IPL15 சீசன்களில் அசத்திய வீரர்களுக்கு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் விருது வழங்கி கௌரவிப்பு! விருது வென்றவர்களின் விவரம்
ஐபிஎல்லில் 15 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்துள்ளது. 16வது சீசன் வரும் மார்ச் 31ம் தேதி தொடங்குகிறது. ஐபிஎல் 15 சீசன்களில் அபாரமாக ஆடி அசத்திய வீரர்களுக்கு ஐபிஎல் ஒளிபரப்பாளரான ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் விருதுகளை வழங்கி கௌரவித்துள்ளது. எந்தெந்த வீரர்கள் என்னென்ன விருதுகளை வென்றுள்ளனர் என்று பார்ப்போம்.
1. சிறந்த கேப்டன் - ரோஹித் சர்மா
2013 ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன்சியை ஏற்ற ரோஹித் சர்மா, மும்பை இந்தியன்ஸுக்கு 5 முறை கோப்பையை வென்று கொடுத்து, அதிகமுறை கோப்பையை வென்ற கேப்டன் என்ற சாதனையை படைத்துள்ளார். அதிகமுறை கோப்பையை வென்ற அணி என்ற பெருமையை மும்பை இந்தியன்ஸுக்கு பெற்று கொடுத்தார். அதனால் ஐபிஎல்லின் சிறந்த கேப்டன் விருது ரோஹித் சர்மாவுக்கு வழங்கப்பட்டது.
2. சிறந்த பேட்ஸ்மேன் - ஏபி டிவில்லியர்ஸ்
தென்னாப்பிரிக்காவின் முன்னாள் லெஜண்ட் பேட்ஸ்மேன் ஏபி டிவில்லியர்ஸ் ஐபிஎல்லில் 184 இன்னிங்ஸ்களில் ஆடி 5162 ரன்களை குவித்துள்ளார். அவரது ஸ்டிரைக் ரேட் 151.69 ஆகும். சராசரி 39.71. ஐபிஎல்லில் அவரது அதிகபட்ச ஸ்கோர் 133. ஆர்சிபி அணிக்காக அபாரமாக ஆடியுள்ள டிவில்லியர்ஸ், அந்த அணிக்கு மிகச்சிறந்த பங்களிப்பை வழங்கியிருக்கிறார். ஐபிஎல் கோப்பையை அந்த அணிக்கு வென்று கொடுக்க முடியவில்லை என்பது மட்டுமே ஒரே மைனஸ். அவருக்கு 15 சீசனின் சிறந்த பேட்ஸ்மேன் என்ற விருதை வழங்கி கௌரவித்துள்ளது ஸ்டார் ஸ்போர்ட்ஸ்.
3. சிறந்த பவுலர் - ஜஸ்ப்ரித் பும்ரா
ஐபிஎல்லில் 2013ம் ஆண்டிலிருந்து மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆடிவரும் ஜஸ்ப்ரித் பும்ரா அபாரமாக பந்துவீசியதன் விளைவாக இந்திய அணியிலும் இடம்பிடித்து சாதித்திருக்கிறார். ஐபிஎல்லில் 145 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜஸ்ப்ரித் பும்ராவிற்கு சிறந்த பவுலர் என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.
4. வியக்கத்தகு தாக்கத்தை ஏற்படுத்திய வீரர் - ஆண்ட்ரே ரசல்
ஐபிஎல்லில் வியக்கத்தகு வகையில் தாக்கத்தை ஏற்படுத்திய வீரருக்கான விருது கேகேஆர் ஃபினிஷர் - ஆல்ரவுண்டர் ஆண்ட்ரே ரசலுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. டெத் ஓவர்களில் அசாத்தியமாக பேட்டிங் ஆடி தனி ஒருவனாக கேகேஆர் அணிக்கு பல வெற்றிகளை பெற்றுக்கொடுத்துள்ள ரசலுக்கு வியக்கத்தகு தாக்கத்தை ஏற்படுத்திய வீரருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
5. ஒரு குறிப்பிட்ட சீசனின் சிறந்த பேட்ஸ்மேன் - விராட் கோலி
2016 ஐபிஎல்லில் 4 சதங்களுடன் 973 ரன்களை குவித்து, ஒரு சீசனில் அதிக ரன்களை குவித்த வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரராக திகழும் விராட் கோலி, சீசனின் சிறந்த ஆட்டக்காரருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
6 சீசனின் சிறந்த பவுலர் - சுனில் நரைன்
ஐபிஎல்லின் வெற்றிகரமான வீரர்களில் ஒருவரான சுனில் நரைன், கேகேஆர் அணிக்காக பல அருமையான ஸ்பெல்களை வீசியிருக்கிறார். 2012 ஐபிஎல்லில் 24 விக்கெட்டுகளை வீழ்த்தி, முதல் முறையாக கேகேஆர் அணி ஐபிஎல் கோப்பையை வெல்ல காரணமாக இருந்த சுனில் நரைனுக்கு இந்த விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.