ஒரு கேப்டன் இப்படி தொந்தியும் தொப்பையுமா இருக்கலாமா..? அசிங்கமா இல்ல..? ரோஹித்தை விளாசிய கபில் தேவ்
ரோஹித் சர்மாவின் ஃபிட்னெஸை முன்னாள் கேப்டன் கபில் தேவ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
சமகாலத்தின் சிறந்த வீரர்களில் ஒருவர் ரோஹித் சர்மா. ஒருநாள் கிரிக்கெட்டில் 3 இரட்டை சதங்கள் அடித்த ஒரே வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர். ஒருநாள் கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா அடித்த 264 ரன்கள் தான் அதிகபட்ச ஸ்கோர்.
ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடந்துவரும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் அபாரமாக பேட்டிங் ஆடி சதமடித்த ரோஹித் சர்மா 120 ரன்களை குவித்தார். ஆனால் 2வது டெஸ்ட்டில் பெரிதாக ஆடவில்லை. முதல் டெஸ்ட்டில் சதமடித்ததன் மூலம், டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய 3 ஃபார்மட்டிலும் கேப்டனாக சதமடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார்.
ரோஹித் சர்மா மிகச்சிறந்த பேட்ஸ்மேன் மற்றும் மிகச்சிறந்த கேப்டன் தான் என்றாலும் கூட, அவரது ஃபிட்னெஸ் எப்போதுமே கேள்விக்குள்ளானதாகவே இருந்திருக்கிறது. விராட் கோலி, ஜடேஜா, ஹர்திக் பாண்டியா, கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ் மாதிரியான ஃபிட்னெஸுடன் இல்லாமல் சற்று கூடுதல் எடையுடன் இருப்பார் ரோஹித்.
ரோஹித் சர்மா மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய இருவருக்குமே அவர்கள் கூடுதல் எடையுடன் இருப்பது விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. அவர்கள் ஃபிட்டாக இருக்க கடுமையாக உழைக்க வேண்டும் என்ற வலியுறுத்தல்கள் ஏற்கனவே எழுந்தன. குறிப்பாக கேப்டனாக இருக்கும் ரோஹித் சர்மா, ஃபிட்னெஸை பொறுத்தமட்டில் மற்ற வீரர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். ஆனால் அவரே ஃபிட்டாக இல்லாதது அசிங்கம் என்று ஏற்கன்வே விமர்சித்திருந்த முன்னாள் கேப்டன் கபில் தேவ், மீண்டும் அதே விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
ரோஹித் சர்மா அதிக எடை கொண்டவராக இருக்கிறார். டிவியில் பார்க்க அப்படித்தான் தெரிகிறார். ஃபிட்டாக இருப்பது ரொம்ப முக்கியம். அதுவும் ஒரு கேப்டனாக இருப்பவர், நல்ல ஃபிட்னெஸுடன் இருக்க வேண்டும். ஒரு கேப்டன் ஃபிட்டாக இல்லையென்றால் அது அசிங்கம். ரோஹித் சர்மா ஃபிட்னெஸை பெற கடின உழைப்பை போட வேண்டும். ரோஹித் சர்மா மிகச்சிறந்த பேட்ஸ்மேன். ஆனால் அவர் ஃபிட்டாக இல்லை. கொஞ்சம் கூடுதல் எடையுடையவராக தெரிகிறார். ரோஹித் சர்மா சிறந்த வீரர்; சிறந்த கேப்டன் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவரது ஃபிட்னெஸ் மோசமாக உள்ளது. விராட் கோலியை எப்போது பார்த்தாலும், பிரமிக்க வைக்கும் விஷயம் அவரது ஃபிட்னெஸ் தான் என்று கபில் தேவ் தெரிவித்துள்ளார்.