- Home
- Sports
- Sports Cricket
- RR vs GT: ராஜஸ்தானை பந்தாடி மாஸாக பைனல் சென்ற குஜராத்! சுப்மன் கில் மிரட்டல் சதம் விளாசி சாதனை!
RR vs GT: ராஜஸ்தானை பந்தாடி மாஸாக பைனல் சென்ற குஜராத்! சுப்மன் கில் மிரட்டல் சதம் விளாசி சாதனை!
RR vs GT: ஐபிஎல் 2026 இரண்டாவது குவாலிஃபையர் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை பந்தாடிய குஜராத் டைட்டன்ஸ் கெத்தாக இறுதிப்போட்டிக்குள் சென்றுள்ளது. சுப்மன் கில் சூப்பர் சதம் விளாசினார். பைனலில் ஆர்சிபி, குஜராத் பலப்பரீட்சை நடத்துகின்றன.

ராஜஸ்தானை வீழ்த்தி பைனல் சென்ற குஜராத் டைட்டன்ஸ்
ஐபிஎல் 2026 இரண்டாவது குவாலிஃபையர் போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி ஃபைனலுக்கு முன்னேறியுள்ளது. இந்த போட்டியில் டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ், 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் எடுத்தது. வைபவ் சூர்யவன்ஷி 47 பந்துகளில் 96 ரன்கள் அடித்து அசத்தினார். ரவீந்திர ஜடேஜா 35 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தார். ரஷித் கான் வீசிய கடைசி ஓவரில் நான்கு சிக்ஸர்கள் உட்பட 27 ரன்கள் விளாசிய டொனோவன் ஃபெரேரா, 11 பந்துகளில் 38 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். குஜராத் தரப்பில் ஜேசன் ஹோல்டர் மற்றும் காகிசோ ரபாடா தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
சுப்மன் கில் மிரட்டல் சதம்
பின்பு ராஜஸ்தான் அணி நிர்ணயித்த 215 ரன்கள் என்ற பிரம்மாண்ட இலக்கை, கேப்டன் சுப்மன் கில்லின் சதம் மற்றும் சாய் சுதர்சன் அரைசதத்தின் உதவியுடன் குஜராத் அணி 18.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து எளிதாக எட்டியது. 47 பந்துகளில் சதம் அடித்த கில், 53 பந்துகளில் 104 ரன்கள் குவித்து பிரம்மாண்ட சாதனை படைத்தார். இவர் 15 பவுண்டரிகளும், 3 சிக்சர்களும் விளாசினார்.
கில் - சுதர்ஷன் ஜோடி அசத்தல்
சிறப்பாக விளையாடிய சாய் சுதர்சன் 32 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து, தொடர்ச்சியாக இரண்டாவது போட்டியில் ஹிட் விக்கெட் முறையில் ஆட்டமிழந்தார். வாஷிங்டன் சுந்தர் 9 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ராகுல் தெவாட்டியா 9 பந்துகளில் 17 ரன்களுடனும், ஜோஸ் பட்லர் 9 பந்துகளில் 9 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்து வெற்றியை உறுதி செய்தனர். தொடக்க விக்கெட்டுக்கு கில் - சுதர்ஷன் ஜோடி 12.5 ஓவர்களில் 168 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தது. முதலாவது குவாலிஃபையர் போட்டியில் ஆர்சிபிக்கு எதிராக படுதோல்வி அடைந்த குஜராத் டைட்டன்ஸ், இப்போது மெகா வெற்றியை சுவைத்து இறுதிப்போட்டிக்குள் சென்றுள்ளது.
ஐபிஎல் 2026 பைனலில் ஆர்சிபி, குஜராத் டைட்டன்ஸ் மோதல்
மே 31ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அகமதாபாத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில் குஜராத் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. முதலாவது குவாலிஃபையர் போட்டியில் அடைந்த தோல்விக்கு குஜராத் பழிதீர்த்து ஆர்சிபியை வீழ்த்தி கோப்பையை வெல்லுமா? இல்லை ஆர்சிபி தனது ஆதிக்கத்தை தொடர்ந்து குஜராத்தை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

