- Home
- Sports
- Sports Cricket
- ஐபிஎல்லில் சதம் விளாசிய முதல் சகோதரர்கள்! பேட்டிங்கில் கலக்கிய அண்ணன்-தம்பி சாதனை!
ஐபிஎல்லில் சதம் விளாசிய முதல் சகோதரர்கள்! பேட்டிங்கில் கலக்கிய அண்ணன்-தம்பி சாதனை!
மிட்செல் மார்ஷ் மற்றும் அவரது அண்ணன் ஷான் மார்ஷ் ஐபிஎல்லில் சதங்களை பதிவு செய்த முதல் சகோதரர் ஜோடி என்ற பெருமையை பெற்றுள்ளனர்.

Mitchell Marsh and Shaun Marsh New Record
ஐபிஎல்லில் நேற்று நடந்த குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழந்து 235 ரன்கள் குவித்தது.
தொடக்க வீரர் மிட்ச்செல் மார்ஷ் வெறும் 64 பந்துகளில் 8 சிக்சர்கள் மற்றும் 10 பவுண்டரிகளுடன் 117 ரன்கள் குவித்தார். நிகோலஸ் பூரன் 27 பந்தில் 56 ரன்கள் அடித்தார். பின்பு விளையாடிய குஜராத் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழந்து 202 ரன்கள் எடுத்தது.
மிட்ச்செல் மார்ஷ்-ஷான் மார்ஷ் சாதனை
தமிழ்நாடு வீரர் ஷாருக்கான் 29 பந்தில் 57 ரன்கள் அடித்தும் பயனில்லை. லக்னோ தரப்பில் வில் ஓ ரூர்க் 4 ஓவர்களில் 27 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட் சாய்த்தார். ஐபிஎல்லில் தனது முதல் சதம் விளாசிய மிட்ச்செல் மார்ஷ் ஆட்டநாயகன் விருது வென்றார்.
மேலும் மிட்ச்செல் மார்ஷ் தனது அண்ணனுமான ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரருமான ஷான் மார்ஷ் உடன் இணைந்து புதிய சாதனை படைத்தார்.
பஞ்சாப் கிங்ஸ் வீரர் ஷான் மார்ஷ்
அதாவது மிட்செல் மார்ஷ் மற்றும் சகோதரர் ஷான் மார்ஷ் ஐபிஎல் சதங்களை பதிவு செய்த முதல் சகோதரர் ஜோடி ஆனார்கள். மிட்செல் மார்ஷ் நேற்று குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக தனது சதத்தை அடித்தாலும், ஷான் மார்ஷ் 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடக்க சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக சதம் அடித்திருந்தார்.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் (இப்போது பஞ்சாப் கிங்ஸ்) அணிக்காக விளையாடிய ஷான் மார்ஷ் 2008 ஆம் ஆண்டு தொடக்க சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 69 பந்துகளில் 115 ரன்கள் விளாசி இருந்தார்.
மிட்செல் மார்ஷ் புதிய சாதனை
2025 ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் மிட்செல் மார்ஷ் ஐபிஎல்லில் சதம் அடித்த 11வது ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையை பெற்றார். மேலும் குயின்டன் டி காக் (vs KKR, 2022), மார்கஸ் ஸ்டோய்னிஸ் (vs CSK, 2024) மற்றும் KL ராகுல் (vs மும்பை இந்தியன்ஸ், 2022) ஆகியோருக்குப் பிறகு ஐபிஎல் சதம் அடித்த நான்காவது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.
ஐபிஎல்லில் விளையாடிய சகோதர்களின் பட்டியல்:
மிட்ச்செல் மார்ஷ்-ஷான் மார்ஷ்
யூசுப் பதான் - இர்பான் பதான்
மைக்கேல் ஹஸ்ஸி - டேவிட் ஹஸ்ஸி
ஹர்திக் பாண்டியா - க்ருனால் பாண்டியா
ஆல்பி மோர்கல் - மோர்னே மோர்கல்
பிரண்டன் மெக்கல்லம் - நாதன் மெக்கல்லம்
டுவைன் பிராவோ - டேரன் பிராவோ
சித்தார்த் கவுல் - உதய் கவுல்
சாம் கர்ரன் - டாம் கர்ரன்
மார்கோ ஜான்சன் - டுவான் ஜான்சன்