- Home
- Sports
- Sports Cricket
- IND vs ENG Test: இந்திய அணிக்கு நிம்மதி! கடைசி நேரத்தில் விலகிய இங்கிலாந்தின் ஸ்டார் வீரர்!
IND vs ENG Test: இந்திய அணிக்கு நிம்மதி! கடைசி நேரத்தில் விலகிய இங்கிலாந்தின் ஸ்டார் வீரர்!
இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் ஜோப்ரா ஆர்ச்சர் இடம்பெறவில்லை. இங்கிலாந்து பிளேயிங் அறிவிக்கப்பட்டுள்ளது.

England Playing Eleven For 2nd Test Against India
இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் லீட்ஸில் நடந்த முதல் போட்டியில் இங்கிலாந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியின் ஆலி போப், பென் டக்கெட் சதம் விளாசி வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்கினார்கள். பவுலிங்கில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், ஜோஷ் டங் ஆகியோரும் மேட்ச் வின்னர்களாக ஜொலித்தார்.
இங்கிலாந்து அணி அறிவிப்பு
இதேபோல் ஹாரி ப்ரூக், ஜேக் க்ரொலி அரை சதம் விளாசி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தனர். இந்த தொடரில் இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வரும் நிலையில், இரண்டாவது டெஸ்டுக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் டெஸ்டில் விளையாடிய அதே அணியே இரண்டாவது டெஸ்ட் போட்டியில் களமிறங்குகிறது. அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் இங்கிலாந்து அணியில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் இரண்டாவது டெஸ்டுக்கான அணியில் இடம்பெறவில்லை.
அதே அணி களமிறங்குகிறது
முதல் டெஸ்டில் விளையாடிய பிரைடன் கார்ஸ், ஜோஷ் டங், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் இரண்டாவது டெஸ்டிலும் வேகப்பந்து வீச்சாளர்களாக விளையாடுவார்கள். கேப்டன் பென் ஸ்டோக்ஸ் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக களமிறங்குவார். ஷோயப் பஷீர் மட்டுமே அணியில் சுழற்பந்து வீச்சாளராக உள்ளார்.
கவுண்டி கிரிக்கெட்டில் சசெக்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்டதால் ஜோஃப்ரா ஆர்ச்சர் இரண்டாவது டெஸ்டுக்கான அணியில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இங்கிலாந்து அணி பிளேயிங் லெவன்
ஆனால், குடும்பத்தில் ஏற்பட்ட அவசர காரணமாக ஆர்ச்சர் இன்று பயிற்சி முகாமில் இருந்து வெளியேறியதால் அவர் இரண்டாவது டெஸ்டில் விளையாடவில்லை. முதல் டெஸ்டில் சிறப்பாக செயல்பட்ட பென் டக்கெட், சாக் கிராலி, ஒல்லி போப், ஜோ ரூட், ஹாரி புரூக் ஆகியோர் இரண்டாவது டெஸ்டிலும் விளையாடுவார்கள்.
இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணி: பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), சாக் கிராலி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், ஜேமி ஸ்மித், கிறிஸ் வோக்ஸ், பிரைடன் கார்ஸ், ஜோஷ் டங் மற்றும் ஷோயப் பஷீர்.
ஜோப்ரா ஆர்ச்சர் ஏன் விளையாடவில்லை?
அடிக்கடி காயத்தில் சிக்கிய ஜோப்ரா ஆர்ச்சர், இங்கிலாந்து அணிக்காக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடினார். அதன்பிறகு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடினார். நீண்ட காலம் டெஸ்ட் போட்டிகளில் விளையாடாமல் இருந்த அவர் சசெக்ஸ் அணிக்காக களமிறங்கி விளையாடினார். இதனால் அவர் 2வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
அதன்படி அவர் இங்கிலாந்து அணியினருடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டார். ஆனால் குடும்ப பிரச்சனை காரணமாக அவர் திடீரென அணியில் இருந்து விலகி சென்றுள்ளார். இதனால் தான் 2வது டெஸ்ட் போட்டிக்கான அணியில் சேர்க்கப்படவில்லை. ஜோப்ரா ஆர்ச்சர் இடம் பெறாதது இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நிம்மதி அளித்துள்ளது.