- Home
- Sports
- Sports Cricket
- IND vs ENG: பும்ரா இல்லாமல் இந்தியா வெற்றி பெறுவது கடினமா? ஷாக் கொடுக்கும் டேட்டா!
IND vs ENG: பும்ரா இல்லாமல் இந்தியா வெற்றி பெறுவது கடினமா? ஷாக் கொடுக்கும் டேட்டா!
இந்தியா, இங்கிலாந்து இடையிலான 2வது டெஸ்ட்டில் பும்ரா விளையாட மாட்டார் என தகவல்கள் கூறுகின்றன. பும்ரா இல்லாமல் இந்திய அணி வெற்றி பெற முடியுமா? என்பது குறித்து டேட்டாவை வைத்து இந்த செய்தியில் முழுமையாக பார்ப்போம்.

IND vs ENG: Can India To Win Without Jasprit Bumrah
இந்தியா, இங்கிலாந்து அணிகள் இடையிலான லீட்ஸில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 371 ரன்களை துரத்திய இங்கிலாந்து 5வது நாளில் கடைசி அரை மணி நேரத்தில் போட்டியை முடித்தது. இந்திய அணியில் ரிஷப் பண்ட் 2 சதம், கே.எல்.ராகுல், ஜெய்ஸ்வால், கேப்டன் சுப்மன் கில் ஆகியோர் சதம் அடித்ததை தவிர வேறு எந்த பாஸிட்டிவும் இல்லை.
முதல் டெஸ்ட்டில் இந்திய அணி தோல்வி
இந்திய அணி வீரர்கள் பீல்டிங்கில் மோசமாக செயல்பட்டனர். மொத்தம் 6 கேட்ச்களை தவற விட்டனர். ஜெய்ஸ்வால் மட்டும் 4 கேட்ச்களை கோட்டை விட்டார். மேலும் பும்ராவைத் தவிர சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஷர்துல் தாக்கூர் ஆகியோர் எதிர்பார்த்த அளவு பந்துவீசாததும் தோல்விக்கு முக்கிய காரணமாகி விட்டது.
மேலும் பின்வரிசை வீரர்களும் போதிய அளவில் ரன் சேர்க்காததும் தோல்விக்கு காரணமாக அமைந்து விட்டது. இந்தியா, இங்கிலாந்து இடையிலான 2வது டெஸ்ட் போட்டி வரும் 2ம் தேதி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற உள்ளது.
2வது டெஸ்ட்டில் பும்ரா இல்லை
இந்த போட்டியில் உலகின் நம்பர் 1 பவுலர் ஜஸ்பிரித் பும்ரா விளையாட மாட்டார் என தகவல் வெளியாகி இருக்கிறது. ஏனெனில் எட்ஜ்பாஸ்டனில் இந்திய வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டபோது பும்ரா எந்தவித பவுலிங் பயிற்சியும் மேற்கொள்ளவில்லை.
ஆகையால் 2வது டெஸ்ட்டில் பும்ரா விளையாட மாட்டார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. அண்மை காலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியை தூண் போல் தாங்கி நிற்கும் பும்ரா இல்லாமல் போனால் அது அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாகும்.
முதல் டெஸ்ட்டில் பும்ராவை தவிர மற்ற பவுலர்களின் டேட்டா
ஏனெனில் முதல் டெஸ்ட்டில் மொத்தமாக 44 ஓவர்கள் வீசியுள்ள பும்ரா, 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 8 மெயிடன் ஓவர்கள் போட்டுள்ளார். ஆனால் மற்ற பாஸ்ட் பவுலர்களான சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஷர்துல் தாக்கூர் ஆகியோர் மொத்தமாக 92 ஓவர்கள் வீசி 482 ரன்கள் விட்டுக் கொடுத்துள்ளனர்.
இவர்கள் 3 பேரும் சேர்ந்து மொத்தமாக 1 மெயிடன் தான் வீசியுள்ளனர். அந்த ஒரு மெயின் சிராஜ் போட்டது. பிரசித் கிருஷ்ணா, ஷர்துல் தாக்கூர் ஒரு மெயிடன் ஓவரும் வீசவில்லை.
பும்ரா இல்லாமல் தடுமாறும் இந்தியா
பும்ரா அறிமுகமானதில் இருந்து அவர் இல்லாமல் இந்திய அணி மொத்தமாக 26 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் 18 வெற்றிகளை வெற்றுள்ளது. 5 தோல்விகளையும், 3 டிராகளையும் கண்டுள்ளது. வெளிநாடுகளில் இந்திய அணி பும்ரா இல்லாமல் 8 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4 வெற்றிகளையும், 3 தோல்விகளையும், 1 டிராவையும் பெற்றுள்ளது.
சேனா (SENA) நாடுகள் எனப்படும் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா நாடுகளில் பும்ரா இல்லாமல் 4 டெஸ்ட்களில் விளையாடியுள்ள இந்தியா 3 தோல்வியை சந்தித்துள்ளது. 1 வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது.
பும்ரா களம்கண்டபோது இந்திய அணி எப்படி?
பும்ரா களம் கண்ட இந்திய அணி மொத்தம் 46 போட்டிகளில் விளையாடி 20 போட்டிகளில் வெற்றியும், 22 போட்டிகளில் தோல்வியும் சந்தித்துள்ளது. 4 போட்டி டிராவில் முடிவடைந்துள்ளது. வெளிநாடுகளில் பும்ரா இருக்கும்போது 34 போட்டிகளில் விளையாடி 12 வெற்றி, 18 தோல்வி, 4 போட்டிகளில் டிராவை சந்தித்துள்ளது. சேனா நாடுகளில் இந்திய அணி பும்ரா இருக்கும்போது 32 போட்டிகளில் விளையாடி 10 வெற்றி, 18 தோல்வி, 4 டிரா செய்துள்ளது.
பும்ரா இல்லாமல் பிரிஸ்பேனில் பெரும் வெற்றி
மேற்கண்ட டேட்டாவை பார்த்தால் பும்ரா வருவதற்கு முன்பு, இந்தியா SENAவில் விளையாடிய 113 வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் 18 போட்டிகளில் மட்டுமே வென்றிருந்தது. அவரது அறிமுகத்திற்குப் பிறகு, அந்த வெற்றி சதவீதம் இரட்டிப்பாகியுள்ளது.
பும்ரா இல்லாமல் இந்திய அணி 2021ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் பெரும் வெற்றி பெற்றது. அந்த போட்டியில் இளம் வீரர்கள் தமிழ்நாட்டை சேர்ந்த டி.நடராஜன், சிராஜ், ஷைனி ஆகியோர் சிறப்பாக பந்துவீசி இருந்தனர்.
அனுபவம் இல்லாத இந்திய பவுலர்கள்
ஆனால் பும்ரா இல்லாமல் ஆஸ்திரேலியாவை போன்று இங்கிலாந்தில் இந்திய அணி சமாளிக்க முடியாது. ஏனெனில் பும்ராவை தவிர அணியில் இருக்கும் பவுலர்களில் சிராஜ் மட்டுமே 37 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். ஆகாஷ் தீப் 7 போட்டிகளிலும், பிரசித் கிருஷ்ணா 4 போட்டிகளிலும் மட்டுமே விளையாடியுள்ளனர். அர்ஷ்தீப் சிங் இன்னும் ஒரு டெஸ்ட் போட்டியில் கூட விளையாடவில்லை.
ஒரு சிறந்த அணி பும்ராவை மட்டும் நம்பி இருக்கக் கூடாது
அதுமட்டுமன்றி இங்கிலாந்தின் 'பேஸ்பால்' எனப்படும் அதிரடி ஆட்டம் அனைவருக்கும் தெரியும். முதல் டெஸ்ட்டிலேயே இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் இதை செய்து காட்டியுள்ளனர். ஆகவே அனுபவம் இல்லாத பவுலர்களை வைத்து இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை சமாளிப்பது கடினம். முதல் டெஸ்ட்டிலேயே பும்ராவைத் தவிர மற்ற பவுலர்கள் ரன்களை வாரி வழங்கினார்கள்.
எது எப்படி இருந்தாலும் பும்ரா இல்லாமல் இந்திய அணி மற்ற பவுலர்களை வைத்து வெற்றி பெற பழகிக் கொள்ள வேண்டும். ஒரு சிறந்த அணி ஒரு வீரரை மட்டும் நம்பி இருக்காமல் அனைத்து வீரர்களையும் மேட்ச் வின்னர்களாக வைத்திருக்க வேண்டும். பும்ரா இல்லாத இந்திய இளம்படை 2வது டெஸ்ட்டில் எப்படி விளையாடுகின்றனர்? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.