- Home
- Sports
- Sports Cricket
- IND vs ENG Test: இதெல்லாம் ஒரு பவுலிங் யூனிட்டா? இந்திய அணியை விளாசிய முகமது ஷமி!
IND vs ENG Test: இதெல்லாம் ஒரு பவுலிங் யூனிட்டா? இந்திய அணியை விளாசிய முகமது ஷமி!
இந்திய அணியின் பவுலிங் யூனிட் சரியாக செயல்படவில்லை என்று முகமது ஷமி குற்றம்சாட்டியுள்ளார். பும்ராவுக்கு மற்ற பவுலர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Mohammed Shami Criticizing Indian Team Bowlers
இந்தியா, இங்கிலாந்து அணிகள் இடையிலான லீட்ஸில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 471 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 465 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்பு இந்திய அணி தனது 2வது இன்னிங்சில் 364 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இந்திய அணி தோல்வி
இதனைத் தொடர்ந்து 371 ரன்கள் இலக்கை துரத்திய இங்கிலாந்து அணி கடைசி நாள் முடியும் அரை மணி நேரத்துக்கு முன்பு 5 விக்கெட் மட்டுமே இழந்து இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது. இந்திய அணியின் மோசமான பீல்டிங்கும், பின்வரிசை வீரர்களின் பொறுப்பற்ற பேட்டிங்கும் தோல்விக்கு காரணமாகி விட்டது.
இதேபோல் ஒருபக்கம் ஜஸ்பிரித் பும்ரா சிறப்பாக வீசி விக்கெட்டுகளை அள்ள, மறுபக்கம் முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோர் விக்கெட்டுகளையும் வீழ்த்தாமல் ரன்களை வாரி வழங்கியது தோல்விக்கு பிரதான காரணமாகி விட்டது.
பந்துவீச்சு சிறப்பாக இல்லை
இந்நிலையில், இந்திய அணி வீரர் முகமது ஷமி தோல்விக்கு பவுலிங் யூனிட் சொதப்பியதே முக்கிய காரணம் என்று கூறியுள்ளார். இந்திய பந்து வீச்சாளர்கள் இன்னும் நிறைய செய்ய வேண்டியுள்ளது என்று ஷமி கூறினார். ஜஸ்பிரித் பும்ராவைப் பார்த்து, அவரது திட்டமிடல் மற்றும் செயல்படுத்தல் உத்திகளைப் பார்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
பும்ராவுக்கு சப்போர்ட் இல்லை
இது தொடர்பாக தனது யூடியூப் சேனலில் பேசிய முகமது ஷமி, ''முதல் போட்டியைப் பற்றிப் பேசினால், பந்துவீச்சில் நாம் கொஞ்சம் முன்னேற்றம் அடைய வேண்டும். பும்ராவுக்குத் தேவையான ஆதரவு கிடைக்கவில்லை என்று நான் நினைக்கிறேன். அப்படி இருந்தால் முதல் இன்னிங்ஸில் நமக்கு அதிக முன்னிலை கிடைத்திருக்கும். பந்துவீச்சு சிறப்பாக இருந்திருந்தால் இந்த ஆட்டத்தை டிரா செய்திருக்க முடியும்'' என்றார்.
மற்ற பவுலர்களுக்கு ஷமி அட்வைஸ்
தொடர்ந்து பேசிய முகமது ஷமி, ''மற்ற இந்திய பந்து வீச்சாளர்கள் பும்ராவிடம் பேசி அவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். அவர்கள் பும்ராவுடன் திட்டமிடுவது பற்றிப் பேசி அவரை ஆதரிக்க வேண்டும். அவர்கள் பும்ராவை ஆதரித்தால், போட்டியை எளிதாக வெல்ல முடியும்'' என்று தெரிவித்துள்ளார். இந்தியா, இங்கிலாந்து இடையிலான 2வது டெஸ்ட் போட்டி வரும் 2ம் தேதி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற உள்ளது.
ஆகாஷ் தீப் அல்லது அர்ஷ்தீப் சிங்
இந்த போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா விளையாட மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது. பும்ராவின் பணிச்சுமையை குறைக்க வேண்டும் என்பதற்காக பிசிசிஐ அவரை இந்த தொடரில் 3 டெஸ்ட்டுகளில் மட்டுமே விளையாட வைக்க திட்டமிட்டுள்ளது. அப்படி பும்ரா விளையாடாமல் போனால் ஆகாஷ் தீப் அல்லது அர்ஷ்தீப் சிங் இந்திய அணியில் இடம்பெறுவார்கள் என தகவல்கள் கூறுகின்றன.