- Home
- Sports
- Sports Cricket
- டி20 உலகக்கோப்பை: இந்தியா வர மாட்டோம்.. அடம்பிடிக்கும் வங்கதேசம்.. ஐசிசி எடுத்த அதிரடி முடிவு!
டி20 உலகக்கோப்பை: இந்தியா வர மாட்டோம்.. அடம்பிடிக்கும் வங்கதேசம்.. ஐசிசி எடுத்த அதிரடி முடிவு!
வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக கொடுமைகள் தொடர்வதால் KKR அணி வங்கதேச வீரர் முஸ்தாபிசுர் ரஹ்மானை ஐபிஎல் 2026 பட்டியலில் இருந்து நீக்கியது. இதனால் பொங்கியெழுந்த வங்கதேச அரசு தங்கள் நாட்டில் ஐபிஎல் 2026 ஒளிபரப்பை நிறுத்துவதாக அறிவித்தது.

இந்தியா வர வங்கதேச அணி மறுப்பு
இந்தியா-வங்கதேசம் இடையேயான உறவில் ஏற்பட்டுள்ள விரிசல் காரணமாக, பாதுகாப்பு கவலைகளைக் காரணம் காட்டி, 2026 டி20 உலகக் கோப்பை போட்டிகளை இந்தியாவில் விளையாட வங்கதேசம் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த சிக்கலைத் தீர்க்க வங்கதேச கிரிக்கெட் வாரியத்துடன் ஐசிசி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது
வங்கதேசத்துடன் ஐசிசி பேச்சுவார்த்தை
ESPNcricinfo தகவலின்படி, இந்தியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பை போட்டிகளில் இருந்து விலகும் முடிவை வங்கதேசம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், ஏற்கனவே உள்ள அட்டவணைப்படி தங்கள் குழுப் போட்டிகளில் விளையாட வேண்டும் என்றும் ஐசிசி கோரிக்கை வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வங்கதேசம் அடம்பிடிப்பது ஏன்?
வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகள் தொடர்வதால் பிசிசிஐ உத்தரவுப்படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, வங்கதேச வீரர் முஸ்தாபிசுர் ரஹ்மானை தங்கள் ஐபிஎல் 2026 பட்டியலில் இருந்து நீக்கியது.
இதனால் பொங்கியெழுந்த வங்கதேச அரசு தங்கள் நாட்டில் ஐபிஎல் 2026 ஒளிபரப்பை நிறுத்துவதாக அறிவித்தது. மேலும் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு கவலைகளைக் காரணம் காட்டி, 2026 டி20 உலகக் கோப்பை போட்டிகளை இந்தியாவிலிருந்து மாற்று இடங்களுக்கு மாற்றக் கோரி ஐசிசி-யிடம் கோரிக்கையும் வைத்துள்ளது.
டி20 உலகக் கோப்பையில் வங்கதேச போட்டிகள் அட்டவணை
இப்போது ஐசசி பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், இதை வங்கதேச கிரிக்கெட் வாரியம் ஏற்றுக்கொள்ளுமா? என்பது உறுதியாக தெரியவில்லை. இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறும் 2026 டி20 உலகக் கோப்பை பிப்ரவரி 7-ம் தேதி தொடங்கி மார்ச் 8-ம் தேதி முடிவடைகிறது. வங்கதேசம் தனது முதல் மூன்று குரூப் சி ஆட்டங்களை கொல்கத்தாவில் விளையாட திட்டமிடப்பட்டுள்ளது.
பிப்ரவரி 7ம் தேதி வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக விளையாடுகிறது. பிப்ரவரி 9ம் தேதி இத்தாலிக்கு எதிராக விளையாடுகிறது. மற்றும் பிப்ரவரி 14ம் தேதி இங்கிலாந்துக்கு எதிராக விளையாடுகிறது. அதன் கடைசி குழு ஆட்டம் நேபாளத்திற்கு எதிராக மும்பையில் பிப்ரவரி 17 அன்று நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
