IND vs ENG: மான்செஸ்டர் டெஸ்டில் 5 சவால்களை எதிர்கொள்ளும் இந்திய அணி
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 1-2 என்ற கணக்கில் பின்தங்கியுள்ள இந்திய அணி, மான்செஸ்டரில் நடைபெறும் 4வது டெஸ்டில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

IND vs ENG: மான்செஸ்டர் டெஸ்ட் போட்டி
இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி தற்போது 1-2 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது. லார்ட்ஸில் நடந்த கடைசி போட்டியில் 22 ரன்கள் வித்தியாசத்தில் ஏற்பட்ட தோல்வி பெரும் ஏமாற்றத்தை அளித்தது. முன்னதாக, ஹெடிங்லேயில் நடந்த முதல் போட்டியில் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்த இந்தியா, எட்ஜ்பாஸ்டனில் நடந்த இரண்டாவது போட்டியில் 336 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது.
லார்ட்ஸில் நடந்த நான்காவது இன்னிங்ஸில் 193 ரன்கள் என்ற இலக்கை துரத்திச் சென்ற இந்திய அணி, ரவீந்திர ஜடேஜாவின் வலுவான போராட்டத்திற்குப் பிறகும் 170 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி, தொடரில் முன்னிலை பெறும் வாய்ப்பை இழந்தது. ஜூலை 23 அன்று மான்செஸ்டரில் ஓல்ட் டிராஃபோர்டு மைதானத்தில் 4வது டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது. தொடரை வெல்லும் வாய்ப்பைத் தக்கவைக்க இந்தப் போட்டியில் வெல்ல வேண்டும் என்ற அழுத்தம் இந்திய அணிக்கு உள்ளது. அந்தப் போட்டியில் வெற்றி பெற இந்திய அணி சில பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டியது அவசியம்.
நம்பர் 3 சிக்கல்
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் மூன்று போட்டிகளில் சாய் சுதர்சன் மற்றும் கருண் நாயர் என இரு வீரர்களை நம்பர் 3 இடத்தில் இந்திய அணி நிர்வாகம் முயற்சித்துள்ளது. சுதர்சன் ஹெடிங்லேயில் நடந்த முதல் டெஸ்டில் 0 மற்றும் 30 ரன்கள் எடுத்தார். அதன் பிறகு எட்ஜ்பாஸ்டன் மற்றும் லார்ட்ஸ் ஆகிய அடுத்த இரண்டு போட்டிகளில் இருந்து அவர் நீக்கப்பட்டார். கருண் நாயர் தொடரின் கடைசி இரண்டு போட்டிகளில் நம்பர் 3 இடத்திற்கு உயர்த்தப்பட்டார்.
இருப்பினும், இந்த வாய்ப்பை கருண் நாயர் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை. பர்மிங்காமில் 31 மற்றும் 26 ரன்களும், லார்ட்ஸில் 40 மற்றும் 14 ரன்களும் மட்டுமே எடுத்தார். இதனால் டாப்-ஆர்டர் குறித்த கவலை உருவாகியுள்ளது. கருண் நாயர் கடந்த நான்கு இன்னிங்ஸ்களில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதனால், முக்கியமான மான்செஸ்டர் டெஸ்டில் சாய் சுதர்சனை மீண்டும் களமிறக்கி 3வது பேட்டராக ஆட வைக்க வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கில், ஜெய்ஸ்வால் பேட்டிங்
நான்காவது டெஸ்டுக்கு முன்னதாக, சுப்மன் கில் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் மீண்டும் ரன்குவிப்புக்குத் திரும்ப வேண்டும். இந்திய அணி கேப்டன் கில், தொடரின் தொடக்கத்தில் ஹெடிங்லேயில் 147 மற்றும் 8 ரன்களும், அதைத் தொடர்ந்து எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் 269 மற்றும் 161 ரன்களும் எடுத்து அற்புதமான தொடக்கத்தை அளித்தார். இருப்பினும், லார்ட்ஸில் அவர் 16 மற்றும் 6 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதனால் இந்தத் தொடரில் அவரது பேட்டிங் சராசரி 146 இலிருந்து 101 ஆகக் குறைந்தது.
ஜெய்ஸ்வால்கூட, ஹெடிங்லே டெஸ்டில் 101 மற்றும் 4 ரன்களும், எட்ஜ்பாஸ்டனில் 87 மற்றும் 28 ரன்களும் எடுத்து வலுவான தொடக்கத்தை அளித்தார். இருப்பினும், 23 வயதான இவர் லார்ட்ஸில் இரண்டு இன்னிங்ஸ்களில் 13 மற்றும் 0 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றினார். மான்செஸ்டர் டெஸ்டில் இவர்கள் இருவரும் ஆகியோர் தங்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்.
பும்ராவின் பணிச்சுமை
இந்திய அணி நிர்வாகம் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவை நான்காவது டெஸ்டில் விளையாட வைக்கலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் உள்ளது. இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு முன்பே பும்ரா மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார் என்று அணி நிர்வாகம் முடிவு செய்திருந்தது. பும்ரா ஹெடிங்லே மற்றும் லார்ட்ஸில் விளையாடி, 12 விக்கெட்டுகளை வீழ்த்தினார். எட்ஜ்பாஸ்டனில் நடந்த இரண்டாவது டெஸ்டில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.
1-2 என்ற கணக்கில் பின்தங்கியுள்ள நிலையில், டெஸ்ட் தொடரில் இந்தியாவின் வெற்றி வாய்ப்பை அதிகரிக்க ஜஸ்பிரித் பும்ராவை அணியில் சேர்ப்பது மிகவும் முக்கியமானதாகிவிட்டது. லார்ட்ஸ் மற்றும் மான்செஸ்டர் டெஸ்ட் போட்டிகளுக்கு இடையே 8 நாட்கள் இடைவெளி இருப்பதால், அடுத்த போட்டியில் பும்ராவை விளையாட வைத்து ரிஸ்க் எடுப்பதா அல்லது ஓவலில் நடக்கும் கடைசி போட்டியில் அவரைக் களமிறக்குவதா என இந்திய அணி ஆலோசிக்கிறது.
குல்தீப் யாதவ்
எட்ஜ்பாஸ்டன் மற்றும் லார்ட்ஸில் நடந்த இரண்டு டெஸ்டுகளில், இந்திய அணி நிர்வாகம் வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரவீந்திர ஜடேஜா என இரண்டு சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்களுடன் களமிறங்கியது. இருவரும் பர்மிங்காம் டெஸ்டில் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டனர். லார்ட்ஸில், ஜடேஜா தனது பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்ட நிலையில், சுந்தர் இரண்டாவது இன்னிங்ஸில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தினார்.
இருப்பினும், மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்டு ஆடுகளம் 3வது 4வது நாட்களில் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக மாறக்கூடியது. இந்திய அணி நிர்வாகம் இந்த சுழல் ஜோடியுடன் தொடர்வதா, அல்லது இடதுகை சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவை களமிறக்குவதா என்பதை முடிவுசெய்ய வேண்டும்.
ஓல்ட் டிராஃபோர்டு ஆடுகளம் போகப் போக ஸ்பின்னுக்கு நல்ல ஒத்துழைப்பை வழங்கும் என்று அறியப்பட்டுள்ளதால், இந்திய அணி இரண்டு சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்களுக்குப் பதிலாக மற்றும் ஒரு சுழற்பந்து வீச்சு நிபுணரை களமிறங்க வாய்ப்பு உள்ளது.
ரிஷப் பந்த் காயம்
ரிஷப் பந்த் முதல் நாள் விக்கெட் கீப்பிங் செய்யும் போது இடது ஆள்காட்டி விரலில் காயம் ஏற்பட்டது. அவர் இரண்டாவது நாள் ஆட்டத்தில் இருந்து விலகி இருந்தார். அவருக்குப் பதிலாக துருவ் ஜூரெல் களமிறங்கினார். இருப்பினும், துணை கேப்டன் பேட் செய்ய வந்தார், விரலில் வலி இருந்தபோதிலும் 112 பந்துகளில் 74 ரன்கள் எடுத்து ஒரு சிறப்பான இன்னிங்ஸ் விளையாடினார். 193 ரன்கள் என்ற இலக்கை சேஸ் செய்யும்போது, பந்த் முழு உடற்தகுதியுடன் இருப்பதாகத் தெரியவில்லை, மேலும் அவர் பலவீனமாகத் தோன்றினார், ஜோஃப்ரா ஆர்ச்சரால் 7 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அவருக்கு ஏற்பட்ட காயம் எந்த நிலையில் உள்ளது என்பதைப் பற்றி பிசிசிஐ எதுவும் கூறவில்லை. ரிஷப் பந்த் அற்புதமான ஃபார்மில் இருப்பதால், அவர் முழு உடற்தகுதியுடன் மான்செஸ்டர் டெஸ்டுக்குத் தயாராக இருப்பதை உறுதி செய்வது இந்தியாவின் வெற்றி வாய்ப்புக்கு மிக முக்கியமானது. பந்த் இதுவரை 6 இன்னிங்ஸ்களில் இரண்டு சதங்கள் மற்றும் ஒரு அரைசதம் உட்பட 70.83 சராசரியில் 423 ரன்கள் எடுத்துள்ளார்.