- Home
- Sports
- Sports Cricket
- TNPL 2025: நெல்லையை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு சென்றது திண்டுக்கல் டிராகன்ஸ்!
TNPL 2025: நெல்லையை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு சென்றது திண்டுக்கல் டிராகன்ஸ்!
டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி நெல்லை ராயல் கிங்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

TNPL 2025: Dindigul Dragons Beat Nellai Royal Kings
டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் இன்றைய 24வது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி நெல்லை ராயல் கிங்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நெல்லை ராயல் கிங்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் குவித்தது.
நெல்லை ராயல் கிங்ஸ் அதிரடி
திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு எதிராக களமிறங்கிய நெல்லை ராயல் கிங்ஸ், தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்தாலும், மிடில் ஆர்டர் மற்றும் கடைசி கட்ட பேட்டிங்கின் அதிரடியால் சிறப்பான ஸ்கோரை எட்டியது. அணியின் தொடக்க ஆட்டக்காரர் சந்தோஷ் குமார் 20 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கம் கொடுத்தார். எனினும், கேப்டன் அருண் கார்த்திக் 5 ரன்களிலும், அதீஷ் எஸ்.ஆர் 19 ரன்களிலும், பி. நிர்மல் குமார் 16 ரன்களிலும் அவுட்டாகி வெளியேறினர்.
என்.எஸ். ஹரிஷ் 43 ரன்
விக்கெட் கீப்பர் ரித்திக் ஈஸ்வரன் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தது அணிக்கு பின்னடைவாக அமைந்தது. ஆனால், பின்னர் களமிறங்கிய ஆர். சோனு யாதவ் மற்றும் என்.எஸ். ஹரிஷ் ஆகியோர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். சோனு யாதவ் 24 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 39 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். அவருக்கு பக்கபலமாக நின்ற என்.எஸ். ஹரிஷ், வெறும் 20 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் பறக்கவிட்டு 43 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்
முஹம்மது அட்னான் கான் 15 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து தனது பங்களிப்பை அளித்தார். திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் பந்துவீச்சில், ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர். ரவிச்சந்திரன் அஸ்வின் 4 ஓவர்களில் 23 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றி சிக்கனமாக பந்துவீசினார். வருண் சக்கரவர்த்தி 4 ஓவர்களில் 27 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பெரியசாமி 4 ஓவர்களில் 45 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை எடுத்தார்.
அஸ்வின் ஏமாற்றம்
பின்பு 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணி கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் (5), ஷிவம் சிங் (2) ஆகியோரின் விக்கெட்டுகளை விரைவில் இழந்தது. பாபா இந்திரஜித்தும் (15 ரன்) விரைவில் வெளியேறியதால் திண்டுக்கல் அணி 33/3 என பரிதவித்தது. ஆனால் பின்பு ஜோடி சேர்ந்த மான் பாஃப்னா (28 பந்தில் 38), விமல் குமார் (31 பந்தில் 45) ஆகியோர் சிறப்பாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டார்.
திண்டுக்கல் அணி வெற்றி
இறுதியில் ஹன்னி சைனி 14 பந்தில் 3 பவுண்டரி, 3 சிக்சருடன் 37 ரன்கள் விளாசி அணி வெற்றி பெற முக்கிய காரணமாக விளங்கினார். திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 18.4 ஓவர்களில் 6 விக்கெட் இழந்து 180 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் திண்டுக்கல் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.