இந்திய அணி வீராங்கனை ரிச்சா கோஷ் நடப்பு உலகக்கோப்பை தொடரில் சிக்சர் மழை புதிய சாதனை படைத்துள்ளார். இது தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம்.

இந்திய விக்கெட் கீப்பர்-பேட்டர் ரிச்சா கோஷ், ஐசிசி மகளிர் உலகக் கோப்பையின் ஒரே தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்த மேற்கிந்திய தீவுகளின் நட்சத்திர வீராங்கனை டீன்ட்ரா டாட்டினின் சாதனையை சமன் செய்து வரலாறு படைத்துள்ளார்.

பைனலில் ரிச்சா கோஷின் சூப்பர் ஆட்டம்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஐசிசி மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியின்போது ரிச்சா 24 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து முக்கிய பங்காற்றினார். இதில் மூன்று பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்கள் அடங்கும். அவரது சிறப்பான ஆட்டம் அணியின் ஸ்கோரை 290 ரன்களுக்கு மேல் உயர்த்த முக்கிய காரணமாக அமைந்தது.

புதிய சாதனை படைத்த ரிச்சா கோஷ்

தற்போது, ரிச்சா கோஷ் டாட்டின் மற்றும் தென்னாப்பிரிக்காவின் லிசெல் லீ (12) ஆகியோருடன் ஒரு மகளிர் உலகக் கோப்பை தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்த சாதனையை சமன் செய்துள்ளார். டாட்டினின் 12 சிக்ஸர்கள் 2013ம் ஆண்டு, லிசெல்லின் 12 சிக்ஸர்கள் 2017ம் ஆண்டு தொடரிலும் அடிக்கப்பட்டன.

இந்தத் தொடர் முழுவதும், ரிச்சா டெத் ஓவர்களில் (41-50 ஓவர்கள்) சிறப்பாகச் செயல்பட்டு, 165.17 என்ற சிறந்த ஸ்டிரைக் ரேட்டில் 185 ரன்கள் எடுத்து, அனைத்து பேட்டர்களிலும் அதிக ரன்கள் எடுத்தவர் என்ற பெருமையைப் பெற்றார்.

நடப்பு உலககோப்பைத் தொடரில் சூப்பர் பேட்டிங்

ரிச்சா கோஷின் அறிமுகத் உலகக் கோப்பை தொடர் சிறப்பாக அமைந்துள்ளது. அவர் எட்டு இன்னிங்ஸ்களில் 39.16 சராசரியுடன் 235 ரன்கள் எடுத்துள்ளார். இதில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அடித்த 94 ரன்கள் உட்பட ஒரு அரை சதமும் அடங்கும். அவரது ஸ்டிரைக் ரேட் 133-க்கு மேல் உள்ளது.

இந்திய அணி 289 ரன்கள்

நவி மும்பையில் இன்று நடைபெற்று வரும் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 298 ரன்கள் எடுத்தது.

ஷெபாலி வர்மா, தீப்தி சர்மா அசத்தல்

ஷெபாலி வர்மா சிறப்பாக விளையாடி 78 பந்துகளில் ஏழு பவுண்டரிகள், இரண்டு சிக்ஸர்களுடன் 87 ரன்கள் விளாசினார். தீப்தி சர்மா 58 பந்துகளில் மூன்று பவுண்டரிகள், ஒரு சிக்ஸர்களுடன் 58 ரன்கள் எடுத்தார். தென்னாப்பிரிக்கா தரப்பில் அயாபோங்கா காகா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.