டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக கேட்ச்கள் பிடித்த பீல்டர் என்ற வீரர் என்ற சாதனையை இங்கிலாந்தின் ஜோ ரூட் படைத்துள்ளார்.

Joe Root Sets New Record For Most Catches In Test Cricket: இங்கிலாந்து அணியின் ஸ்டார் வீரர் ஜோ ரூட் ஒரு பீல்டராக டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்துள்ளார். அதாவது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு பீல்டராக (விக்கெட் கீப்பர் அல்லாதவர்) அதிக கேட்சுகள் பிடித்த வரலாற்று சாதனையை அவர் படைத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு பீல்டராக 211 கேட்ச்கள் பிடித்துள்ள ஜோ ரூட், 210 கேட்ச்கள் பிடித்த இந்திய முன்னாள் வீரர் ராகுல் டிராவிட்டின் சாதனையை ஓவர்டேக் செய்துள்ளார்.

ஜோ ரூட் புதிய சாதனை

டெஸ்ட் கிரிக்கெட்டில் இலங்கை முன்னாள் வீரர் மஹிலா ஜெயவர்த்தனே 205 கேட்ச்களையும், தென்னாப்பிரிக்கா முன்னாள் விரர் ஜாக் காலிஸ் 200 கேட்ச்களையும், ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீபன் ஸ்மித் 200 கேட்ச்களையும் பிடித்து அசத்தியுள்ளனர். கேட்ச்சில் சாதனை படைத்த ஜோ ரூட் 3வது டெஸ்ட்டில் பேட்டிங்கிலும் அசத்தியுள்ளார். அதாவது முதல் இன்னிங்சில் சூப்பர் சதம் (104 ரன்கள்) விளாசி இங்கிலாந்து அணி 387 ரன்கள் குவிக்க முக்கிய காரணமாக விளங்கினார்.

அதிக டெஸ்ட் சதங்கள்

மேலும் ஜோ ரூட் தனது 37வது டெஸ்ட் சதத்துடன் டெஸ்ட் போட்டிகளில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் ராகுல் டிராவிட் மற்றும் ஸ்டீவ் ஸ்மித்தை முந்திச் சென்றுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் (37 சதம்) விளாசிய 5வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். தற்போது நான்கு கிரிக்கெட் வீரர்கள் மட்டுமே அவருக்கு முன்னால் உள்ளனர். சச்சின் டெண்டுல்கர் 51 சதங்களுடன் முதல் இடத்தில் உள்ளார். ஜாக் காலிஸ் 45 சதங்களுடன் 2வது இடத்திலும். ரிக்கி பாண்டிங் 41 சதங்களுடன் 3வது இடத்திலும், குமார் சங்கக்காரா 38 சதங்களுடன் 4வது இடத்திலும் உள்ளனர்.

ஜேமி ஸ்மித்தும் புதிய சாதனை

இதேபோல் இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் அதிக சதங்கள் (11சதங்கள்) அடித்த வீரர் என்ற பெருமையையும் ஜோ ரூட் பெற்றார். இந்தியாவுக்கு 11 சதங்கள் அடித்திருந்த ஸ்டீவ் ஸ்மித்தை அவர் சமன் செய்துள்ளார். இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தொடர்ந்து பேட்டிங்கில் கலக்கி வரும் இங்கிலாந்து வீரர் ஜேமி ஸ்மித்தும் டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனை ஒன்றை பதிவு செய்துள்ளார்.

அதிவேகமாக 1,000 ரன்களை எட்டிய விக்கெட் கீப்பர்

அதாவது எட்ஜ்பாஸ்டனில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் 272 ரன்கள் எடுத்து சாதனை படைத்த ஸ்மித், மூன்றாவது டெஸ்டில் 1,000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டியதன் மூலம் ஒரு பெரிய மைல்கல்லை எட்டினார். டெஸ்ட் கிரிக்கெடில் எதிர்கொண்ட பந்துகளில் 1,000 டெஸ்ட் ரன்களை வேகமாக எட்டிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ஜேமி ஸ்மித் உருவெடுத்துள்ளார். அதாவது 1303 பந்துகளில் ஸ்மித் 1,000 ரன்களை எட்டியுள்ள முதல் விக்கெட் கீப்பர் ஆவார்.

சர்ஃபராஸ் அகமது, ஆடம் கில்கிறிஸ்ட்

முன்னதாக பாகிஸ்தான் முன்னாள் விக்கெட் கீப்பர் சர்ஃபராஸ் அகமது 1311 பந்துகளில் 1,000 ரன்களையும், ஆடம் கில்கிறிஸ்ட் 1330 பந்துகளில் 1,000 ரன்களையும், நிரோஷன் டிக்வெல்ல 1367 பந்துகளில் 1,000 ரன்களையும், குயின்டன் டி காக் 1,375 ப்ந்துகளில் 1,000 ரன்களையும் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.