- Home
- Sports
- Sports Cricket
- சில நேரங்களில் தோற்பதும் நல்லது! வாய் விட்ட ஆர்சிபி கேப்டன்! வச்சி செய்யும் ரசிகர்கள்!
சில நேரங்களில் தோற்பதும் நல்லது! வாய் விட்ட ஆர்சிபி கேப்டன்! வச்சி செய்யும் ரசிகர்கள்!
'சில நேரங்களில் தோற்பதும் நல்லது தான்' என ஆர்சிபி கேப்டன் கூறிய நிலையில், அவரை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

RCB Fans condemned Captain Jitesh Sharma
ஐபிஎல்லில் நேற்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆர்சிபி 42 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 6 விக்கெட் இழந்து 231 ரன்கள் குவித்தது. இஷான் கிஷன் 48 பந்தில் 94 ரன்கள் குவித்தார்.
பின்பு விளையாடிய ஆர்சிபி 19.5 ஓவர்களில் 189 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. பில் சால்ட் (32 பந்தில் 62 ரன்கள்), விராட் கோலி (25 பந்தில் 43 ரன்) சிறப்பாக விளையாடியும் பயனில்லை. ஜோஸ் ஹேசில்வுட் இல்லாதது ஆர்சிபி அணியில் மிகப்பெரும் பின்னடைவாக உள்ளது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக ஆர்சிபி தோல்வி
இந்த தோல்வியின் மூலம் ஆர்சிபி அணி முதல் 2 இடங்களை பிடிக்கும் வாய்ப்பு குறைந்துள்ளது. இதனால் ஆர்சிபி ரசிகர்கள் சோகத்தில் உள்ள நிலையில், 'சில நேரங்களில் தோற்பதும் நல்லது தான்' என்று ஆர்சிபியின் பொறுப்பு கேப்டன் ஜிதேஷ் சர்மா கூறியிருப்பது ரசிகர்களை கொதிப்படைய செய்துள்ளது.
அதாவது போட்டிக்கு பிறகு பேசிய ஜிதேஷ் சர்மா, ''சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு கூடுதலாக 20 முதல் 30 ரன்கள் விட்டுக் கொடுத்து விட்டோம். பவர்பிளேயில் அவர்கள் சிறப்பாக விளையாடினார்கள்'' என்றார்.
தோல்விக்கு காரணம் சொன்ன ஆர்சிபி கேப்டன் ஜிதேஷ் சர்மா
தொடர்ந்து பேசிய ஜிதேஷ் சர்மா, ''ஆட்டத்தின் தொடக்கத்தில் நாங்கள் தீவிரமாக செயல்படவில்லை. ஆனாலும் எங்களுடைய பந்து வீச்சாளர்கள் உண்மையிலேயே சிறப்பாக செயல்பட்டனர். ஆனால் இந்த ஆட்டத்தில் தோற்றது நல்லது என்று நான் நினைக்கிறேன். சில நேரங்களில் ஒரு ஆட்டத்தில் தோற்றது ஒரு நல்ல அறிகுறியாகும்.
ஏனென்றால் நீங்கள் எங்கு குறைபாடு உள்ளீர்கள் என்பதை சரிபார்த்து பகுப்பாய்வு செய்யலாம். நீங்கள் தொடர்ந்து வெற்றி பெற்றால், உங்கள் தவறுகளை நீங்கள் பார்க்க மாட்டீர்கள். இந்த தோல்விக்க்கான காரணங்களை பகுப்பாய்வு செய்வோம்'' என்று தெரிவித்தார்.
ஜிதேஷ் சர்மாவுக்கு ரசிகர்கள் கண்டனம்
ஆர்சிபி கேப்டன் இப்படி பொறுப்பில்லாமல் பேசியதற்கு அந்த அணியின் ரசிகர்கள் அவரை விமர்சனம் செய்து வருகின்றனர். ''இது ஆர்சிபிக்கு ஒரு முக்கியமான மேட்ச். இதில் ஜெயித்தால் முதல் 2 இடங்களுக்குள் சென்று கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு இருக்கும்.
ஆனால் இது எல்லாவற்றையும் நினைவில் கொள்ளாமல் தோற்பதும் நல்லது தான் என ஜிதேஷ் சர்மா பேசியதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது'' என்று ஆர்சிபி ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
ரஜத் படிதார் ஏன் கேப்டனாக செயல்படவில்லை?
''நேற்றைய ஆட்டத்தில் ஜிதேஷ் சர்மாவை கேப்டனாக நியமித்து இருக்க கூடாது. புவனேஷ்வர் குமார் அல்லது விராட் கோலியை கேப்டனாக போட்டு இருக்க வேண்டும்'' என்று ஒரு சில ரசிகர்கள் ஆவேசமாக தெரிவித்தார். காயத்தால் அவதிப்பட்டு வரும் ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதார் நேற்றைய போட்டில் இம்பேக்ட் வீரராக களமிறங்கினார். இதனால் ஜிதேஷ் சர்மா கேப்டனாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.