ஸ்டோக்ஸ் என்கிட்ட வம்பு இழுத்தாப்ள.. நான் கோலியிடம் கோர்த்துவிட்டுட்டேன்..! முகமது சிராஜ் ஓபன் டாக்
விராட் கோலி மற்றும் பென் ஸ்டோக்ஸ் இடையேயான மோதல் குறித்து ஃபாஸ்ட் பவுலர் முகமது சிராஜ் பேசியுள்ளார்.
இந்தியா இங்கிலாந்து இடையேயான 4வது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் இன்று தொடங்கி நடந்துவருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி 205 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆல் அவுட்டானது.
கடந்த போட்டியை போலவே இந்த போட்டியிலும் அக்ஸர் படேல் மற்றும் அஷ்வின் ஆகிய இருவரின் சுழலிலும் இங்கிலாந்து பேட்டிங் ஆர்டர் சரிந்தது. இங்கிலாந்து அணியில் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் மட்டுமே அரைசதம் அடித்தார். ஆனால் அவரும் அதை பெரிய இன்னிங்ஸாக மாற்ற முடியாமல் 55 ரன்னில் வாஷிங்டன் சுந்தர் பந்தில் ஆட்டமிழந்தார். ஸ்டோக்ஸை தவிர மற்ற அனைவருமே சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் 205 ரன்களுக்கே இங்கிலாந்து அணி சுருண்டது.
இந்திய அணி சார்பில் அக்ஸர் படேல் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளும், அஷ்வின் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். முகமது சிராஜ் 2 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 24 ரன்கள் அடித்துள்ளது. கில் டக் அவுட்டான நிலையில், முதல்நாள் ஆட்ட முடிவில் ரோஹித் 8 ரன்களுடனும் புஜாரா 15 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இன்றைய முதல் நாள் ஆட்டத்தின் முதல் செசனில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கும் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸுக்கும் இடையே மோதல் மூண்டது. 13வது ஓவரை வீசிய முகமது சிராஜ், அந்த ஓவரை பவுன்ஸருடன் முடிக்க, சிராஜிடம் ஏதோ சொல்லி சீண்டினார் பென் ஸ்டோக்ஸ். ஸ்டோக்ஸின் சீண்டலுக்கு ரியாக்ட் செய்யாமல் நகன்று சென்ற சிராஜ், கோலியிடம் கோர்த்துவிட, சண்டைக்காகவே காத்திருக்கும் கோலி சும்மாவிடுவாரா? சிராஜை சீண்டிவிட்டு, தனது பேட்டிங் பார்ட்னர் பேர்ஸ்டோவிடம் பேசிக்கொண்டிருந்த ஸ்டோக்ஸை விராட் விளாச, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதைக்கண்ட அம்பயர்கள் நிதின் மேனன் மற்றும் வீரேந்தர் ஷர்மா ஆகியோர் தலையிட்டு, அவர்களை விலக்கிவிட்டனர்.
அந்த மோதல் குறித்து பேசிய பென் ஸ்டோக்ஸ் என்னை திட்டி வம்பு இழுத்தார். நான் அதை கோலி பாயிடம்(Bhai) சொல்லிவிட்டேன். அதன்பின்னர் கோலி பாய் அந்த விஷயத்தை கையாண்டார் என்று சிராஜ் தெரிவித்தார்.