நீங்க பண்ணது தப்பு.. விதி மீறிய ஜடேஜா மீது ஐசிசி அதிரடி நடவடிக்கை
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட்டில் களநடுவர்களின் அனுமதியில்லாமல் கைவிரலில் வலி நிவாரணி தேய்த்து சர்ச்சைகளுக்கு வழிவகுத்த ரவீந்திர ஜடேஜாவிற்கு போட்டி ஊதியத்தில் 25 சதவிகிதம் அபராதம் விதித்துள்ளது ஐசிசி.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நாக்பூரில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி வெறும் 177 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அபாரமாக பந்துவீசிய ஜடேஜா அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளையும், அஷ்வின் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். காயத்திலிருந்து மீண்டு கம்பேக் கொடுத்த ஜடேஜா அபாரமாக பந்துவீசி 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி ரோஹித் சர்மாவின் அபார சதம்(120) மற்றும் ஜடேஜா(70), அக்ஸர் படேலின்(84) அரைசதங்களால் முதல் இன்னிங்ஸில் 400 ரன்களை குவித்தது. ஆஸ்திரேலிய அணி சார்பில் அறிமுக ஸ்பின்னர் டாட் மர்ஃபி 7 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
223 ரன்கள் பின் தங்கிய நிலையில், 2வது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி வெறும் 91 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.
இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா பேட்டிங் ஆடியபோது இன்னிங்ஸின் 46வது ஓவரை வீசிய ஜடேஜா, கைவிரலில் சிராஜிடம் இருந்து வாங்கி ஒரு க்ரீமை தேய்த்தார். இடது கை ஸ்பின்னரான ஜடேஜா, அவரது பவுலிங் கையான இடது கை ஆள்காட்டி விரலில் க்ரீமை தேய்த்தார். அந்த வீடியோ செம வைரலான நிலையில், பந்தை சேதப்படுத்துவதற்காக அந்த க்ரீமை தேய்த்ததாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் கிளப்பிவிட்டன. ஆஸி., ஊடகங்களுக்கு இதுபோன்ற வதந்திகளை கிளப்பிவிடுவது கைவந்த கலை. அவற்றிற்கு இது புதிய விஷயமும் அல்ல.
ICC WTC புள்ளி பட்டியலில் 2ம் இடத்தில் நங்கூரம் போட்ட இந்தியா..! ஆஸி.,க்கு சரிவு
ஆனால், ஜடேஜா வலி நிவாரணியைத் தான்(ஆயின்மெண்ட்) தேய்த்தார் என்றும், பந்தை சேதப்படுத்தவில்லை என்றும் இந்திய அணி மற்றும் பிசிசிஐ சார்பில் தெளிவுபடுத்தப்பட்டது. ஆனாலும் கூட, களத்தில் கள நடுவர்களின் அனுமதியின்றி ஆயின்மெண்ட் தேய்த்தது ஐசிசி விதி 2.20ன் படி குற்றம் என்பதால் போட்டி ஊதியத்தில் 25 சதவிகிதத்தை ஜடேஜாவிற்கு அபராதமாக விதித்துள்ளது ஐசிசி.