IND vs BAN: அஜித் அகர்கர், அர்ஷ்தீப் சிங்கிற்கு பிறகு 3ஆவது வீரராக டி20யில் இந்த சாதனையை படைத்த மாயங்க் யாதவ்!
Mayank Yadav, T20 Cricket, India vs Bangladesh: வங்கதேசத்திற்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் மாயங்க் யாதவ் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அறிமுகமானார். தனது முதல் ஓவரை மெய்டனாக வீசி அசத்தினார்.
Mayank Yadav, India vs Bangladesh T20 Cricket
வங்கதேசத்திற்கு எதிரான 3 போட்டிகள் கொனட் டி20 தொடருக்கான இந்திய அணியில் மாயங்க் யாதவ் இடம் பெற்றிருந்தார். இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி குவாலியரில் 14 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று நடைபெற்றது. ஆனால், வேறொரு மைதானம். நியூ மாதவராவ் சிந்தியா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறும் முதல் சர்வதேச டி20 போட்டி இது தான்.
இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் டாஸ் வென்று பவுலிங் எடுத்தார். அதன்படி வங்கதேச அணியில் பர்வேஸ் ஹூசைன் எமோன் மற்றும் லிட்டன் தாஸ் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். முதல் ஓவரை வீசிய அர்ஷ்தீப் சிங் லிட்டன் தாஸ் விக்கெட்டை கைப்பற்றினார். பின்னர் 3ஆவது ஓவரில் எமோன் விக்கெட்டையும் கைப்பற்றினார்.
Mayank Yadav
இந்தப் போட்டியின் மூலமாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அறிமுகமான மாயங்க் யாதவ் போட்டியின் 6ஆவது ஓவரில் தனது முதல் ஓவரை வீசினார். டி20 கிரிக்கெட்டில் மெய்டன் ஓவர் வீசுவது எல்லாம் சர்வ சாதாரணம் கிடையாது. அப்படியொரு சாதனையை முதல் பவர்பிளேயிலேயே மாயங்க் யாதவ் படைத்துள்ளார்.
அதுமட்டுமின்றி அறிமுக டி20 கிரிக்கெட்டை மெய்டனோடு தொடங்கிய 3ஆவது இந்திய வீரர் என்ற பெருமையையும் சாதனையையும் படைத்தார். இதற்கு முன்னதாக அஜித் அகர்கர் மற்றும் அர்ஷ்தீப் சிங் இருவர் மட்டுமே தங்களது அறிமுக டி20 போட்டியில் முதல் ஓவரை மெய்டனாக வீசியிருக்கின்றனர்.
Mayank Yadav
2006 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக அஜித் அகர்கர் இந்த சாதனையை முதல் முறையாக எட்டியிருக்கிறார். இதே போன்று அர்ஷ்தீப் சிங், 2022 ஆம் ஆண்டு இங்கிலாந்திற்கு எதிராக முதல் ஓவரை மெய்டனாக வீசியிருக்கிறார்.
பின்னர் 8ஆவது ஓவரானது தனது 2ஆவது ஓவரை வீச வந்த மாயங்க் யாதவ் முதல் பந்தில் ஒரு ரன் கொடுக்க, 2ஆவது பந்தில் மஹ்மதுல்லா விக்கெட்டை கைப்பற்றினார். இந்தப் போட்டியில் வேகப்பந்து வீச்சாளரான மாயங்க் யாதவ் அதிகபட்சமாக மணிக்கு 149.9 கிமீ வேகத்தில் பந்து வீசியுள்ளார்.
Mayank Yadav T20 Cricket
மாயங்க் யாதவ் ஐபிஎல் வரலாறு:
2023 ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் மாயங்க் யாதவ்வை லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அடிப்படை விலையான ரூ.20 லட்சத்திற்கு ஏலம் எடுத்தது. ஆனால், அந்த சீசன் முழுவதும் காயம் காரணமாக மாயங்க் யாதவ் அந்த தொடரில் இடம் பெறவில்லை. 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் மூலமாக ஐபிஎல் கிரிக்கெட்டில் எண்ட்ரி கொடுத்தார். இந்தப் போட்டியில் 27 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் அதிகபட்சமாக மணிக்கு 156.7 கிமீ வேகத்தில் பந்து வீசியுள்ளார். இந்த தொடரில் வெறும் 4 போட்டிகளில் விளையாடிய மாயங்க் யாதவ் மொத்தமாக 7 விக்கெட்டுகள் கைப்பற்றினார். சிறந்த பந்து வீச்சாக 3/14 உள்ளது.
இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய வங்கதேசம் 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 127 ரன்கள் மட்டுமே எடுத்தது. வருண் சக்கரவர்த்தி, அர்ஷ்தீப் சிங் இருவரும் தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினர். ஹர்திக் பாண்டியா மற்றும் மாயங்க் யாதவ் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். பின்னர் விளையாடிய இந்திய அணி அதிரடியாக விளையாடி 11.5 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.