ஜேமி ஸ்மித் இங்கிலாந்து அணிக்காக அதிவேகமாக சதம் விளாசிய 4வது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். அதே வேளையில் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மோசமான சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
Jamie Smith Sets Record For Fastest Century: பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டனில் நடந்து வரும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து விக்கெட் கீப்பர் ஜேமி ஸ்மித், இங்கிலாந்துக்காக மூன்றாவது வேகமான சதத்தை அடித்து சாதனை படைத்துள்ளார். ஒரு கட்டத்தில் இங்கிலாந்து அணி 84/5 என தத்தளித்த நிலையில் ஹாரி ப்ரூக்குடன் ஜோடி சேர்ந்த ஜேமி ஸ்மித் வெறும் 80 பந்துகளில் அதிரடி சதம் விளாசியுள்ளார்.
ஜேமி ஸ்மித் அதிரடி சதம்
1902 ஆம் ஆண்டு இங்கிலாந்து வீரர் கில்பர்ட் ஜெசாப் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 76 பந்துகளில் சதம் அடித்தார். மற்றொரு இங்கிலாந்து வீரர் ஜானி போர்ஸ்டோ 2022 இல் ட்ரெண்ட் பிரிட்ஜில் நியூசிலாந்திற்கு எதிராக 77 பந்துகளில் சத்தை எட்டியிருந்தார். இப்போது ஜேமி ஸ்மித் 80 பந்துகளில் சதத்தை எட்டியுள்ளதன்மூலம் இங்கிலாந்துக்காக மூன்றாவது வேகமான சதத்தை அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். ஹாரி ப்ரூக் 2022 இல் ராவல்பிண்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக 80 பந்துகளில் சதம் அடித்தார். அதை ஸ்மித் சமன் செய்துள்ளார்.
நான்காவது அதிவேகமான சதம்
மேலும் ஜேமி ஸ்மித் இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் நான்காவது வேகமான சதத்தையும் அடித்துள்ளார். ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் 2012 ஆம் ஆண்டு வெறும் 69 பந்துகளில் இந்தியாவுக்கு எதிராக சதம் அடித்தார். தென்னாப்பிரிக்கா வீரர் ஏபி டிவில்லியர்ஸ் 2010ம் ஆண்டு 75 பந்துகளிலும், பாகிஸ்தான் வீரர் ஷாஹித் அப்ரிடி 2006ல் 78 பந்துகளிலும் இந்தியாவுக்கு எதிராக சதம் விளாசி இருந்தனர்.
முதல் இங்கிலாந்து வீரர்
ஜேமி ஸ்மித் மதிய உணவு இடைவேளைக்கு முன்பாக தனது சதத்தை விளாசி இருந்தார். இதன்மூலம் உணவு இடைவேளைக்கு முன்பாக சதம் அடித்த முதல் இங்கிலாந்து வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் ஜேமி ஸ்மித் மட்டுமின்றி ஹாரி ப்ரூக்கும் சதம் விளாசியுள்ளார். 137 பந்துகளில் சதம் அடித்த அவர் இந்தியாவுக்கு எதிராக தனது முதல் சதத்தை பதிவு செய்துள்ளார். இங்கிலாந்து அணி ஒரு கட்டத்தில் 84/5 என பரிதவித்த நிலையில், ஹாரி ப்ரூக் மற்றும் ஜேமி ஸ்மித் இருவரும் 6வது விக்கெட்டுக்கு 200 ரன்களை சேகரித்து இங்கிலாந்து அணியை சரிவில் இருந்து மீட்டுள்ளனர்.
பென் ஸ்டோக்ஸ் மோசமான சாதனை
இந்த இரண்டு வீரர்களும் சாதனை படைத்துள்ள போதிலும் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மோசமான சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதாவது ஸ்டோக்ஸ் தான் சந்தித்த முதல் பந்திலேயே சிராஜ் பந்தில் டக் அவுட்டாகி வெளியேறினார். அதாவது அவர் 2022ம் ஆண்டுக்கு பிறகு 16 டெஸ்ட் இன்னிங்களில் ஒற்றை இலக்க ரன்னில் அவுட்டான முதல் கேப்டன் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார்.
ரோகித் சர்மாவும் பட்டியலில் உள்ளார்
இந்த பட்டியலில் 2வது இடத்தில் உள்ள வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் கிரெய்க் பிராத்வைட் (14 இன்னிங்சில் ஒற்றை இலக்க ரன்னில் அவுட்), இந்திய ஓடிஐ கேப்டன் ரோகித் சர்மா (13 இன்னிங்சில் ஒற்றை இலக்க ரன்னில் அவுட்), வங்கதேச கேப்டன் நஜ்முல் ஷான்டோ (8 இன்னிங்சில் ஒற்றை இலக்க ரன்னில் அவுட்) ஆகியோரும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
