- Home
- Sports
- Sports Cricket
- IND vs SA: சூப்பர் பேட்டிங் பிட்ச்சில் பேட்ஸ்மேன்கள் தடுமாறியது ஏன்? வாஷிங்டன் சுந்தர் விளக்கம்!
IND vs SA: சூப்பர் பேட்டிங் பிட்ச்சில் பேட்ஸ்மேன்கள் தடுமாறியது ஏன்? வாஷிங்டன் சுந்தர் விளக்கம்!
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சூப்பர் பேட்டிங் பிட்ச்சில் இந்திய பேட்ஸ்மேன்கள் தடுமாறியது ஏன்? என்பது குறித்து வாஷிங்டன் சுந்தர் விளக்கம் அளித்துள்ளார்.

IND vs SA 2nd Test
கொல்கத்தாவில் நடந்த தொடரின் முதல் போட்டியில் தோல்வியடைந்த நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி 201 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 300 ரன்களுக்கு மேல் பின்தங்கி கிட்டத்தட்ட தோல்வியின் பாதையில் சென்று தொடரை பறிகொடுக்க ரெடியாகி வருகிறது.
அசாம் கவுகாத்தியின் பேட்டிங்குக்கு உகந்த பிட்ச்சில் தென்னாப்பிரிக்கா கடைநிலை வீரர்கள் கூட அற்புதமாக பேட்டிங் செய்த நிலையில், இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் யான்சனின் பந்துக்கு இரையானது அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
பேட்டிங்குக்கு உகந்த பிட்ச்சில் இந்திய அணி தடுமாற்றம்
இந்திய அணியில் ஜெய்வாலுக்கு (58 ரன் ) பிறகு வாஷிங்டன் சுந்தர் (48) சூப்பராக விளையாடினார். இன்றைய 3ம் நாள் ஆட்டம் முடிந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வாஷிங்டன் சுந்தர் கவுகாத்தி பிட்ச், பேட்டிங்கிற்கு "மிகவும் சிறந்த" விக்கெட் என்றும், இங்கு ரன்களை நீண்ட நேரம் கட்டுப்படுத்த முடியாது என்றும் வெளிப்படையாக கூறினார்.
சூப்பர் பேட்டிங் பிட்ச்
"இது சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான பிட்ச் அல்ல. இது ஒரு மிகச் சிறந்த விக்கெட். ஒரு உண்மையான விக்கெட். இந்தியாவில் இதுபோன்ற ஆடுகளங்களில் பேட்டிங் செய்ய அதிக வாய்ப்புகள் கிடைக்காது. இங்கு நிலைத்து நின்றால், ரன்களை எளிதாக எடுக்கலாம். பவுலர்களால் நீண்ட நேரம் ரன்களைக் கட்டுப்படுத்த முடியாது. இது ஒரு பிட்ச்'' என்று வாஷிங்டன் சுந்தர் தெரிவித்தார்.
யான்சன் நன்றாக பவுலிங் செய்தார்
பேட்டிங்கிற்கு சாதகமான இந்த ஆடுகளத்தில், தென்னாப்பிரிக்க ஆல்-ரவுண்டர் மார்கோ யான்சன் தனது சிறப்பான பந்துவீச்சால் (6 விக்கெட்) இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுத்தார். பிட்ச்சில் இருந்து சீரற்ற பவுன்ஸை யான்சன் பெற்றாரா என்ற கேள்விக்கு பதிலளித்த வாஷிங்டன், ''பிட்ச்சில் சீரற்ற தன்மை எதுவும் இல்லை.
அவர் உயரமானவர் என்பதால், ஷார்ட் ஆஃப் குட் லென்த்தில் இருந்து அவருக்குக் கூர்மையான பவுன்ஸ் கிடைக்கிறது. இதுபோன்ற பந்துவீச்சாளர்களை நாங்கள் நிறைய எதிர்கொண்டுள்ளோம். மற்றொரு நாளில், நாங்கள் இதே பந்துகளை இன்னும் சிறப்பாக பேட்டிங் செய்திருப்போம்'' என்றார்.
பேட்டிங் ஆர்டர் மாற்றத்தால் தொந்தரவு இல்லை
மேலும் தனது பேட்டிங் ஆர்டரை அணி நிர்வாகம் அடிக்கடி மாற்றுவது குறித்து வாஷிங்கிடம் கேட்டபோது, ''பேட்டிங் ஆர்டர் மாற்றத்தால் எனக்கு எந்த தொந்தரவும் இல்லை. அணி எப்போது வேண்டுமானாலும், அணி எங்கு வேண்டுமானாலும் பேட்டிங் செய்து பந்து வீச விரும்பினால், முதலில் முன்னேறிச் செல்லும் கிரிக்கெட் வீரராக நான் இருக்க விரும்புகிறேன். நான் தயாராக இருக்க வேண்டும். இது உற்சாகமாக இருக்கிறது. வெவ்வேறு இடங்களில் களமிறங்க எனக்கு வாய்ப்பு கிடைக்கிறது'' என்று கூறினார்.
