- Home
- Sports
- Sports Cricket
- IND vs ENG 3rd Test: தனி ஆளாக போராடும் கே.எல்.ராகுல்! சரிவில் இருந்து மீண்ட இந்திய அணி!
IND vs ENG 3rd Test: தனி ஆளாக போராடும் கே.எல்.ராகுல்! சரிவில் இருந்து மீண்ட இந்திய அணி!
இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட்டில் கே.எல்.ராகுல் அரை சதத்தால் இந்திய அணி சரிவில் இருந்து மீண்டது

IND vs ENG Test: India Recovers From Slump With KL Rahul's Half Century
இந்தியா-இங்கிலாந்து இடையிலான 3வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழந்து 251 ரன்கள் எடுத்திருந்தது. ஜோ ரூட் 99 ரன்னிலும், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 39 ரன்னிலும் களத்தில் இருந்தனர். இன்று 2வது நாள் ஆட்டத்தை இங்கிலாந்து அணி தொடர்ந்து ஆடிய நிலையில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் பவுண்டரி அடித்து தனது 37வது டெஸ்ட் சதத்தை விளாசினார்.
பும்ரா அசத்தல் பந்துவீச்சு
இதனைத் தொடர்ந்து உடனடியாக இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 44 ரன்னில் பும்ரா பந்தில் கிளீன் போல்டானார். பின்பு சதம் விளாசிய ஜோ ரூட்டும் (104 ரன்) பும்ராவின் மேஜிக் பந்துவீச்சில் போல்டானார். அடுத்து வந்த கிறிஸ் வோக்சும் ரன் ஏதும் எடுக்காமல் பும்ரா பந்தில் நடையை கட்டினார். இதனால் இங்கிலாந்த் அணி 271/7 என பரிதவித்தது. இதன்பிறகு ஜோடி சேர்ந்த ஜேமி ஸ்மித்தும், பிரைடன் கார்சும் அதிரடியாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர்.
இங்கிலாந்து அணி ஆல் அவுட்
சூப்பாராக விளையாடி அரை சதம் அடித்த ஜேமி ஸ்மித் (51 ரன்) சிராஜ் பந்தில் கேட்ச் ஆனார். பின்பு ஜோப்ரா ஆர்ச்சர் (4) பும்ரா பந்திலும், அதிரடி அரைசதம் அடித்த பிரைடன் கார்ஸ் (56) சிராஜ் பந்திலும் அவுட்டானார்கள். இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 112 ஓவர்களில் 387 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா 27 ஓவர்களில் 74 ரன்கள் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். சிராஜ், நிதிஷ் குமார் ரெட்டி தலா 2 விக்கெட் வீழ்த்தினார்கள்.
கருண் நாயர் மீண்டும் ஏமாற்றம்
பின்பு தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 13 ரன்னில் ஜோப்ரா ஆர்ச்சர் பந்தில் கேட்ச் ஆனார். பின்பு கருண் நாயர் கே.எல்.ராகுலுடன் இணைந்து அணியை மீட்டார். ஒரளவு நன்றாக விளையாடிய அவர் அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 40 ரன்னில் பென் ஸ்டோக்ஸ் பந்தில் கேட்ச் ஆனார். ஜோ ரூட் சூப்பராக டைவ் அடித்து கேட்ச் செய்தார்.
இந்திய அணி 3 விக்கெட் இழந்தது
பின்பு களமிறங்கிய சுப்மன் கில்லும் (16) கிறிஸ் வோக்ஸ் பந்தில் கேட்ச் ஆனார். அப்போது இந்திய அணி 107/3 என்ற நிலையில் இருந்தது. ஒருபக்கம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுபக்கம் கே.எல்.ராகுல் தனக்கே உரித்தான நிதானத்தை கடைபிடித்து அணியை காப்பாற்றினார். அவருக்கு ரிஷப் பண்ட் நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார்.
2ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்துள்ளது. கே.எல்.ராகுல் 53 ரன்களுடனும், ரிஷப் பண்ட்டும் 19 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து தரப்பில் ஸ்டோக்ஸ், ஆர்ச்சர், வோக்ஸ் தலா 1 விக்கெட் வீழ்த்தியுள்ளனர்