- Home
- Sports
- Sports Cricket
- IND vs SA: களத்தில் ஓவர் சீன்.. கம்பீர் பேவரிட் பவுலருக்கு ஆப்பு வைத்த ஐசிசி.. பாய்ந்த நடவடிக்கை!
IND vs SA: களத்தில் ஓவர் சீன்.. கம்பீர் பேவரிட் பவுலருக்கு ஆப்பு வைத்த ஐசிசி.. பாய்ந்த நடவடிக்கை!
IND vs SA ODI: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் களத்தில் தேவையில்லாத செயலில் ஈடுபட்ட ஹர்சித் ராணாவுக்கு எதிராக ஐசிசி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

முதல் ஓடிஐயில் இந்தியா வெற்றி
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் போராடி வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 349 ரன்கள் குவித்தது. விராட் கோலி சூப்பர் சதம் (120 பந்துகளில் 135 ரன்கள்) விளாசினார். பின்பு ஆடிய தென்னாப்பிரிக்கா அணி 332 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி போராடி தோல்வி அடைந்தது. மேத்யூ பிரீட்ஸ்க்கே (72), மார்கோ யான்சன் (70), கார்பின் போஷ் (67) அரை சதம் அடித்தனர்.
ஹர்சித் ராணாவின் சைகை
இந்த நிலையில் முதல் ஒருநாள் போட்டியில் விக்கெட் வீழ்த்திய பிறகு ஆக்ரோஷமாக கொண்டாடியதற்காக இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணாவுக்கு ஐசிசி எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதாவது தென்னாப்பிரிக்கா வீரர் டெவால்ட் பிராவிஸ் அதிரடியாக 28 பந்தில் 3 சிக்சருடன் 37 ரன்கள் அடித்து ஹர்சித் ராணா பந்தில் ருத்ராஜ் கெய்க்வாட்டிடம் கேட்ச் ஆனார். அவுட் ஆனவுடன் ஹர்சித் ராணா வெளியே செல்லும்படி ஆக்ரோஷமாக சைகை காட்டினார்.
ஐசிசி எடுத்த நடவடிக்கை
இதன் காரணமாக எதிரணி வீரரிடம் தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தியதற்காக அல்லது ஆத்திரமூட்டும் வகையில் நடந்து கொண்டதற்காக ஐசிசி நடத்தை விதிகளின் பிரிவு 2.5 இன் கீழ் ஹர்ஷித் ராணா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எச்சரிக்கையுடன் கூடுதலாக, ஹர்ஷித்தின் தவறான நடத்தைக்காக ஒரு தகுதி நீக்கப் புள்ளியையும் ஐசிசி விதித்துள்ளது.
சிறப்பாக பந்துவீசிய ராணா
ஐ.சி.சி போட்டி நடுவர் ரிச்சி ரிச்சர்ட்ஸிடம் ராணா தனது தவறை ஒப்புக்கொண்டார். இதனால் மேற்கொண்டு விசாரணை இல்லாமல் அவருக்கு தண்டனை வழங்கப்பட்டது.
களத்தில் ஹர்சித் ராணா ஓவர் சீன் காண்பித்தாலும் முதல் ஒருநாள் போட்டியில் அவர் சிறப்பாக பவுலிங் செய்தார். 10 ஓவர்களில் 65 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடக்கத்தில் அவர் வீழ்த்திய இரண்டு விக்கெட்டுகளே இந்திய அணி வெற்றி பெற முக்கிய காரணமாக விளங்கியது.
கவுதம் கம்பீருக்கு பிடித்தமான வீரர்
ஹர்சித் ராணா இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கு மிகவும் பிடித்தமான ஒரு வீரர் ஆவார். கம்பீர் தயவால் தான் ஹர்சித் டெஸ்ட், ஓடிஐ மற்றும் டி20 என அனைத்து பார்மட்களிலும் இடம்பிடித்து வருவதாக சர்ச்சை எழுந்தது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஓடிஐ தொடரிலும் ஷமிக்கு பதிலாக ஹர்சித்துக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் ஹர்சித் முதல் ஓடிஐயில் சிறப்பாக செயல்பட்டு விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்து விட்டார்.

