நீ இனிமே சரிப்பட்டு வரமாட்ட.. ஆஸி., டி20 அணியின் கேப்டன் அதிரடி மாற்றம்..? இந்த மூவரில் ஒருவர் புதிய கேப்டன்
ஆஸி., அணியின் டி20 கேப்டனாக ஃபின்ச்சை நீக்கிவிட்டு யாரை நியமிக்கலாம் என்று அந்த அணியின் முன்னாள் கேப்டன் இயன் சேப்பல் கருத்து தெரிவித்துள்ளார்.
2018ல் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸி., அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ஸ்மித் நீக்கப்பட்டதையடுத்து, ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டனாக ஃபின்ச்சும், டெஸ்ட் அணி கேப்டனாக டிம் பெய்னும் நியமிக்கப்பட்டனர்.
ஃபின்ச்சின் கேப்டன்சியில் ஆஸி., அணி வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் பெரிதாக எதுவும் சாதிக்காதது மட்டுமின்றி, தோல்விகளையும் சந்தித்துவருகிறது. நியூசிலாந்துக்கு எதிராக நடந்துவரும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 2 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இரண்டிலுமே ஆஸ்திரேலிய அணி தோற்றது.
ஆஸி., அணியின் கேப்டன் ஃபின்ச் முதல் மற்றும் 2வது டி20 போட்டிகளில் முறையே 1 மற்றும் 12 ரன்கள் மட்டுமே அடித்தார். பேட்டிங்கில் ஃபின்ச் தொடர்ந்து சொதப்பி கொண்டிருக்கும் நிலையில், அவரது கேப்டன்சி மீதான விமர்சனமும் எழுந்துள்ளது. டி20 அணிக்கு புதிய கேப்டனை நியமிப்பது குறித்தும் கருத்துகள் பரவலாக எழ தொடங்கியுள்ளன.
இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஆஸி., அணியின் முன்னாள் கேப்டன் இயன் சேப்பல், பாட் கம்மின்ஸ் சிறந்த கேப்டன். அலெக்ஸ் கேரி பிபிஎல்லில் அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணியின் கேப்டனாக இருந்து அனுபவம் பெற்றவர். அவரும் கேப்டனாக அணியை வழிநடத்துவதற்கு சரியான வீரர். மற்றொருவர் மோய்ஸஸ் ஹென்ரிக்ஸ், பிபிஎல்லில் சிட்னி சிக்ஸர்ஸ் அணிக்கு கோப்பைகளை வென்று கொடுத்தவர். எனவே இவர்கள் மூவரில் ஒருவரை கேப்டனாக நியமிக்கலாம் என்று இயன் சேப்பல் கூறியுள்ளார்.