தனது பவுலிங்கில் ஜெய்ஸ்வால் கேட்ச்களை தவற விட்டது குறித்து பும்ரா வெளிப்படையாக பேசினார். இது தொடர்பான முழு விவரங்களை பார்ப்போம்.

Jasprit Bumrah Comments On Indian Players Missing Catches: இந்தியா, இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 113 ஓவர்களில் 471 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின்பு இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 465 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி இந்தியாவை விட 6 ரன்கள் குறைவாக எடுத்தது. இந்திய அணி வீரர் ஜஸ்பிரித் பும்ரா 24.4 ஓவர்களில் 83 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

பும்ரா ஓவரில் கேட்ச் விட்ட வீரர்கள்

பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்டுகளையும், சிராஜ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். பின்னர் இந்திய அணி தனது 2வது இன்னிங்சை தொடங்கிய நிலையில், நேற்றைய 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழந்து 90 ரன்கள் எடுத்துள்ளது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை லீட்ஸில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய பிறகு, இந்திய அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, தனது பந்துவீச்சில் தவறவிட்ட கேட்சுகள் வாய்ப்புகளைப் பற்றி சிந்தித்து, ஆட்டத்தின் போது முன்னேற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

நோ பாலால் தப்பிய ஹாரி ப்ரூக்

அதாவது பென் டக்கெட், ஆலி போப் மற்றும் ஹாரி புரூக் உட்பட மூன்று கேட்சுகளை தவறவிட்ட போதிலும் பும்ரா 24.4 ஓவர்களில் 83 ரன்களுக்கு 5 விக்கெட் எடுத்து அசத்தினார். இந்த அனைத்து கேட்ச்களையும் ஜெய்ஸ்வால் விட்டார். ஒரு கேட்ச் ஜடேஜா நழுவ விட்டார். அதே போல் ஹாரி ப்ரூக் பும்ரா பந்தில் ரன் ஏதும் எடுக்காமல் கேட்ச் ஆனார். ஆனால் அது நோ பால் என்று அறிவிக்கப்பட்டதால் அவர் தப்பினார்.

வேண்டுமென்றே கேட்சுகளை விடுவதில்லை

இந்திய வீரர்கள் கேட்ச் விட்டது குறித்து பேசிய பும்ரா, ''கேட்ச்களை தவற விட்டதால் ஒரு நொடி ஏமாற்றம் அடைந்தேன். அதைப் பற்றி அழுது கொண்டே இருக்க முடியாது. விளையாட்டில் முன்னேற வேண்டும். நான் அதை என் தலையில் அதிகமாக எடுத்துக்கொண்டு இருக்க விரும்பவில்லை. அணி வீரர்கள் பலர் புதியவர்கள், முதல் முறையாக, இங்கே பந்தைப் பார்த்து பிடிப்பது க‌டினம். யாரும் வேண்டுமென்றே கேட்சுகளை கைவிடுவதில்லை, அது விளையாட்டின் ஒரு பகுதி. அவர்கள் அதிலிருந்து கற்றுக்கொள்வார்கள். நான் ஒரு காட்சியை உருவாக்கி, அவர்கள் மீது அதிக அழுத்தத்தை ஏற்படுத்த விரும்பவில்லை'' என்று தெரிவித்தார்.

கேப்டன் பதவி ஏற்காதது ஏன்?

இந்திய டெஸ்ட் கேப்டன் பதவியை ஏற்காததற்கான காரணம் குறித்துப் பேசிய பும்ரா, தனது உடலைக் கவனித்துக் கொள்ளவும், ஒரு வீரராகப் பங்களிக்கவும் விரும்புவதாகக் கூறினார். "தலைமைப் பதவியில் பெரிய விஷயம் எதுவும் இல்லை. நான் என் உடலைக் கவனித்துக் கொள்ள விரும்புகிறேன். எனது அறுவை சிகிச்சை செய்து என் உடலைப் பராமரித்தவர்களுடன், நான் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினேன். அணியை ஏமாற்ற விரும்பவில்லை. அந்த சூழ்நிலையில் நான் ஒரு பகுதியாக இருக்க விரும்பவில்லை. ஒரு தலைவராக, ஒவ்வொரு போட்டியிலும் நான் இருக்க வேண்டும்.

நியாயமாக இருக்காது

நான் விளையாடவில்லை என்றால் அது அணியில் நியாயமாக இருக்காது. தொடர்ச்சி இருக்க வேண்டும். நான் இங்கு இருக்கும் போதெல்லாம் ஒரு வீரராக பங்களிக்க விரும்புகிறேன். இந்திய கிரிக்கெட்டை விட பெரியது எதுவுமில்லை, போட்டிகளில் வெற்றி பெறுவதை விட இது ஒரு சிறந்த முடிவு என்று நான் உணர்ந்தேன்'' என்று கூறினார்.

பிட்ச்சில் ஸ்விங் இல்லை

4ம் நாளில் டெஸ்ட் நிலையை குறித்து பேசிய பும்ரா, ''தற்போது பிட்ச் பேட்டிங் செய்வதற்கு ஏற்றதாக உள்ளது. பிட்ச்சில் எந்த வித மாறுபாடும் இல்லை. கொஞ்சம் இரண்டு வேகத்தில் பந்து வீசுவது போல் தெரிகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் ஸ்விங் இருக்கலாம், ஆனால் நீங்கள் அதை எதிர்பார்க்கலாம். இதுவரை பெரிய ஸ்விங் இல்லை. நாங்கள் ஒரு பெரிய ஸ்கோரை எடுத்து இங்கிலாந்துக்கு நெருக்கடி கொடுப்போம்'' என்றார்.

ஹாரி ப்ரூக் அவுட் குறித்து கருத்து

மேலும் ஹாரி ப்ரூக் 99 ரன்களில் அவுட் ஆனது குறித்து பேசிய பும்ரா, ''விதி அவருக்கு 99 ரன்களை முடிவு செய்தது. அவர் ஒரு சுவாரஸ்யமான பேட்டர். மிகவும் நன்றாக விளையாடினார். அவர் சூழ்நிலைகளை மதிப்பிட்டு, அவரது ஆட்டத்தை விரும்பினார். பவுலர் நல்ல ஸ்பெஷல் வீசினாலும் தன்னால் ஒரு ஆக்ரோஷமான ஷாட்டை விளையாட முடியும் என்று நினைக்க வைக்கிறார். அடுத்த இன்னிங்ஸில் அவரை சீக்கிரமாக வெளியேற்ற முயற்சிப்போம்'' என்று தெரிவித்தார்.