இந்திய வீரர் ஜஸ்பிரித் பும்ரா டெஸ்ட் கிரிக்கெட்டில் வாசிம் அக்ரம் சாதனையை முறியடித்துள்ளார். இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

Jasprit Bumrah Breaks Wasim Akram Record: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா வரலாற்று சாதனை படைத்தார். அதாவது சேனா (SENA) நாடுகள் எனப்படும் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா நாடுகளில் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் எடுத்த ஆசிய பந்துவீச்சாளர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

சேனா நாடுகளில் அதிக விக்கெட் வீழ்த்திய பும்ரா

சேனா நாடுகளில் மொத்தம் 150 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள பும்ரா, 146 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்த பாகிஸ்தான் ஜாம்பவான் வாசிம் அக்ரம் சாதனையை முறியடித்துள்ளார். பும்ரா அதிகம் வெற்றி பெற்ற சேனா நாடு ஆஸ்திரேலியா. இங்கு 12 டெஸ்ட்களில் 64 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவரது சராசரி: 17.15, சிறந்த பந்துவீச்சு 6/33 விக்கெட்டுகள். நான்கு முறை ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

ஆஸ்திரேலிய பயணத்தில் பெரும் சாதனை

கடைசி ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் மொத்தம் 32 விக்கெட்டுகளை அள்ளிய பும்ரா, சேனா நாடுகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்தியர் என்ற சாதனையை செய்திருந்தார். இப்போது இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலும் பும்ரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். பும்ராவுக்கு மற்ற எந்த பவுலர்களும் அதிகம் சப்போர்ட் செய்யவில்லை.

சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பாராட்டு

தட்டையான பிட்ச்களில் ரிச்சர்ட் ஹாட்லியைப் போலவே ஜஸ்பிரித் பும்ராவும் தாக்கத்தை ஏற்படுத்துகிறார் என்று இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார். பேட்டிங்கிற்கு சாதகமான மேற்பரப்புகளிலும் கூட திருப்புமுனைகளை உருவாக்கும் அவரது அசாத்திய திறனுக்காக ஜஸ்பிரித் பும்ராவை சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பாராட்டினார். பும்ராவை அவர் நியூசிலாந்து ஜாம்பவான் சர் ரிச்சர்ட் ஹாட்லியுடன் ஒப்பிட்டார். சர் ரிச்சர்ட் ஹாட்லி 400 டெஸ்ட் விக்கெட்டுகளை எட்டிய முதல் கிரிக்கெட் வீரர் ஆவார்.

பும்ரா தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர்

"இந்தப் போட்டியில் இதுவரை நான்கு சதங்களைப் பார்த்திருக்கிறோம். இந்தியாவிலிருந்து மூன்று சதங்களும் இங்கிலாந்திலிருந்து ஒரு சதமும் வந்துள்ளது. ஆனால் எந்த பந்து வீச்சாளர் உண்மையிலேயே சிறப்பு வாய்ந்தவர்? எனக்கு அது பும்ரா மட்டுமே" என்று மஞ்ச்ரேக்கர் ஜியோஹாட்ஸ்டாரில் கூறினார். "ஒவ்வொரு முறை பவுலிங் போட வரும்போதும் பும்ரா ஒரு விக்கெட்டை உருவாக்கும் திறன் பெற்றுள்ளார்'' என்று அவர் தெரிவித்துள்ளார்.

சர் ரிச்சர்ட் ஹாட்லியை போன்றவர் பும்ரா

"எனக்கு நினைவுக்கு வரும் ஒரே ஒரு பந்து வீச்சாளர். அந்த மாதிரியான தாக்கத்தை தனியாகக் கொண்டவர் சர் ரிச்சர்ட் ஹாட்லி. அவர் நியூசிலாந்து அணிக்காக ஒப்பீட்டளவில் பலவீனமான தாக்குதலுடன் விளையாடினார். ஆனால் அவர் வரும் ஒவ்வொரு முறையும், ஒரு விக்கெட் நெருங்கி வருவதாக நீங்கள் உணர்ந்தீர்கள். இருவருக்கும் இடையிலான பொதுவான விஷயம் தேர்ச்சி. நான் ஹாட்லியை அருகில் இருந்து பார்த்தபோது, ​​அவர் தனது தொழிலில் உண்மையான மாஸ்டர் போல் உணர்ந்தார். பும்ராவைப் பற்றியும் எனக்கு அதே எண்ணம் வருகிறது" என்று மஞ்ச்ரேக்கர் கூறினார்.