- Home
- Sports
- Sports Cricket
- IND VS SA மகளிர் உலகக்கோப்பை பைனல் மழையால் ரத்தானால் யாருக்கு கோப்பை? ரிசர்வே டே உண்டா?
IND VS SA மகளிர் உலகக்கோப்பை பைனல் மழையால் ரத்தானால் யாருக்கு கோப்பை? ரிசர்வே டே உண்டா?
மகளிர் உலகக்கோப்பை பைனலில் இந்தியாவும், தென்னாப்பிரிக்காவும் இன்று மோதுகின்றன. பைனல் மழையால் ரத்தனால் யாருக்கு கோப்பை கிடைக்கும்? ரிசர்வ் டே உண்டா? என்பது குறித்து பார்ப்போம்.

மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை பைனல்
மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்தியாவும், தென்னாப்பிரிக்காவும் இன்று மோதுகின்றன. இந்தப் போட்டி நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது. பைனலில் இரு அணிகளில் யார் வெற்றி பெற்றாலும் மகளிர் கிரிக்கெட்டுக்கு ஒரு புதிய சாம்பியன் கிடைப்பது உறுதி.
முதல் முறை சாம்பியன் எந்த அணி?
ஏனெனில் இங்கிலாந்து அல்லது ஆஸ்திரேலியா இல்லாமல் மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டி நடப்பது இதுவே முதல் முறை. புதிய வரலாறு படைத்து முதல் கோப்பையை வெல்லும் முனைப்பில் இந்தியா மூன்றாவது முறையாக இறுதிப் போட்டிக்கு வந்துள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு இது முதல் இறுதிப் போட்டியாகும்.
பலம்வாய்ந்த இந்திய அணி
ஏழு முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவை அரையிறுதியில் வீழ்த்திய நம்பிக்கையுடன் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான அணி மும்பையில் சொந்த ரசிகர்கள் முன் களமிறங்குகிறது. இங்கிலாந்தை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா தனது முதல் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. லீக் சுற்றில் தென்னாப்பிரிக்காவிடம் அடைந்த மூன்று விக்கெட் தோல்விக்கு இந்திய அணி பழிதீர்க்க காத்திருக்கிறது.
ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா அசத்துவார்களா?
ஜெமிமா ரோட்ரிக்ஸின் வரலாற்று சிறப்புமிக்க சதம் இந்திய அணிக்கும் ரசிகர்களுக்கும் பெரும் உற்சாகத்தையும் நம்பிக்கையையும் அளித்துள்ளது. இதனால் அணியும் வலுப்பெற்றுள்ளது. ஷஃபாலி வர்மா மற்றும் ஸ்மிருதி மந்தனா நல்ல தொடக்கத்தை அளித்தால் இந்தியாவுக்கு வெற்றி எளிதாகும். மிடில் ஆர்டரில் ஜெமிமா, ஹர்மன்ப்ரீத் கவுர், தீப்தி ஷர்மா மற்றும் ரிச்சா கோஷ் ஆகியோர் பலம் சேர்க்கின்றனர். கிராந்தி கவுட், ஸ்ரீ சரணி மற்றும் ரேணுகா சிங்கின் பந்துவீச்சுத் திறனும் இறுதிப் போட்டியில் முக்கியப் பங்கு வகிக்கும்.
பைனலுக்கு ரிசர்வ் டே உண்டா?
இறுதிப்போட்டி நடைபெறும் நவி மும்பையில் இன்று மழை பெய்ய 25% வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இரவு 8 மணி வரை மழை பெய்யும் வாய்ப்பு 20% இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் போட்டி அடிக்கடி தடைபடும் அல்லது தாமதமாகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒருவேளை மழையால் பைனல் இன்று ரத்தானால் நாளை (திங்கட்கிழமை) ரிசர்வ் டே வில் போட்டி நடைபெறும். ரிசர்வ் டேவிலும் மழை வந்து போட்டி ரத்தானால் இரு அணிகளுக்கும் கோப்பை பகிர்ந்தளிப்படும்.