்போம்.
1. திலக் வர்மா (மும்பை இந்தியன்ஸ்)
19 வயது திலக் வர்மா தான் இந்த சீசனில் மும்பை இந்தியன்ஸின் ஒரே நம்பிக்கையாக இருந்தவர். மும்பை இந்தியன்ஸ் அணியில் மற்ற அனைத்து வீரர்களும் சொதப்பிய நிலையில், திலக் வர்மா ஒருவர் தான் சீசன் முழுக்க அபாரமாக பேட்டிங் ஆடி 397 ரன்களை குவித்தார். இந்த இளம் வீரர் அறிமுக சீசனிலேயே அனைவரையும் கவர்ந்தார்.
2. ஜித்தேஷ் ஷர்மா (பஞ்சாப் கிங்ஸ்)
பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஆடிய ஜித்தேஷ் ஷர்மா என்ற வீரர் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன். பஞ்சாப் அணிக்காக சிறப்பாக விளையாடிய ஜித்தேஷ், 164 என்ற ஸ்டிரைக் ரேட்டில் ஆடி 234 ரன்கள் அடித்தார். 10 போட்டிகளில் ஆடி 234 ரன்கள் அடித்த ஜித்தேஷ் ஷர்மாவும் அனைவரையும் கவர்ந்த அறிமுக வீரர் ஆவார்.
3. மோசின் கான் (லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்)
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியில் ஆடிய ஃபாஸ்டபவுலர் மோசின் கான், 145 கிமீ வேகத்திற்கு மேல் வீசி எதிரணி பேட்ஸ்மேன்களை அலறவிட்டார். வெறும் வேகத்தில் மட்டும் வீசாமல், துல்லியமான லைன்&லெந்த்தில் நல்ல ஏரியாக்களில் வீசினார். அதுதான் அவரது பலம். இந்த சீசனில் அபாரமாக பந்துவீசி 9 போட்டிகளில் 14 விக்கெட்டுகளை வீழ்த்திய மோசின் கானும் இந்த சீசனில் அனைவரையும் கவர்ந்த அறிமுக வீரர் ஆவார்.
4. குல்தீப் சென் (ராஜஸ்தான் ராயல்ஸ்)
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஆடிய குல்தீப் சென் என்ற இளம் ஃபாஸ்ட் பவுலர் 150 கிமீ வேகத்தில் வீசினார். அவர் இந்த சீசனில் ஆடுவதற்கு பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி தனது திறமையை நிரூபித்தார். ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் அபாரமாக பந்துவீசி 20 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார்.
5. முகேஷ் சௌத்ரி (சிஎஸ்கே)
சிஎஸ்கே அணியில் தீபக் சாஹர் இல்லாத குறையை தீர்த்துவைத்து, பவர்ப்ளேயில் அருமையாக பந்துவீசி ஆரம்பத்திலேயே சிஎஸ்கே அணிக்கு முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தி கொடுத்தார் முகேஷ் சௌத்ரி. இந்த சீசனின் தொடக்கத்தில் அவர் பந்துவீசியதற்கும், லீக் சுற்றின் கடைசி சில போட்டிகளில் பந்துவீசியதற்கும் பெரிய வித்தியாசம் இருந்தது. ஒரே சீசனில் தேர்ந்த அனுபவத்தை பெற்று சிறப்பாக பந்துவீசி கேப்டன் தோனியின் பாராட்டையும் பெற்றவர் முகேஷ் சௌத்ரி. நல்ல ஸ்விங் பவுலரான முகேஷ் சௌத்ரி, 13 போட்டிகளில் ஆடி 16 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.