- Home
- Sports
- Sports Cricket
- Akash Deep: தந்தை, சகோதரர் மறைவு! சகோதரிக்கு புற்றுநோய்! மனதில் வலியுடன் சாதித்த ஆகாஷ் தீப்!
Akash Deep: தந்தை, சகோதரர் மறைவு! சகோதரிக்கு புற்றுநோய்! மனதில் வலியுடன் சாதித்த ஆகாஷ் தீப்!
தந்தை, சகோதரர் மறைவு சகோதரிக்கு புற்றுநோய் என மனதில் வலியுடன் விளையாடி மேட்ச் வின்னராக ஜொலித்துள்ளார் ஆகாஷ் தீப். அவரது பயணம் மற்றவர்களுக்கு உத்வேகமாக அமைந்துள்ளது.

Akash Deep AChieved Despite Difficult Family Circumstances
பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 337 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 2வது இன்னிங்சில் 608 என்ற இமாலய இலக்குடன் ஆடிய இங்கிலாந்து அணி 68 ஓவரில் 271 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணி இமாலய வெற்றி பெற்றதுடன் பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் முதன் முறையாக வெற்றியை எட்டியுள்ளது.
மேட்ச் வின்னர் ஆகாஷ் தீப்
இந்திய அணியின் வெற்றிக்கு இரட்டை சதம் அடித்த சுப்மன் கில், 7 விக்கெட் வீழ்த்திய முகமது சிராஜ் ஒருபக்கம் இருந்தாலும் மறுபக்கம் ஆகாஷ் தீப் இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து மொத்தம் 10 விக்கெட் வீழ்த்தி வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். ஆகாஷ் தீப் முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகளும், 2 இன்னிங்சில் 6 விக்கெட்டுகளும் வீழ்த்தினார். அவர் ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்டுகளும், ஒரு டெஸ்ட்டில் 10 விக்கெட்டுகளும் வீழ்த்துவது இதுவே முதன் முறையாகும்.
இங்கிலாந்து மண்ணில் பெரும் சாதனை
அதுவும் இங்கிலாந்து மண்ணில் களம் கண்ட முதல் டெஸ்ட் போட்டியிலேயே 10 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆகாஷ் தீப் டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்தின் முதல் ஐந்து பேட்ஸ்மேன்களில் நான்கு பேரை (பென் டக்கெட், ஜோ ரூட், ஆலி போப் மற்றும் ஹாரி புரூக்) ஒரே இன்னிங்ஸில் அவுட்டாக்கிய முதல் பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார். மேலும் இங்கிலாந்து மண்ணில் சிற்ந்த பந்துவீச்சை பதிவு செய்த இந்திய பந்துவீச்சாளர் (187/10) என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
எனது சகோதரிக்கு அர்ப்பணிக்கிறேன்
இந்திய அணியின் வெற்றிக்கு பிறகு பேசிய ஆகாஷ் தீப் 10 விக்கெட் எடுத்த தனது சிறந்த செயல்பாட்டை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள தனது சகோதரிக்கு அர்ப்பணிப்பதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், ''எனது சகோதரி புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். நான் இந்திய அணியின் வெற்றியையும், 10 விக்கெட்டுகளையும் அவருக்கு அர்ப்பணிக்கிறேன். அவர் இப்போது புற்றுநோயில் இருந்து குணமடைந்து வருகிறாள். நான் அவருக்காக விளையாடினேன்'' என்று தெரிவித்துள்ளார்.
தந்தை, சகோதரர் ஒரே ஆண்டில் உயிரிழப்பு
ஆகாஷ் தீப் பீகார் மாநிலம் ரோஹ்தாஸ் மாவட்டத்தில் உள்ள பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர். சாதாரண குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர். அவருடைய தந்தையும், சகோதரரும் ஒரே ஆண்டில் உயிரிழந்தனர்.
இதனால் பெரும் சோகத்தில் ஆழந்த ஆகாஷ் தீப் தந்தையின் கனவை நிறைவேற்றும்விதமாக கிரிக்கெட்டில் சாதிக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு கூறியிருந்தார். தற்போது அவருடைய சகோதரிக்கும் புற்றுநோய் இருக்கும் நிலையில், மனதில் வலியுடன் விளையாடி உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை பேச வைத்துள்ளார்.
ஆகாஷ் தீப்பின் சகோதரிக்கு புற்றுநோய்
தனது சகோதரனின் சாதனை குற்த்து ஆகாஷ் தீப்பின் சகோதரி அகண்ட ஜோதி சிங் கூறுகையில், ''சகோதரர் (ஆகாஷ் தீப்) நேரலைத் தொலைக்காட்சியில் தன்னுடைய புற்றுநோய் குறித்து வெளிப்படுத்தியதை அறிந்து திகைத்துப் போனேன். ஆகாஷ் இப்படி எதையாவது சொல்வார் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
அவர் உணர்ச்சிவசப்பட்டு எனக்காக அதை அர்ப்பணித்த விதம் எங்கள் குடும்பத்தின் மீதும், என் மீதும் அவருக்கு எவ்வளவு அன்பு இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. வீட்டில் உள்ள சூழ்நிலையைப் பொருட்படுத்தாமல் அவர் இந்தளவு சாதித்துள்ளது பெரிய விஷயம். "எனக்கு மூன்றாவது நிலை புற்றுநோய் உள்ளது. ஆறு மாதங்களுக்கு சிகிச்சை பெற வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்'' என்றார்.