- Home
- Sports
- Sports Cricket
- மகளிர் உலகக்கோப்பையை வென்ற சிங்கப் பெண்கள்..! பிரதமர் மோடி முதல் முதல்வர் ஸ்டாலின் வரை வாழ்த்து மழை!
மகளிர் உலகக்கோப்பையை வென்ற சிங்கப் பெண்கள்..! பிரதமர் மோடி முதல் முதல்வர் ஸ்டாலின் வரை வாழ்த்து மழை!
முதன் முறையாக மகளிர் உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்த இந்திய அணிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர அமித்ஷா, முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் இந்திய அணிக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

மகளிர் உலகக்கோப்பையை வென்ற இந்தியா
மகளிர் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்திய இந்திய அணி முதன் முறையாக கோப்பையை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 298 ரன்கள் எடுத்தது. அதிரடியில் வெளுத்துக் கட்டிய ஷெபாலி வர்மா 78 பந்துகளில் 87 ரன்கள் விளாசினார். தீப்தி சர்மா 58 ரன்கள் எடுத்தார்.
இந்திய அணிக்கு குவியும் வாழ்த்து
பின்பு இமாலய இலக்கை நோக்கி விளையாடிய தென்னாப்பிரிக்கா அணி 45.3 ஓவர்களில் 246 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் கோப்பையை தட்டித் தூக்கி பெரும் சாதனை படைத்துள்ளது. பேட்டிங்கில் 58 ரன், பவுலிங்கில் 5 விக்கெட் வீழ்த்திய தீப்தி சர்மா ஆட்டநாயகியாக ஜொலித்தார். முதல் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி வாழ்த்து
பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், ''ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டியில் இந்திய அணி அற்புதமான வெற்றி பெற்றுள்ளது. இறுதிப் போட்டியில் அவர்களின் ஆட்டம் சிறந்த திறமையையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்தியது.
தொடர் முழுவதும் அணி மிகச்சிறந்த குழு மனப்பான்மையையும் விடாமுயற்சியையும் வெளிப்படுத்தியது. நமத்பு வீராங்கனைகளுக்கு வாழ்த்துகள். இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றி, எதிர்கால சாம்பியன்களை விளையாட்டில் ஈடுபட ஊக்குவிக்கும்'' என்று தெரிவித்துள்ளார்.
அமித்ஷாவும் வாழ்த்து
இதேபோல் உள்துறை அமைச்சர் அமித்ஷா, ''நமது அணி உலகக்கோப்பையை வென்று இந்தியாவின் பெருமையை விண்ணுக்கு உயர்த்தியிருப்பது, நாட்டிற்கு ஒரு மகுடம் சூட்டும் தருணம். உங்கள் அற்புதமான கிரிக்கெட் திறமைகள் மில்லியன் கணக்கான பெண்களுக்கு உத்வேகத்தின் பாதையை வகுத்தன. அணியின் அனைத்து வீராங்கனைகளுக்கும் வாழ்த்துகள்'' என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் புகழாரம்
மேலும் தமிழக முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், ''இந்திய கிரிக்கெட்டுக்கு என்னவொரு அற்புதமான தருணம். நமது பெண்கள் அணி ஐசிசி மகளிர் உலகக் கோப்பையை வென்றதில் இந்தியா உச்சத்தை எட்டியுள்ளது. திறமை, அமைதி மற்றும் குழுப்பணியின் அற்புதமான வெளிப்பாட்டிற்காக இந்திய அணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்த வெற்றி தலைமுறையினரை பெரிய கனவுகளைக் காணவும் தைரியமாக விளையாடவும் ஊக்குவிக்கும்'' என்று கூறியுள்ளார்.