- Home
- Sports
- Sports Cricket
- 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டிகள் எப்போது? அட்டவணை விவரம் இதோ!
2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டிகள் எப்போது? அட்டவணை விவரம் இதோ!
2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இது குற்த்த முழு விவரங்களை பார்ப்போம்.

Cricket Schedule Released at Los Angeles Olympics 2028
உலகில் கால்பந்துக்கு அடுத்தபடியாக கிரிக்கெட் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. சில நாடுகளே விளையாடினாலும் உலகம் முழுவதையும் கிரிக்கெட் தன்வசப்படுத்தியுள்ளது. அதிலும் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் போன்ற ஆசிய நாடுகளில் கிரிக்கெட் என்பது ஒரு மதம் போன்றதாகும். கிரிக்கெட் தொடர்ந்து பிரபலமாகி வந்ததால் ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட்டை சேர்க்க வேண்டும் என்று நீண்டகாலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
ஒலிம்பிக்கில் கிரிக்கெட்
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இதற்கான முயற்சியை தொடர்ந்து எடுத்து வந்த நிலையில், 2028 ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்க்கப்படும் என்று சர்வதேச ஒலிம்பிக் குழு (IOC)அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஒலிம்பிக்கில் 6 கிரிக்கெட் அணிகள் மட்டுமே பங்கேற்க முடியும். அதாவது ஆண்கள் பிரிவில் 6 அணிகளும், பெண்கள் பிரிவில் 6 அணிகளும் என ஒவ்வொரு அணியிலும் 15 வீரர்கள் என மொத்தம் 90 கிரிக்கெட் வீரர்கள் ஒலிம்பிக்கில் பங்கேற்க அனுமதி அளிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது.
6 அணிகள் இறுதி செய்யப்படும்
ஐசிசியில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, வெஸ்ட்இண்டீஸ், நியூசிலாந்து, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே, அயர்லாந்து என 12 நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாகவும், 94 நாடுகள் அசோசியேட் உறுப்பினர்களாக உள்ளன. இதனால் ஒலிம்பிக் தொடங்குவதற்கு முன்னதாக தகுதிச்சுற்று போட்டிகள் நடத்தப்பட்டு அந்த 6 அணிகள் இறுதி செய்யப்படும் என தகவல் வெளியாகி இருந்தது.
போட்டி அட்டவணை
2028 ஒலிம்பிக்கை நடத்தும் அமெரிக்கா அணி தானாகவே தகுதி பெற்று விடும். ஆகவே மீதமுள்ள 5 அணிகள் மட்டுமே தகுதிசுற்று மூலம் உள்ளே நுழைய முடியும். மேலும் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டி டி20 வடிவத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், லாஸ் ஏஞ்சல்ஸ் 2028 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
பதக்க போட்டிகள் எப்போது?
கிரிக்கெட் போட்டிகள் ஜூலை 12, 2028 அன்று தொடங்கி ஜூலை 29, 2028 வரை நடைபெறும் என்றும் பதக்கப் போட்டிகள் ஜூலை 20 மற்றும் 29ம் தேதிகளில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டிகள் கலிபோர்னியாவின் பொமோனாவில் உள்ள ஃபேர்கிரவுண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும்.
இந்த மைதானம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து 48 கி.மீ தொலைவில் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம்பெறுவது இது முதன்முறை அல்ல. கடைசியாக 1900-ம் ஆண்டு பாரீஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம்பெற்றது. இப்போது சுமார் 128 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக்கில் கிரிக்கெட் பங்கேற்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.