- Home
- Sports
- Sports Cricket
- ஐபிஎல் 2026 ஒளிபரப்புக்கு வங்கதேசம் அதிரடி தடை.. 'எங்கள் வீரரைத் தொட்டால்'.. இந்தியாவுக்கு பதிலடி!
ஐபிஎல் 2026 ஒளிபரப்புக்கு வங்கதேசம் அதிரடி தடை.. 'எங்கள் வீரரைத் தொட்டால்'.. இந்தியாவுக்கு பதிலடி!
Bangladesh Bans IPL 2026 Broadcast: ஐபிஎல் 2026 ஒளிபரப்புக்கு வங்கதேசம் அதிரடியாக தடை விதித்துள்ளது. இதற்கு என்ன காரணம்? என்பது குறித்து இந்த செய்தியில் முழுமையாக பார்க்கலாம்.

ஐபிஎல்-வங்கதேச வீரர் விவகாரம்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்து வங்கதேச வீரர் முஸ்தாபிசுர் ரஹ்மானை விடுவிக்குமாறு பிசிசிஐ உத்தரவிட்டதை தொடர்ந்து வங்கதேசத்தில் ஐபிஎல் 2026 போட்டிகளின் ஒளிபரப்பை நிறுத்துவதாக வங்கதேச அரசு தெரிவித்துள்ளது. வங்கதேத்தில் அண்மை காலமாக இந்துகள் மீதான தாக்குதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்து கோயில்களும் இடிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
முஸ்தாபிசுர் ரஹ்மான் கேகேஆர் அணியில் இருந்து நீக்கம்
இதனை தொடர்ந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்து வங்கதேச வீரர் முஸ்தாபிசுர் ரஹ்மானை நீக்க வேண்டும் என அந்த அணியின் உரிமையாளரும், நடிகருமான ஷாருக்கானுக்கும், பிசிசிஐக்கும் பாஜக, சிவசேனா உள்ளிட்ட கட்சிகளும், இந்து அமைப்புகளும் அழுத்தம் கொடுத்தன.
இதன்பிறகு பிசிசிஐயின் உத்தரவுக்கு இணங்க, முஸ்தாபிசுர் ரஹ்மானை தங்கள் ஐபிஎல் 2026 அணியில் இருந்து நீக்கியதாக KKR அறிவித்ததது.
ஐபிஎல் ஒளிபரப்பு நிறுத்தம்
இந்த நிலையில் தான் வங்கதேசத்தில் ஐபிஎல் 2026 போட்டிகளின் ஒளிபரப்பை நிறுத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்நாட்டின் பத்திரிகை தகவல் துறை வெளியிட்ட அறிக்கையில், ''மறு அறிவிப்பு வரும் வரை, அனைத்து ஐபிஎல் போட்டிகள் ஒளிபரப்பு மற்றும் அது தொடர்பான நிகழ்ச்சிகளின் ஒளிபரப்பு வங்கதேசத்தில் நிறுத்தப்படும் என்று தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் அதிகாரப்பூர்வ கடிதம் மூலம் தெரிவித்துள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.
டி20 உலகக் கோப்பையை இடம் மாற்ற வேண்டும்
முன்னதாக, வீரர்களின் பாதுகாப்பு கவலைகளைக் காரணம் காட்டி, 2026 ஆண்கள் டி20 உலகக் கோப்பை போட்டிகளை இந்தியாவிலிருந்து மாற்று இடங்களுக்கு மாற்றுமாறு ஐசிசிக்கு வங்கதேச கிரிக்கெட் வாரியம் கோரிக்கை விடுத்துள்ளது. வங்கதேச வீரர் ஐபிஎல்லில் விளையாடக்கூடாது என்பது குறித்து பிசிசிஐ எடுத்தது சரியான முடிவு என இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
வங்கதேசத்தில் நடந்தது தவறு
இது தொடர்பாக பேசிய ஹர்பஜன் சிங், "கடந்த சில நாட்களில் நடந்த பல்வேறு நிகழ்வுகளால், வங்கதேசம் இந்தியாவுக்கு வர விரும்பவில்லை. வங்கதேசத்தில் நடந்தது தவறு. அவர்களின் கோரிக்கை குறித்து ஐசிசி முடிவு எடுக்க வேண்டும்.
நாங்கள் அனைவரையும் இந்தியாவுக்கு வரவேற்கிறோம். ஆனால் அவர்கள் இங்கு வர விரும்புகிறார்களா இல்லையா என்பது அவர்களின் விருப்பம்'' என்று தெரிவித்துள்ளார். ஐபிஎல் போட்டிகள் மார்ச் 26ம் தேதி முதல் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

