- Home
- Sports
- Sports Cricket
- இந்திய அணியை சரமாரியாக விமர்சித்த டி வில்லியர்ஸ்..! பாக். அமைச்சருக்கு ஜால்ரா.. ரசிகர்கள் ஷாக்!
இந்திய அணியை சரமாரியாக விமர்சித்த டி வில்லியர்ஸ்..! பாக். அமைச்சருக்கு ஜால்ரா.. ரசிகர்கள் ஷாக்!
பாகிஸ்தான் அமைச்சரிடம் இருந்து இந்திய அணி வீரர்கள் ஆசிய கோப்பையை வாங்காமல் இருந்தது தவறு என்று டி வில்லியர்ஸ் விமர்சித்துள்ளார். கிரிக்கெட்டில் இந்தியா மூலம் அதிகம் சம்பாதித்து விட்டு இப்போது குறை சொல்லும் அவருக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன.

ஆசிய கோப்பை சர்ச்சை
ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை பந்தாடி 9வது முறையாக கோப்பையை வென்றது. இந்த போட்டி முடிந்த பிறகு இந்திய வீரர்கள் பாகிஸ்தான் உள்துறை அமைச்சரும், ஆசிய கிரிகெட் கவுன்சில் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவருமான மொஹ்சின் நக்வியிடம் இருந்து கோப்பையை ஏற்க மறுத்துவிட்டனர். அதே வேளையில் இந்திய அணி மற்றவர்களிடம் இருந்து கோப்பை வாங்க விருப்பம் தெரிவித்து இருந்தது.
மொஹ்சின் நக்வியின் செயல்
இதனால் ஆத்திரம் அடைந்த மொஹ்சின் நக்வி கோப்பையை கையுடன் எடுத்துச் சென்றார். இதற்கு எதிர்ப்பு எழுந்த நிலையில், ஆசிய கோப்பை ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் வாரியத்திடம் மொஹ்சின் நக்வி ஒப்படைத்தார். பாகிஸ்தான் அமைச்சரின் செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், மொஹ்சின் நக்வியிடம் இருந்து இந்திய அணி கோப்பையை வாங்க மறுத்தது தவறு என்று தென்னாப்பிரிக்கா முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்திய அணி மீது பாய்ந்த டி வில்லியர்ஸ்
இது தொடர்பாக பேசிய டி வில்லியர்ஸ், ''கோப்பையை யார் வழங்குகிறார்கள் என்பதில் இந்திய அணி மகிழ்ச்சியடையவில்லை. அது விளையாட்டுக்கு உரியது என்று நான் நினைக்கவில்லை. விளையாட்டு அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்க வேண்டும்.
விளையாட்டு என்பது ஒரு விஷயம். அது எதற்காக இருக்கிறதோ அதற்காகவே கொண்டாடப்பட வேண்டும். இந்திய அணியின் செயல்களை பார்ப்பது மிகவும் வருத்தமளிக்கிறது. ஆனால் எதிர்காலத்தில் அவர்கள் இந்த விஷயங்களைச் சரிசெய்வார்கள் என்று நம்புகிறேன்'' என்று கூறியுள்ளார்.
இந்தியர்களுக்கு நெருக்கமான டி வில்லியர்ஸ்
கிரிக்கெட்டில் தனித்துவமான ஷாட்களை அடிப்பதால் 'மிஸ்டர் 360' என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் டி வில்லியர்ஸ், ஐபிஎல்லில் ஆர்சிபி அணிக்காக நீண்ட காலம் விளையாடியுள்ளார். இந்தியா எனது 2வது தாய் நாடு என்று டி வில்லியர்ஸ் எப்போதும் அடிக்கடி சொல்வார். அதேபோல் இந்திய ரசிகர்களும் டி வில்லியர்ஸை நமது நாட்டின் வீரருக்கு உரிய மரியாதையை கொடுத்தனர். அவருக்கு இந்தியாவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது.
பதிலடி கொடுக்கும் ரசிகர்கள்
இந்த நிலையில், அவர் பாகிஸ்தான் வீரர்கள் சிலர் களத்தில் இந்திய ராணுவத்தை அவமதிப்பது போல் செய்த கேவலமான செயலை கண்டிக்காமல், இந்திய அணியை விமர்சித்து இருப்பது ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
''ஒன்று டி வில்லியர்ஸ் இரண்டு தரப்பின் தவறுகளையும் பேசி இருக்க வேண்டும். இல்லாவிடில் இந்த விஷயத்தை கருத்தே தெரிவித்து இருக்க கூடாது. இந்தியாவின் ஐபிஎல் மூலம் கோடி கோடியாக பணம் சம்பாதித்த டி வில்லியர்ஸ் இப்போது இந்திய அணிக்கு எதிராக பேசுவது தவறு'' என்று இந்திய ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.