- Home
- Sports
- Sports Cricket
- ஆசியக் கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் மேட்ச் நடக்காது! அடித்துச் சொல்லும் சிஎஸ்கே லெஜண்ட்!
ஆசியக் கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் மேட்ச் நடக்காது! அடித்துச் சொல்லும் சிஎஸ்கே லெஜண்ட்!
ஆசியக் கோப்பை 2025ல் பாகிஸ்தானுடன் இந்தியா மோதாது என்று சிஎஸ்கே முன்னாள் வீரர் கேதர் ஜாதவ் தெரிவித்துள்ளார். இதேபோல் ஹர்பஜன் சிங்கும் பிசிசிஐயை கடுமையாக விமர்சித்துள்ளார்.

Kedar Jadhav Predicts India-Pakistan Match Will Not Happen
கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் அடுத்த மாதம் 9ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. டி20 போட்டி வடிவத்தில் நடைபெறும் இந்த தொடரில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், ஹாங்காங் ஆகிய 8 அணிகள் விளையாடுகின்றன. ஆசியக் கோப்பையில் இந்தியா தனது தொடக்க ஆட்டத்தில் யு.ஏ.இ அணியை செப்டம்பர் 10ம் தேதி எதிர்கொள்கிறது.
இந்தியா பாகிஸ்தான் மேட்ச்
இதனைத் தொடர்ந்து உலகமே எதிர்பார்க்கும் இந்தியா-பாகிஸ்தான் போட்டி செப்டம்பர் 14ம் தேதி நடைபெற உள்ளது. துபாயில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு பிறகு இரு அணிகளும் விளையாட உள்ளன. இந்த போட்டியை பலரும் ஆர்வமாக எதிர்பார்க்கும் நிலையில், ஒரு சிலர் பாகிஸ்தானுடன், இந்தியா விளையாடக் கூடாது என தெரிவித்து வருகின்றனர்.
இந்தியா பாகிஸ்தான் மேட்ச் நடக்காது
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைக் கருத்தில் கொண்டு, பிசிசிஐ பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தைப் புறக்கணிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரும், பாஜக தலைவருமான கேதர் ஜாதவ், ஆசிய கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதாது என்று உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
நாட்டை விட போட்டி முக்கியம் அல்ல
புனேயில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய கேதர் ஜாதவ், "நான் உறுதியாகக் கூறுகிறேன், ஆசிய கோப்பையில் இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடாது. நம் நாட்டை விட இந்த போட்டி முக்கியம் இல்லை. இந்திய அணி எங்கு விளையாடினாலும் வெற்றி பெறும், ஆனால் இந்தப் போட்டி நடக்காது. இந்திய வீரர்கள் இந்த போட்டியில் விளையாட மாட்டார்கள்" என்று கூறினார்.
ராணுவ வீரர்களின் தியாகத்தை நினைத்து பாருங்கள்
இதேபோல் சிஎஸ்கே மற்றும் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங், ''தேசமே எப்போதும் முதன்மையானது. எல்லையில் நமது ராணுவ வீரர்கள் உயிர் தியாகம் செய்யும் நிலையில், கிரிக்கெட் போன்ற விளையாட்டுப் போட்டிகள் முக்கியமல்ல. அவர்களின் தியாகம் நம் அனைவருக்கும் மிகவும் மகத்தானது.
அதனுடன் ஒப்பிடும்போது, இது மிகச் சிறிய விஷயம். இரத்தமும் தண்ணீரும் ஒன்றாகப் பாய முடியாது. நாம் ஏன் கிரிக்கெட்டுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோம்? கிரிக்கெட் வீரர்களுக்கு மட்டுமின்றி, நமது ஊடகங்களும் பாகிஸ்தானுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது'' என்று கூறியுள்ளார்.